2016-ம் ஆண்டில் உலகளவில் ஜிகா வைரஸ் பரவி, ஆயிரக்கணக்கானவர்களை, குறிப்பாக கர்ப்பிணிகளை பாதித்தது. இதனால் இவர்களுக்கு மூளை பாதிப்போடு குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் மீண்டும் ஜிகா வைரஸ் தோன்றுவதற்கான அபாயங்கள் உள்ளதாகவும், ஒரே ஒரு வைரஸ் பிறழ்வுகூட பெரும் தொற்றுப் பரவலை ஏற்படுத்தக்கூடும் எனவும் அமெரிக்க அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜிகா வைரஸ் எளிதில் பரவுவதோடு, புதிய திரிபுகளையும் உருவாக்கும் என ஆய்வக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஏடிஸ் (Aedes mosquitoes) வகை கொசுவால்தான் ஜிகா வைரஸ் பாதிப்பு உண்டாகிறது. மிக சுலபமாகக் கொசுக்களின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும். பாலியல் உறவின் போதும் பரவலாம். ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறியாகக் காய்ச்சல், மூட்டுவலி, தலைவலி, சோர்வு போன்றவை இருக்கும். கர்ப்பிணிகள் ஜிகா வைரஸால் பாதிப்படையும்போது, கருவில் இருக்கும் குழந்தையும் பாதிக்கப்படும். கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைந்து தலை சிறியதாகப் பிறத்தல் (Microcephaly) உள்ளிட்ட மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நோயை குணப்படுத்த சிகிச்சை இல்லை, எனவே கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஜிகா வைரஸ் பாதிப்பிலிருந்து கர்ப்பிணிகளை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.