Published:Updated:

3 வாரங்களில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா.. 76 நாள்களுக்குப்பிறகு வெளிக்காற்றை சுவாசிக்கும் வுகான்!

வுகான்
வுகான் ( twitter )

வெறிச்சோடிய வீதிகள்.... மூடப்பட்டுக் கிடக்கும் வணிக வளாகங்கள்... முகமூடி மனிதர்கள் என எங்கு பார்த்தாலும் மயான அமைதியில் இருந்த சீனாவின் வுகான் நகரம் தற்போது வெளிக்காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருக்கும் வுகான் நகரில், கொரோனா பாதிப்பு முதல்முதலாகக் கடந்த ஜனவரி 10-ம் தேதி கண்டறியப்பட்டது. அங்கிருந்த இறைச்சி மற்றும் கடல் உணவுகள் விற்கும் சந்தைப் பகுதியில், விலங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 61 வயதான முதியவரின் இறப்புக்குப் பின்னரே இந்த வைரஸ் பரவல் உறுதிசெய்யப்பட்டது.

சீனா - வுஹான் நகரம்
சீனா - வுஹான் நகரம்
AP

இதையடுத்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அதன்படி ஜனவரி 23-ம் தேதி வுகான் நகரம் முழுவதும் லாக் டவுண் பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்து, கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் என அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. சீனாவின் பிற பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தொழிலாளர்கள் வுகான் நகரத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

ஒரே நாளில் 17 பேர் இறப்பு; குறைந்த புதிய நோயாளிகள்! - முதன்முறையாக வுஹான் வந்த சீன அதிபர்

நகரம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ சோதனைகள், விழிப்புணர்வு அறிவிப்புகள், சுகாதார நடைமுறைகள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரே வாரத்தில் புதிய அதிநவீன மருத்துவமனைகள் என அனைத்து ஏற்பாடுகளும் படுதீவிரமாகச் செய்யப்பட்டது. வுகானில் மட்டும் 16 ரெடிமேட் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் பெரிய மண்டபங்கள், விளையாட்டுக் கூடங்கள் என பல்வேறு இடங்கள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு ரோபோ மற்றும் ட்ரோன் மூலம் மக்கள் கண்காணிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார்கள்.

3 வாரங்களில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா.. 76 நாள்களுக்குப்பிறகு வெளிக்காற்றை சுவாசிக்கும் வுகான்!
twitter

வுகான் நகரம் முழுவதும் பள்ளி, அலுவலகம் போன்ற அனைத்துக்கும் காலவரையின்றி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80,000-க்கும் அதிகமானவர்களில் மூன்றில் இரண்டு பங்கு வுகான் நகரைச் சேர்ந்தவர்கள். மேலும், இங்கு உயிரிழப்புகள் மட்டும் ஆயிரத்தைத் தாண்டியது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே இருந்ததால் அங்கு இப்படியான அதிரடி நடவடிக்கைகளை செய்தது சீன அரசு. அரசின் நடவடிக்கை போகப் போக கைகொடுக்கத் தொடங்கியது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் வைரஸ் மேலும் பரவுவது குறைந்தது. சுகாதாரப் பணியாளர்களில் இரவு, பகல் பாராத உழைப்பால் உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்தன.

`குணமடைந்த 71,740 பேர்; பாதிப்பில்லா 3வது நாள்!’ - நம்பிக்கையூட்டும் வுகான் #Corona

இந்த நிலையில், 76 நாள்களுக்குப் பின் வுகானில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட மக்கள் சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று இரவு முதல் இந்த ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இன்றைய தேதியில் இந்த ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்படும் என்று சீன அரசு அறிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று வாரங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

3 வாரங்களில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா.. 76 நாள்களுக்குப்பிறகு வெளிக்காற்றை சுவாசிக்கும் வுகான்!
twitter

மேலும், ஒரு வார காலமாகவே புதிய உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இப்படி நிலைமை கட்டுக்குள் வந்ததை அடுத்தே இந்த ஊரடங்கு தளர்வு சில கட்டுப்பாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்காத அதே நேரத்தில், பொது போக்குவரத்து திறக்கப்பட்டுள்ளன. வுகானிலிருந்து பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் மற்ற பகுதிகளுக்கு 200 விமானங்கள் புறப்படத் தயாராக உள்ளன. இவற்றின் மூலம் 10,000 பேர் வரை வுகான் நகரை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மூடப்படும் சிறப்பு மருத்துவமனைகள்?; அதிபரின் வுகான் பயணப் பின்னணி! -  மீண்டுவிட்டதா சீனா? #Corona

மேலும், கிட்டத்தட்ட 100 அதிவேக ரயில்கள் வுகானிலிருந்து மற்ற நகரங்களுக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளது. இதில் செல்ல 55,000 மக்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். இதேபோல் சாலைப் போக்குவரத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தடை உத்தரவு தளர்வு கொண்டுவந்ததை அடுத்து ரயில்களிலும், சாலைகளிலும் பயணிக்க மக்கள் வெள்ளமாக திரண்டனர். இதனால் சாலைகளில் நெரிசல்கள் காணப்பட்டன. மேலும், இரவே தளர்வை வரவேற்கும் விதமாக கட்டடங்களில் வண்ண விளக்குகளைப் பரவவிட்டு தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

இப்படி தளர்வுகள் கொண்டுவந்தாலும் சில கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. அது வுகானிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் சீன சுகாதாரத்துறையின் மொபைல் ஆப் ஒன்றில் தங்களின் விவரங்கள், பயணக் குறிப்புகளைப் பதிவு செய்த பின்னரே பயணிக்க முடியும்.

மேலும் நகருக்குள் தனி மனிதர்கள் உலா வருவது மற்றும் தொழிற்சாலைகள் இயங்குவதில் விதிமுறைகள் என இன்னும் வைரஸ் அச்சத்தால் பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முடிந்தவரை வீட்டில் தங்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், இரண்டரை மாதக் காலம் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால், ஒரு சில மக்கள் தற்போது அங்கு வெளிவரத் தொடங்கியுள்ளதாக சீனாவிலிருந்து வெளிவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைகளுக்குச் செல்வது, ஆற்றங்கரைக்குச் சென்று ரிலாக்ஸ் செய்வது என 76 நாள்களுக்குப் பிறகு சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர் வுகான் மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு