உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு நீரிழப்பு ஏற்பட்டால், கடுமையான உடல்நலப் பிரச்னைகள் நான்கு மடங்கு அதிகமாகும் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
பக்கவாதம் என்பது, ஓர் அபாயகரமான நோய். இது மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் சீராகச் செல்வதை தடுக்கிறது. இதற்கு உடனடி கவனம் தேவை. மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நீண்டகால மீளமுடியாத சேதத்தைக்கூட இது ஏற்படுத்தும். பக்கவாதத்தைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை மருத்துவ வல்லுநர்கள் மேற்கொள்ளும்போது, புகைப்பிடித்தல் இதில் மிக முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுவர். ஆனால், புகைப்பிடிப்பதை போலவே நீரிழப்பும், பக்கவாதத்திற்கு முக்கியமான காரணியாக இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

Also Read
ஹார்வர்ட் ஹெல்த் ஆய்வின் கருத்துப்படி, குறைந்த ரத்த அழுத்தம், கருநிற (dark)சிறுநீர், தலைச்சுற்றல், குழப்பம் மற்றும் உடல் பலவீனம் ஆகியன, நீரிழப்புக்கான அறிகுறியாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நீரிழப்பைத் தவிர்க்க, ஒருவர் தினமும் குறைந்தது நான்கு முதல், ஆறு கப் தண்ணீர் குடிக்க வேண்டும்.
லோமா லிண்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வானது, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 53% குறைக்க, தினமும் குறைந்தது ஐந்து டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளது. இது பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ள நோயாளியின் உடலையும் மேம்படுத்தும்.
அதேபோல், 2015-ம் ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் உள்ள விரிவான பக்கவாத மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி நீரிழப்பு ஏற்பட்டால் கடுமையான உடல்நலப் பிரச்னைகள் நான்கு மடங்கு அதிகமாகும் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்கவாத நோயாளிகளில் நீரிழப்பு ஒரு பொதுவான பிரச்னையாக காணப்பட்டது. கடுமையான பக்கவாதம், நோயாளிகள் மத்தியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆரோக்கியமான இளைஞர்களில் லேசான நீரேற்றம் கூட, இதய நோய் அபாயத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. இது ரத்த குழாய்களின் எண்டோடெலியல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியான ஆய்வில், லேசான நீரிழப்பும் கூட புகைபிடிப்பதைப் போலவே வாஸ்குலர் செயல்பாடுகளையும் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.
அதே நேரத்தில், அதிக தண்ணீர் பருகுவது இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானது என்பதால், அளவுக்கு மீறி தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் அவசியம். சராசரியாக ஒருவர் ஒருநாளுக்கு நான்கு முதல், ஆறு கப் தண்ணீர் எடுத்துக் கொள்வதுதான் உடலுக்கு ஆரோக்கியமானது. அளவுக்கு மீறினாலும் உடல் உறுப்புகளுக்கு தொந்தரவாக இருக்கும். அதேபோல் குறைந்தளவில் தண்ணீர் பருகுவதும் உறுப்புகள் செயல்படுவதை தடுக்கும். அதனால் அவரவர் உடம்பிற்கேற்ப தண்ணீரை பருகி ஆரோக்கியத்துடன் இருப்பதே நல்லது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.