Published:Updated:

`குணமடைந்த 71,740 பேர்; பாதிப்பில்லா 3வது நாள்!’ - நம்பிக்கையூட்டும் வுகான் #Corona

வுகானில் மருத்துவப் பணியாளர்களுக்கு மரியாதை
வுகானில் மருத்துவப் பணியாளர்களுக்கு மரியாதை ( Ke Hao )

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சீனாவின் வுகான் நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

சீனாவின் வுகான் நகரில் உள்ள சந்தையில் இருந்தே கொரோனா வைரஸ் முதன்முதலாகப் பரவத் தொடங்கியது. கடந்தாண்டு டிசம்பரில் உயிரிழந்த முதியவர் ஒருவரே, இதனால் பலியான முதல் நபர். இதையடுத்து உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி நிற்கிறது கொரோனா. சீனாவை அடுத்து இத்தாலி, இரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

வுகான்
வுகான்
AP

பேரிடராக அறிவித்து கொரோனா பரவலைத் தடுக்க சீனா பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தது. குறிப்பாக, அசுரவேகத்தில் சிறப்பு மருத்துவமனைகளை நிறுவியது சீனா. இந்தத் தொடர் நடவடிக்கைகளுக்குத் தற்போது பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. வைரஸ் பரவல் தொடங்கிய வுகான் நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிதாக ஒருவருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வுகான் நகரில் மட்டும் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தது வாடிக்கையாக இருந்தது. இந்தநிலை, தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது.

கொரோனா வைரஸ்: வடகொரியா நிலவரம்தான் என்ன?

சனிக்கிழமை (21-3-2020) நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 41 பேருக்கு சீனாவில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். இந்தக் காலகட்டத்தில் சீனாவில் 7 பேர் உயிரிழந்தனர். அதில், 6 வுகான் நகரில் நிகழ்ந்தவை. சமீபத்திய நிலவரப்படி சீனாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81,008 மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,255. உலக அளவில் இதனால் 2,50,000-த்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,000-த்துக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இயல்பு நிலைக்குத் திரும்பும் வுகான்
இயல்பு நிலைக்குத் திரும்பும் வுகான்
AP

அதேபோல், 71,740 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியதாக அறிவித்திருக்கிறது சீனா. தொடர்ந்து 3 நாள்களாக புதிய நோய்த்தொற்று கண்டறியப்படாத நிலையில், இதேநிலை தொடர்ந்து 14 நாள்களுக்கு நீடித்தால் மட்டுமே பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை வுகானில் விலக்கப்படும் என்கிறார்கள் சீன அதிகாரிகள். ஹுபே மாகாணத்தின் வுகானில் இருந்து அண்டை நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ள அத்தியாவசியத் தேவைகள் அடிப்படையில் மக்கள் அனுமதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. முழுமையான பரிசோதனைகளுக்குப் பின்னரே அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. அதேநேரம், அருகில் உள்ள மற்ற மாகாணங்களுக்குப் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. பெய்ஜிங் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து சீனா திரும்பும் பயணிகள், 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நம்மை மட்டும் அல்ல... AI-யையும் நெருக்குகிறது கொரோனா! #LongRead

கொரோனா பாதிப்பிலிருந்து வுகான் மீண்டது உலகுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுப்பதாக நெகிழ்ந்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இதுகுறித்துப் பேசிய அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ், ``வுகானில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை. கடந்த டிசம்பரில் வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர், இது முதல்முறை. எவ்வளவு மோசமான சூழலையும் நம்மால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை உலகுக்கு வழங்கியிருக்கிறது வுகான். முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், எந்தச்சூழலில் இருந்தும் நம்மால் மீண்டுவர முடியும் என்று நம்பிக்கை வுகானால் உலகுக்குக் கிடைத்திருக்கிறது’’ என்றார்.

டெட்ரோஸ்
டெட்ரோஸ்
AP

அதேநேரம், இதனால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதனால் வயதானவர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிவித்தார். மேலும், இளைஞர்களையும் இது விட்டுவைப்பதில்லை என்று குறிப்பிட்ட அவர், ``மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு