தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், 2017-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. சமீபத்தில், நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ``ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 220 மற்றும் ரத்த அழுத்தம் 120 ஆக இருந்தது. அந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சின் மூலம், அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கு நோயாளியின் உடலில் சர்க்கரையின் அளவு அவ்வளவு முக்கியமானதா என்ற சந்தேகம் ஏற்படக்கூடும். இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபியிடம் கேட்டோம்...

``அறுவைசிகிச்சைக்கு முன் சர்க்கரை அளவைப் பரிசோதிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. அறுவைசிகிச்சைக்கு முன்பு கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளில் சர்க்கரை அளவு பரிசோதனை என்பது முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இதை மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்பு, மயக்கவியல் நிபுணர் பரிசோதனை செய்துகொள்வார்.
ஏற்கெனவே நீரிழிவு நோய் இருப்பவரோ, அல்லது நீரிழிவு நோய் இல்லாதவராகவே இருந்தாலும்கூட அறுவைசிகிச்சைக்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருந்தால் முதலில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும். உடலில் சர்க்கரை அளவை குறைத்த பின்னர் அறுவைசிகிச்சையை மேற்கொள்வர்.
ஆனால், சில நேரங்களில் இதற்கு விதிவிலக்கு உண்டு. உதாரணமாக ஒரு விபத்து ஏற்பட்டு உயிரைக் காப்பாற்ற அறுவைசிகிச்சை முக்கியம் என்றால், அதுபோன்ற சூழலில் சர்க்கரை அளவு பற்றி யோசிக்க அவகாசம் இருக்காது. உடனடியாக உயிரைக் காக்க அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். சர்க்கரை அளவை அறுவைசிகிச்சைக்குப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றே முடிவெடுக்கப்படும்.

இதுவே, அவசரசூழல் இல்லாத அறுவைசிகிச்சைகளுக்கு, உதாரணமாக வயிற்றில் கட்டி போன்ற காரணங்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியம். அறுவைசிகிச்சை என்பது கீறல், புண் சம்பந்தப்பட்ட விஷயம். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது நோயாளியின் அறுவைசிகிச்சை காயம் ஆறுவதைத் தாமதமாக்கும். இதற்காகவே முக்கியமாக சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படுகிறது" என்றார்.