Published:Updated:

`4 மாதங்களில் முதல் முறை!’ - வைரஸ் உருவான வுகானில் தற்போது `ஜீரோ’ கொரோனா #China

சீனா
சீனா ( AP )

கொரோனா வைரஸ் முதன்முதலில் உருவானதாகக் கூறப்படும் வுகானில் தற்போது ஒருவர் கூட சிகிச்சை பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரிலிருந்து உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது ஒட்டு மொத்த உலகத்தையும் கதிகலங்கச் செய்து வருகிறது. சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. இந்தக் கொடூர வைரஸின் பிடியில் இருந்து மீண்டு வர அனைத்து நாடுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் உலகளவில் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே உள்ளது

சீனா - கொரோனா
சீனா - கொரோனா
AP

இந்நிலையில் முதன்முதலில் கொரோனா உருவான இடமாகக் கருதப்படும் சீனாவின் வுகான் நகரில் ஒரு வைரஸ் நோயாளிகள் கூட இல்லை என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது அந்நாட்டு அரசு. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டது, வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ட்ரோன் மூலம் மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

`வுகான் ஆய்வகத்திலிருந்து வெளியானதா கொரோனா?’ - பத்திரிகையாளர்களின் கேள்வியும் ட்ரம்பின் பதிலும்

இப்படி பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்னர் அங்கு வைரஸின் தாக்கம் குறைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் முதல் சீனாவில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். தற்போது உள்ள புள்ளி விவரங்களின் படி சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,830 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,633 - ஆகவும் உள்ளது. இதற்கிடையில்தான் வுகான் பற்றிய செய்தி வந்துள்ளது.

சீனா
சீனா
AP

இது தொடர்பாக சீன சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 26-ம் தேதி நிலவரப்படி வுகானில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகியுள்ளது. சீனா இந்த நிலையை அடைவதற்குக் கடுமையாக உழைத்த நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,500 கொடிய கிருமிகள் - வுகான் வைரலாஜி மையத்தின் மர்மம்: சீனாவுக்கெதிராக சி.ஐ.ஏ-வை ஏவிய அமெரிக்கா!

வைரஸ் தொடங்கியதிலிருந்து இதுவரை வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,452- ஆக உள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்தப் பாதிப்பில் 56% ஆகும். கடந்த 4 மாதத்தில் முதன்முறையாக வுகானில் வைரஸ் நோயாளிகள் முற்றிலும் இல்லாமல் ஆகியுள்ளனர். வுகானின் நிலை இப்படி இருந்தாலும் சீனாவின் மற்ற மாகாணங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறனர். நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 11 பேருக்குப் புதிதாகக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள பலர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு