Published:Updated:

கொரோனாவைத் திறம்பட சமாளித்தும் தைவானை உலக நாடுகள் புறக்கணிக்கக் காரணம் என்ன?

ஒற்றைக் கட்சி மார்க்சிய லெனினிய சோசியலிச குடியரசான சீனாவின் பிடியிலிருந்து விலகி, தனி அடையாளத்தை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக நாடு தைவான். கிழக்கு ஆசியாவில், சீனாவிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில், 35 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் தீவு நாடு.

கொடிய கொரோனா நோய்த் தாக்குதலில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து என வல்லரசுகள் எல்லாம் வீழ்ந்துகொண்டிருக்க, தன் அங்கீகாரத்துக்காகத் தனித்துப் போராடிக்கொண்டிருக்கும் தைவான் வென்றுகொண்டிருக்கிறது. அந்தத் தீவுப் பிரதேசத்தின் வெற்றி உலகுக்கான பாடம்.

ஆனால், அந்த நாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கவோ, அந்நாட்டின் முயற்சிகளில், வெற்றிகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவோ, அந்நாட்டுக்கு உதவவோ, அதன் எச்சரிக்கைகளைக் கேட்டுக்கொள்ளவோ உலகம் தயாராக இல்லை. ஒரே காரணம் சீனா. சீனா - தைவான் இடையேயான பிரச்னை, அந்த இருநாடுகளைத் தாண்டி, தற்போது கொரோனா எனும் கொடிய நோயின் பிடியில் சிக்கியிருக்கும் உலக நாடுகள் எல்லாவற்றையும் பாதித்திருக்கிறது. காரணம் உலக சுகாதார நிறுவனம் (WHO) தைவானுக்குக் காட்டும் பாராமுகம். WHO என்ன செய்தது அல்லது என்ன செய்யவில்லை... அப்படி சீனாவுக்கும் தைவானுக்கும் என்னதான் பிரச்னை?

வழக்கம்போல் இரு நாடுகளின் வரலாற்று சிறு குறிப்பிலிருந்து கட்டுரையைத் தொடங்குவோம்.....

சீனா - தைவான்
சீனா - தைவான்

ஒற்றைக் கட்சி மார்க்சிய லெனினிய சோசியலிச குடியரசான சீனாவின் பிடியிலிருந்து விலகி, தனி அடையாளத்தை நிலைநிறுத்தப் போராடிக்கொண்டிருக்கும் ஜனநாயக நாடு தைவான். கிழக்கு ஆசியாவில், சீனாவிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில், 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் தீவு நாடு. தைவானின் மக்கள் தொகை 23 மில்லியன் (2.3 கோடி).

தைவானிஸ் ஆதிக்குடிகள் அந்தத் தீவில் குடியேறியது சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பு, ஆனால் சீனாவுடனான தைவானின் இந்தப் போராட்டக் கதை ஆரம்பித்தது 17-ம் நூற்றாண்டில். அப்போது, டச்சு காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த தைவான் தீவுக்கு, சீனா மெயின்லேண்ட் பகுதியிலிருந்து ஹான் இன மக்கள் குடியேறினர். அப்போதுதான் வாழ்வியல் சார்ந்து சீனாவும், தைவானும் ஒற்றுமை கண்டது.

தைவான் மக்கள்தொகையில் 95% தற்போது ஹான் இனத்தவர்தாம். குய்ங் (Qing) வம்சத்தின் ஆட்சியின்போது தைவான் சீனாவின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டில் இப்பகுதி ஜப்பான் பேரரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

தைவான்
தைவான்

நிற்க. 19-ம் நூற்றாண்டுக்குப் பிறகான தைவானின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள, நாம் கொஞ்சம் சீனாவின் வரலாற்றையும் எட்டிப்பார்க்க வேண்டியிருக்கிறது. தைவானை உள்ளடக்கிய சீனப் பிரதேசத்தில் 1911-ம் ஆண்டு குய்ங் (Qing) வம்சத்தின் இரண்டரை நூற்றாண்டு கால ஆட்சியையும், சீனாவில் சுமார் 4,000 வருடங்களாக இருந்த மன்னராட்சி முறையையும் முடிவுக்குக் கொண்டு வந்து, ரிபப்லிக் ஆப் சீனா (Republic of china) எனும் சீன குடியரசு நாடு உருவானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1912-ம் ஆண்டு நடந்த தேர்தலில், (Kuomintang -KMT) க்யூமிண்டாங் எனும் கட்சி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், ஆட்சி நிலைக்கவில்லை, அக்கட்சித் தலைவர், அதிபர் சோங் கொல்லப்பட்டார். அங்கு ராணுவ ஆட்சியையும், மீண்டும் மன்னராட்சியையும் நிறுவ முயன்றுகொண்டிருந்தனர் சிலர். சிறிது சிறிதாகச் சிதறியது சீனா. க்யூமிண்டாங் கட்சி (Kuomintang -KMT), சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Communist party of China- CPC) இணைந்து ஒரு ஆட்சியை நிறுவ முயன்றது. சில வருடங்களில் இவ்விரு கட்சிகளும் பிரிய நேர்ந்தது. ஒருபுறம் இந்தக் கட்சிகளின் பிரிவு, மறுபுறம் ராணுவம், ஆயுதக் குழுக்கள், நிலப்பிரபுத்துவ சக்திகள் எனச் சீனாவில் பல முனைப் போர் தொடர்ந்தது, இது போதாதென, 1937-ம் ஆண்டு சீனாவில் நுழைந்தது ஜப்பான். சீனா உள்நாட்டுச் சண்டைகளைத் தற்காலிகமாக விடுத்து ஜப்பானை எதிர்கொண்டது. 1946-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜப்பான் தோல்வியுற்றுப் பின்வாங்க, க்யூமிண்டாங் கட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான உள்நாட்டுப் போர் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. போரின் முடிவு, 1949-ம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி (Communist party of China- CPC), People's Republic of China எனும் தற்போதைய ஒற்றைக் கட்சி சீன மக்கள் குடியரசை நிறுவியது.

சீனா
சீனா
சீனா, இத்தாலி, ஸ்பெயின் முதல் அமெரிக்கா வரை... அந்த நாடுகளில் லாக் டவுன் நிலை என்ன?

க்யூமிண்டாங் கட்சியின்- ரிபப்ளிக் ஆப் சீனா (Republic of china) தைவான் மற்றும் அதைச் சார்ந்த சில தீவுகளில் மட்டும் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொண்டது.

இதைத் தொடர்ந்து 1990-களின் தொடக்கத்தில், ராணுவ சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சி முறையிலிருந்து பலகட்சி ஜனநாயக நாடாக மாறியது தைவான்.

இருப்பினும் இன்றளவும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என அந்த தேசத்தின் மீது உரிமை கோருகிறது சீனா. `இல்லை நாங்கள் தனி நாடு’ என விலகி நிற்கிறது தைவான். இது சீனாவின் ஒரு பகுதியா அல்லது தனி நாடா என்ற சர்ச்சைகளுக்குள் இன்றளவும் சிக்கியிருக்கிறது தைவான். விளைவு தைவான் தனித்திருக்கிறது. சீனாவிடம் பணிய மறுப்பதன் காரணமாகவும், சீனாவின் தலையீட்டின் பேரிலும் உலக அரங்கிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது தைவான்.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட எந்த சர்வதேச அமைப்புகளும் தைவானை ஒரு தனிநாடு என அங்கீகரிக்க மறுக்கின்றன. சீனா உறுப்பினராக அல்லாத சில சர்வதேச அமைப்புகளில் மட்டுமே தைவான் அங்கம் வகிக்கிறது. ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் தைவான் என்ற பெயரில் இல்லாமல் சைனீஸ் தைப்பேய் (Chinese Taipei) எனும் பெயரில்தான் பங்கேற்கிறது. சர்வதேச நிகழ்வுகளில் தைவான் தனிக்கொடியோ, தேசியகீதமோ பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அத்தனைக்கும் காரணம் சீனாவின் சர்வதேச பலம். தைவான் விஷயத்தில் ஐ.நா உட்பட அது சர்வதேச அளவில் கொடுக்கும் அழுத்தம்.

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்படுகிறது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. கொரோனா வைரஸ் ஒரு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என டிசம்பர் மாதமே தைவான் எச்சரித்தும் WHO அதைக் கண்டுகொள்ளவில்லை.

ஒருவேளை அப்போதே WHO சுதாரித்திருந்தால், நோய் முதலில் கண்டறியப்பட்ட சீனாவிலிருந்து பிற நாடுகளுக்குத் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தியிருக்கலாம். தைவான் இந்த நோயை அவ்வாறுதான் கட்டுப்படுத்தியிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சலுகைகள்... சிறப்பான செயல்பாடுகளால் கொரோனாவை வென்ற தைவான்!

ஆனால் நோய் கண்டறியப்பட்டு ஒரு மாதம் கழித்தே உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது WHO. இது மிகவும் காலம் கடந்த நடவடிக்கையே என்று நாம் இப்போது உணர்கிறோம். சீனாவின் வர்த்தக நலனைக் கருத்தில்கொண்டே WHO இப்படிச் செய்ததாக விமர்சிக்கப்படுகிறது. அதற்கும் காரணம் இருக்கின்றது.

சீனா எனும் ஒரு தனிப்பட்ட நாட்டின் அரசியல் நலனுக்காக ஐ.நா போன்ற ஒரு சர்வதேச அமைப்பு, சுமார் 23 மில்லியன் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தைவானை வெளியே நிறுத்தியிருப்பது எவ்வகையில் நியாயம் என்பதே, உலக நாடுகளையும், ஐ.நாவையும் நோக்கி தைவான் எழுப்பும் கேள்வி.

Taiwan- WHO
Taiwan- WHO
www.thelocal.ch

ஆனால், இந்தக் கேள்வியைக் கூட யாரும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்பதே இன்றைய நிலவரம். 2009-லிருந்து 2016 வரை WHO நடத்தும் மீட்டிங்கில், நிகழ்வுகளில் தைவான் ஒரு பார்வையாளராகக் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அனுமதியைச் சீனாவின் அழுத்தத்தின் பெயரில் திரும்பப் பெற்றது உலக சுகாதார நிறுவனம். கடந்த மூன்று ஆண்டுகளாக WHO நிகழ்வுகளில் பங்கேற்கக் கோரிக்கை விடுத்தும், தைவான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. தைவான் அதிகாரிகள் மட்டுமல்ல, தைவானின் பத்திரிகையாளர்களுக்குக் கூட அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இவ்விஷயத்தில் கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவு அளித்தும் WHO அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தற்போதைய கொரோனா அச்சத்தால் தைவானை இணைத்துக்கொள்ள ஆதரவு பெருகியிருக்கிறது. இம்முறை தைவானில் பிரிந்துகிடந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கூட இவ்விஷயத்தில் ஒன்றிணைந்திருக்கிறது. ஆனால், தைவான் மக்களின் நலனில் எங்களைவிட யாருக்கும் பெரிய அக்கறை இருக்க முடியாது என்று கூலாகப் பதிலளிக்கிறது சீனா.

டாக்டர் ப்ருஸ் அயல்வார்ட்
டாக்டர் ப்ருஸ் அயல்வார்ட்
www.taipeitimes.com

சமீபத்தில் RTHK எனும் ஹாங்காங் ஊடகத்துக்கு வீடியோ கால் வழியாகப் பேட்டியளித்த, உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் ப்ருஸ் அயல்வார்ட் செய்த காரியம் உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பத்திரிகையாளர் தைவான் பற்றிக் கேள்வியெழுப்பியதும், "கேள்வி சரியாகக் கேட்கவில்லை, சீனாவைப் பற்றி ஏற்கெனவே பேசிவிட்டோம்" என மழுப்பலாகப் பதில் சொல்லி இணைப்பைத் துண்டிக்கிறார் டாக்டர் ப்ருஸ். பின்னர் ப்ரூஸ் பற்றிய தகவல்களை தன்னுடைய இணையதளத்திலிருந்து அழித்து, அவரிடமிருந்து சற்று விலகிக்கொண்டது உலக சுகாதார நிறுவனம். ஒரு சர்வதேச அமைப்பு இத்தனை கோடி மக்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை எனில், அந்த அமைப்பின் நோக்கம் என்ன என்று அவரின் அலட்சியப் போக்கைப் பலர் விமர்சித்து வருகிறார்கள்.

WHO ஒருவேளை தைவானின் எச்சரிக்கையை மதித்திருந்தால் இந்தப் பெரும் ஆபத்தைத் தவிர்த்திருக்கக் கூடும், அதுமட்டுமன்றி தைவான் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், WHO முன்னெடுப்பில் தொடர்ந்து நடைபெறும் உலக நாடுகளின் சந்திப்பில் தைவான் பங்கேற்றுப் பிற நாடுகளை வழிநடத்தியிருக்கக் கூடும். உலக நாடுகளிடம் இருந்து தைவானுக்கும் கூடுதல் உதவி கிடைத்திருக்கக் கூடும். ஆனால் இவை எதுவும் நிகழவில்லை.

Corona
Corona

இருப்பினும், இவற்றையெல்லாம் பெரும் திடத்தோடு, சரியான திட்டத்தோடு சமாளித்து வருகிறது தைவான். உலகம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் தருணத்திலும், ஒற்றுமையின்றி, உலக நாடுகள் இதில் அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றன.

இதன்வழி நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு செய்தி, இன்று இந்த நோய் காரணமாக உலகம் முழுக்க மரணித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள், ஆனால் உயிரைக்கொல்வது வைரஸ் மட்டுமல்ல அரசியலும்தான். வைரஸ் மதம், இனம், நாடு, பணம், பதவி எதையும் பார்ப்பதில்லை. பிரிட்டிஷ் அரசி முதல் கனடா பிரதமர் வரை பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள் எனும்போது மனிதம் மட்டுமே நம்மைக் காக்கும் எனத் தனிநபர்களாக நாம் புரிந்துகொள்வது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு