Published:Updated:

இந்திய கோவேக்சினுக்கு மறுப்பு, சீனத் தடுப்பூசிக்கு அனுமதி... அநீதி இழைக்கிறதா உலக சுகாதார நிறுவனம்?

COVAXIN | கோவேக்சின்

பாரத் பயோடெக் நிறுவனம் மே மாதத்தில் கோவேக்சினுக்கு அங்கீகாரம் வாங்கும் தன் விருப்பத்தைத் தெரிவித்தது. ஜூலை 9-ம் தேதி முறைப்படி எல்லா ஆவணங்களுடனும் விண்ணப்பம் செய்தது.

இந்திய கோவேக்சினுக்கு மறுப்பு, சீனத் தடுப்பூசிக்கு அனுமதி... அநீதி இழைக்கிறதா உலக சுகாதார நிறுவனம்?

பாரத் பயோடெக் நிறுவனம் மே மாதத்தில் கோவேக்சினுக்கு அங்கீகாரம் வாங்கும் தன் விருப்பத்தைத் தெரிவித்தது. ஜூலை 9-ம் தேதி முறைப்படி எல்லா ஆவணங்களுடனும் விண்ணப்பம் செய்தது.

Published:Updated:
COVAXIN | கோவேக்சின்
'நாம் மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது...'

அக்டோபர் 29-ம் தேதி கார்த்திக் சேத் என்பவர் போட்ட பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா அமர்வு இப்படிப் பதற்றத்துடன் கூறியது. இந்தியாவின் சுதேசித் தயாரிப்பு என்ற பெருமிதத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு இன்னமும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால், இந்தத் தடுப்பூசியை இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட பலர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை.

"கோவேக்சின் போட்டுக்கொண்ட எல்லோரையும் தங்களின் சொந்த ரிஸ்க்கில் திரும்பவும் கோவிஷீல்டு போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்" என்பதே இந்த வழக்கு. "கொரோனா தடுப்பூசி போடுவதற்கு என்று ஒரு விதிமுறை இருக்கிறது. அதில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. கோவேக்சினுக்கு அங்கீகாரம் தருவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் பரிசீலனை செய்துவருகிறது. அங்கீகாரம் தந்துவிட்டால் பிரச்னை இல்லை. அதுவரை காத்திருப்போம்" என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீனாவுக்கு அடுத்து உலகிலேயே 100 கோடி தடுப்பூசிகள் போட்ட இரண்டாவது நாடு ஆகியிருக்கிறது இந்தியா. ஜனவரி 16-ம் தேதி தொடங்கி, வெறும் 279 நாள்களில் இதைச் சாதித்திருக்கிறோம். ஆனால், இதில் பெருமளவு போடப்பட்டது கோவிஷீல்டு தடுப்பூசிதான். இது பிரிட்டனில் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியா பயன்படுத்தும் இன்னொரு தடுப்பூசியான கோவேக்சின், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. பிரதமர் மோடியின் 'சுயசார்பு இந்தியா கனவின் உருவாக்கம்' என்று பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதனாலேயே இதன் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறையின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை அப்போது ஏற்படுத்தியது. என்றாலும், 'கொரோனா வைரஸின் பல்வேறு உருமாற்றங்களுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை கோவேக்சின் வழங்குகிறது' என்று பரிசோதனை முடிவுகள் சில வாரங்களில் வெளியாகி நம்பிக்கை அளித்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் நிறைய பேர் நம்பிக்கையுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். இந்தியாவில் இதுவரை சுமார் 11.83 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈரான், வெனிசூலா, பிலிப்பைன்ஸ், நேபாளம் என 10 நாடுகள் அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்து இந்தியாவிலிருந்து இதை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

என்றாலும், கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் இன்னமும் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இப்போதைக்கு ஓமன், ஈராக், பிலிப்பைன்ஸ், மொரீஷியஸ், மெக்சிகோ, நேபாளம், ஜிம்பாப்வே போன்ற நாடுகள் கோவேக்சின் போட்டுக்கொண்டவர்களை அங்கீகரித்து நாட்டுக்குள் அனுமதிக்கின்றன.

அமெரிக்காவின் Ocugen மருந்து நிறுவனம், கோவேக்சினை அங்கு தயாரித்து அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்பனை செய்ய முடிவெடுத்தது. இதற்காக முறைப்படி அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்க இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்காததால், இதுவும் நிறைவேறவில்லை.
Covaxin
Covaxin

என்னதான் பிரச்னை?

ஒரு தடுப்பூசிக்கு அங்கீகாரம் தருவது என்பது நான்கு கட்ட நெறிமுறை. தடுப்பூசியைத் தயாரிக்கும் நிறுவனம் இதற்காக அனுப்பும் கடிதத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) முதலில் ஏற்கும். அதன்பின் மருந்து நிறுவனத்தினரும் WHO அதிகாரிகளும் சந்திப்பார்கள். அங்கீகாரம் கோரும் கடிதமானது என்னென்ன ஆவணங்களுடன் இருக்க வேண்டும் என WHO அதிகாரிகள் விவரிப்பார்கள். மூன்றாவது கட்டத்தில், மருந்து நிறுவனம் அனுப்பும் ஆவணங்களை பரிசீலனைக்காக WHO ஏற்கும். நான்காவது கட்டத்தில், WHO தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அவற்றைப் பரிசீலிக்கும்.

ஒரு தடுப்பூசியின் ஆபத்துகளும் பக்கவிளைவுகளும் மிகமிகக் குறைவாகவும், அதன் பலன்கள் மிக அதிகமாகவும் இருக்க வேண்டும். அது பாதுகாப்பானது என்பதும் உறுதியாக வேண்டும். அதன்பிறகே தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும். கொரோனா தடுப்பூசிகள் அனைத்துக்குமே 'அவசரகாலப் பயன்பாடு' அங்கீகாரம் மட்டுமே தரப்படுகிறது. இதை வழக்கத்தைவிட விரைவாக WHO தருகிறது. என்றாலும் கோவேக்சினுக்கு மட்டும் இது கிடைக்கவில்லை.

பாரத் பயோடெக் நிறுவனம் மே மாதத்தில் கோவேக்சினுக்கு அங்கீகாரம் வாங்கும் தன் விருப்பத்தைத் தெரிவித்தது. ஜூலை 9-ம் தேதி முறைப்படி எல்லா ஆவணங்களுடனும் விண்ணப்பம் செய்தது. அதன்பின் 6 முதல் 9 வாரங்களுக்குள் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்.

இதுவரை WHO ஏழு தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அமெரிக்காவின் ஃபைஸர் தடுப்பூசிக்கு ஆறே வாரங்களில் அங்கீகாரம் கிடைத்தது. அமெரிக்காவின் இன்னொரு தடுப்பூசியான மாடெர்னா 9 வாரங்களில் அங்கீகாரம் பெற்றது. பிரிட்டனின் ஆஸ்ட்ரா ஜெனெகா, இந்தியாவின் கோவிஷீல்டு ஆகியவையும் இதேபோல 9 வாரங்களில் அங்கீகாரம் பெற்றன. ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசி, சீனாவின் சினோபார்ம் மற்றும் சினோவேக் தடுப்பூசிகளுக்கும் விரைவில் அங்கீகாரம் கிடைத்துவிட்டன.

Bharat Biotech
Bharat Biotech
AP Photo/Mahesh Kumar A

கோவேக்சின் விஷயத்தில் நடப்பது எல்லாமே மர்மமாக உள்ளது. கூடுதல் தகவல்கள் மற்றும் ஆவணங்களைக் கேட்டு ஆகஸ்ட் 16-ம் தேதியிலிருந்து அக்டோபர் 14-ம் தேதி வரை எட்டு முறை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு WHO கடிதம் அனுப்பியுள்ளது. பாரத் பயோடெக் உடனடியாக எல்லா தகவல்களையும் கொடுத்துவிட்டது. அதன்பின் அக்டோபர் 19-ம் தேதி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உலக WHO-வின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் டெட்ராஸை சந்தித்து இதுகுறித்து நீண்ட நேரம் உரையாடினார்.

இத்தனைக்கும் பிறகு அக்டோபர் 26-ம் தேதி கூடிய WHO தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கோவேக்சினுக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்துவிட்டது. 'இன்னும் கொஞ்சம் தகவல்கள் தேவை. அவை வந்தபிறகு நவம்பர் 3-ம் தேதி கோவேக்சின் தடுப்பூசியை மதிப்பிடலாம்' என்று முடிவைத் தள்ளி வைத்திருக்கிறது.

மற்ற அனைத்து தடுப்பூசிகளும் அதிகபட்சம் 9 வாரங்களுக்குள் அங்கீகாரம் பெற்றுவிட, நான்கு மாதங்களாகியும் கோவேக்சின் அங்கீகாரம் பெற முடியவில்லை.

"கடந்த மே மாதத்தில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியும், ஜூன் மாதத்தில் சினோவேக் தடுப்பூசியும் அங்கீகாரம் பெற்றன. அப்போது WHO தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இப்படி நடந்துகொள்ளவில்லை. சீன நிறுவனங்கள் பல தகவல்களைத் தராதபோதும், அந்தத் தடுப்பூசிகளுக்கு உடனடியாக அங்கீகாரம் தரப்பட்டது. ஆனால், கோவேக்சின் விஷயத்தில் கேட்ட அத்தனை விவரங்களையும் உடனுக்குடன் கொடுத்தாலும், புதிதாக வேறு ஒன்றைக் கேட்டு இழுத்தடிக்கிறார்கள். இந்தியத் தடுப்பூசி என்பதால் இப்படி பாரபட்சம் காட்டுகிறார்கள். WHO அமைப்பே ஒரு சீன நிறுவனம் போல நடந்துகொள்கிறது" என்று குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள். உலக சுகாதார நிறுவனத்துக்கு சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிகின்றன.

ஆனால், "இந்த விஷயம் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் மீது நாங்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளோம். பாரத் பயோடெக் நிறுவனம் நாங்கள் கேட்ட எல்லா தகவல்களையும் உடனுக்குடன் அளித்தது. கடைசியாக அக்டோபர் 18-ம் தேதி வந்த தகவல்களை நாங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதற்காகவே இந்தத் தாமதம்" என்கிறார் WHO துணை டைரக்டர் ஜெனரல் மேரி ஏஞ்சலா சிமோ.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

பெயர் குறிப்பிட விரும்பாத WHO அதிகாரி ஒருவர், "உண்மையில் இந்த விஷயத்தில் நாங்கள் இந்தியாவுக்கு உதவவே விரும்புகிறோம். அதனால்தான் எப்படியாவது எல்லா தகவல்களையும் வாங்கி, கோவேக்சினுக்கு அங்கீகாரம் அளிக்க நினைக்கிறோம். எந்த ஒரு தடுப்பூசியும் தரமானது, பாதுகாப்பானது, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது என்பதை உறுதிசெய்ய வேண்டியது எங்கள் கடமை. சில தருணங்களில் அது சீக்கிரமே நடக்கும்; சில தருணங்களில் தாமதமாகும். அவ்வளவுதான் வித்தியாசம்" என்கிறார்.

நவம்பர் 3-ம் தேதி WHO எடுக்க இருக்கும் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இந்தியா. கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட கோடிக்கணக்கான இந்தியர்களும் காத்திருக்கிறார்கள்.