Published:Updated:

`தொட்டாலே பரவும் கொரோனா; பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் 10 நாள்கள்!' - அலட்சியம் காட்டியதா சீனா?

சீனா
சீனா ( AP )

சீனாவில், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்திருக்கிறது. அதேநேரம், 4,515 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது, சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள்.

கொரோனா வைரஸ் தாக்குதல் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் உள்ளிட்ட 12 நகரங்கள், முழுவதுமாக வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கின்றன. வைரஸ் தாக்குதலால் அந்த நகர மக்கள் முடங்கியிருக்கிறார்கள். 2019-nCoV என்று அறியப்படும் கொரோனா வைரஸின் இந்தப் புதிய வகை வைரஸ், வுஹான் நகரில் உயிரிழந்த 61 வயது முதியவரின் இறப்புக்குக் காரணம் எனக் கடந்த 10-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த சந்தைப் பகுதியில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டதால், விலங்குகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது.

சீனா
சீனா
AP

இந்த விவகாரத்தை அரசு இயந்திரம் முறையாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு சீனாவில் பரவலாக எழுந்திருக்கிறது. வுஹான் நகரில் இருக்கும் 7 பெரிய மருத்துவமனைகளிலும் வைரஸ் தாக்குதலைக் கண்டறியும் பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்கள், கடந்த 20-ம் தேதி வரை விநியோகிக்கப்படவில்லை என்று கொதிக்கிறார்கள் அப்பகுதி மக்கள். வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு 10 நாள்களுக்குப் பின்னரும் வுஹான் நகர் மற்றும் ஹூபே மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டியதாகச் சொல்கிறார்கள். தாக்குதல் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஜனவரி 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான காலத்திலேயே வைரஸ் அதிக அளவில் பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நாள்களில், வுஹான் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கண்டறியும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுபவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. 5 அல்லது 6 நாள்களுக்குப் பின்னரே முடிவுகள் தெரியவரும் என்ற சூழல் இருந்திருக்கிறது.

`அறிகுறி தெரிய 14 நாள்கள்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!' - கொரோனோ வைரஸால் பதறும் சீனா

இந்த இடைப்பட்ட நாள்களில், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கையும் 739 என்ற எண்ணிக்கையிலிருந்து 82 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. போதிய இடவசதி இல்லாதது, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை எனப் பல்வேறு காரணங்களால், அவர்கள் மருத்துவமனைகளிலிருந்து திரும்ப அனுப்பப்பட்டிருக்கிறார்கள். வுஹான் நகரைச் சேர்ந்த 53 வயதான யாங் எனும் பெண், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனையில் இடமில்லை எனத் திரும்ப அனுப்பப்பட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

சீனா
சீனா
AP

இதுதொடர்பாக சர்வதேச ஊடகங்களிடம் பேசிய யாங்கின் மகன், ``என் சகோதரரும் நானும், எங்கள் தாயை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காகப் பல நாள்கள் வரிசையில் நின்றிருக்கிறோம். இதற்காக, காலை 6 மணிக்கே எழுந்து மருத்துவமனை வாயிலில் வரிசையில் நிற்கத் தொடங்கிவிடுவோம். நாள் முழுவதும் வரிசையில் நின்றும், எங்கள் தாயை மருத்துவமனையில் அனுமதிக்க முடியவில்லை. `படுக்கைகள் இல்லை; அரசின் உத்தரவு வரும்வரை காத்திருங்கள். என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்' என்று கூறி, மருத்துவமனை நிர்வாகிகள் எங்களைத் திரும்ப அனுப்பிவிடுவார்கள். இதனால் மருத்துவர்களும் கையறு நிலையிலேயே இருக்கிறார்கள்'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாமதமான எதிர்வினை!

வைரஸ் குறித்த முழுமையான தகவல்கள் தெரியாத நிலையில், `இந்த வைரஸ் பெரிய அளவில் பரவக்கூடியது அல்ல' என்று மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதேபோல், இதுதொடர்பாக சீன சமூக வலைதளங்களில் எதிர்மறை கருத்துகள் வெளியிடுவதைத் தடைசெய்யும் நோக்கிலேயே சீன அரசு தொடக்கத்தில் செயல்பட்டுவந்திருக்கிறது. இதுதொடர்பாக சீனாவின் சமூக வலைதளமான வீபோவில் (Weibo) கருத்து தெரிவித்ததாக 8 பேர் வரை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொடர்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்பியதாக, அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

வுஹான் நகர மேயர் ஜோ ஜியான்வாங்
வுஹான் நகர மேயர் ஜோ ஜியான்வாங்
Twitter

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய வுஹான் நகர மேயர் ஜோ ஜியான்வாங், வைரஸ் தாக்குதல் குறித்து வெளியில் அதிகம் பேசக்கூடாது என தனக்கு உயர்மட்ட அளவில் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ``எனக்கு கிடைக்கும் தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்று, அரசிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகே அதுகுறித்து வெளியில் பேசமுடியும்'' என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து, ஹூபே மாகாணத்தின் பல பகுதிகளை சீன அரசு வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்றிலும் துண்டித்தது. அந்தப் பகுதிகளில் இருப்பவர்கள் வெளியேறவும், அங்கு வெளியாட்கள் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த, பிரதமர் லிகியாங் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து, அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வுஹானில் இரண்டு மருத்துவமனைகள் அமைக்கும் பணிகளை சீன அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.

வுஹான் மருத்துவமனை
வுஹான் மருத்துவமனை
AP

சுமார் 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை 6 நாள்களில் கட்டிமுடிக்க சீனா திட்டமிட்டிருக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி 3ல் அந்த மருத்துவமனை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. வைரஸ் குறித்த தகவல்களை மற்ற நாடுகளுடன் விரைவாகப் பகிர்ந்துகொண்டதற்காக சீனா பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. அதேநேரம், சூழ்நிலையின் தன்மையைப் புரிந்துகொள்ளாமல், சீனா அலட்சியமாகச் செயல்பட்டதாலேயே மக்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை

மக்களின் கோபம் அதிகரித்திருப்பதை வுஹான் நகர மேயர் ஜோ ஜியான்வாங், ஊடகங்கள் மத்தியில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காகப் பொறுப்பேற்று, தானும் ஹூபே மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் பதவி விலகத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். கடந்த 2002-ம் ஆண்டு, சார்ஸ் தாக்குதலில் இருந்து சீனா பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றே சர்வதேச வல்லுநர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

சீனா
சீனா
AP

சார்ஸ் தாக்குதலில் 800 பேர் பலியாயினர். உலக அளவில் பெரும் விவாதப்பொருளான சார்ஸ் நோய்த் தாக்குதலின்போது, தற்போது வுஹானில் கட்டப்பட்டுவருவது போன்ற பிரமாண்ட மருத்துவமனையை சீன அரசு பெய்ஜிங்கில், ஒரே வாரத்தில் கட்டிமுடித்தது. சமீபத்திய தரவுகளின்படி, சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் தாக்குதலால் 60 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் 8 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தலா 5 பேரும், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் தலா 4 பேருக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நமது அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையில், தலா ஒருவருக்கு இந்நோய் பாதிப்பு கண்டறியப்படிருக்கிறது. இதுதொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வுஹான் கொரோனா வைரஸ் தொடுதல் மூலம் பரவக்கூடும். வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் ஆகியவை மூலம் பரவுவதைப் போலவே, பாதிக்கப்பட்டவர்களைத் தொடுவதன் மூலமும் இந்நோய் பரவலாம்'' என்று தெரிவித்திருக்கிறது.

``இதுதான் கொரோனா வைரஸ்!" - சீனா வெளியிட்ட படம்

இதேபோல் குழந்தைகள், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படலாம் என்றும் அந்த ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500-க்கும் அதிகமாக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், லட்சக்கணக்கானோர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பின் செல்ல