Published:Updated:

`தயவுசெய்து அரசியலாக்காதீர்கள்... பிணப்பைகள்தான் வேண்டுமா?!' - ட்ரம்ப் மிரட்டலுக்கு WHO பதில்

WHO முதன்மை அதிகாரி டெட்ராஸ்
WHO முதன்மை அதிகாரி டெட்ராஸ்

ட்ரம்ப், `உலக சுகாதார அமைப்புக்கு நாங்கள் பெருமளவில் நிதி வழங்கி வருகிறோம். தற்போது அதை நிறுத்த ஆலோசனை நடத்திவருகிறோம். அது, சீனாவை மையமாகக்கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது’ என்றார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. பாதிப்புகள் பெரும் உச்சத்தைத் தொட்ட சில நாடுகளில் சிறிய முன்னேற்றம் காணப்பட்டாலும், அமெரிக்காவில் அதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேவருகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே பெரும் வார்த்தைப் போர் நடந்துவருகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆரம்பம் முதலே ட்ரம்ப், கொரோனா வைரஸை `சீனா வைரஸ்’ எனக் குறிப்பிட்டுவந்தார். அதற்கு, சீனா கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தது. இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்தை கடுமையாகச் சாடியிருந்தார். உலக சுகாதார நிறுவனத்துக்கு பெருமளவு நிதியை அமெரிக்கா வழங்குகிறது. ஆனால் அந்த நிறுவனமோ, சீனாவை மையமாகக் கொண்டு செயல்படுகிறதோ என சந்தேகம் இருக்கிறது என்றார். மேலும், யாருக்கு அதிக முக்கியம் தர வேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

ட்ரம்ப், `உலக சுகாதார அமைப்புக்கு நாங்கள் பெருமளவில் நிதி வழங்கிவருகிறோம். தற்போது அதை நிறுத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். உலக சுகாதார அமைப்பு, கொரோனா பற்றிய தகவல்களை முன்னரே அறிந்திருக்கும். அப்படி அறிந்தும் வைரஸ் பரவுவதன் விளைவுகளை அவர்கள் முறையாக எச்சரிக்கவில்லை. அது, சீனாவை மையமாகக்கொண்டு, அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

சில காரணங்களால், நாங்கள்தான் உலக சுகாதார அமைப்புக்கு அதிக அளவில் நிதி வழங்கிவருகிறோம். தற்போது, அதன் பெரும் பகுதியை நிறுத்த ஆலோசித்துவருகிறோம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு இல்லை, எங்களின் ஆலோசனை. சீனாவில் முதல் வைரஸ் தொற்று உறுதியானதும், சீனாவுக்கான எங்கள் நாட்டு எல்லைகளை மூட நாங்கள் உலக சுகாதார அமைப்பினரிடம் ஆலோசனை கேட்டோம். ஆனால், அவர்கள் எல்லைகளை மூடத் தேவையில்லை எனத் தவறான ஆலோசனை மட்டுமே வழங்கினர். நல்லவேளை அவர்களின் கருத்தை நான் நிராகரித்துவிட்டேன். அவர்கள் ஏன் எங்களுக்கு இதுபோன்ற தவறான பரிந்துரையை வழங்கினார்கள்?” என்று கடுமையாகப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ், ட்ரம்ப்பின் பேச்சுக்குப் பதிலளித்தார். இதைத் தேவையில்லாமல் அரசியலாக்க வேண்டாம் என அவர் கோரிக்கை வைத்தார். அவர் பேசுகையில், ``தயவுசெய்து இந்த வைரஸ் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள். இது, தேசிய அளவியில் உள்ள வேறுபாடுகளைக் காட்டுவதாக உள்ளது. இன்னும் பல பிணப்பைகள்தான் வேண்டும் என்றால் தாராளமாக அரசியல் செய்யுங்கள்” என்றார்.

டெட்ரோஸ்
டெட்ரோஸ்

தொடர்ந்து அவர், ``நான் சொல்ல வரும் சிறிய மெசேஜ் என்னவென்றால், கோவிட் வைரஸ் விவகாரத்தில் தயவுசெய்து அரசியலை தனிமைப்படுத்துங்கள். மிகக் கொடுமையான இந்த வைரஸை வெல்ல உங்கள் நாட்டின் ஒற்றுமை மிக முக்கியம்” என்றார். தொடர்ந்து, ``அமெரிக்காவும் சீனாவும் ஒற்றுமையாக இந்த வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட வேண்டும். நாங்கள் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்’' என்றார். மேலும், அமெரிக்கா தனது நிதியை நிறுத்தாது என நம்புவதாகவும் தெரிவித்தார்.

`அவர்களுக்கான நிதியை நிறுத்தவுள்ளோம்’ - WHO- வை மிரட்டும் அதிபர் ட்ரம்ப் #Coronavirus

கொரோனா வைரஸ் முதல் முதலாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அங்கு நிலைமை சீரடைந்து விட்டது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் உலக சுகாதார நிறுவனம் அதன் வீரியம் தொடர்பாகத் தொடர்ந்து செய்தி வெளியிட்டுவந்தது. கொரோனா ஒரு பெருந்தொற்று எனவும், இது ஹெல்த் எமர்ஜென்ஸி எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள சீனாவுடனும் இணைந்து செயல்படுவது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு