Published:Updated:

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானதா?

கர்ப்ப காலம்
News
கர்ப்ப காலம்

பெரும்பாலான ஏர்லைன்ஸில், கர்ப்பத்தின் 36 வாரங்கள் வரை பயணம் செய்ய அனுமதிக்கிறார்கள். ஆனாலும்  நீங்கள் 14 முதல் 28 வாரங்கள் வரையிலான  இரண்டாவது ட்ரைமெஸ்டரில் விமானப் பயணம் செய்வதுதான் பாதுகாப்பானது. 

Published:Updated:

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானதா?

பெரும்பாலான ஏர்லைன்ஸில், கர்ப்பத்தின் 36 வாரங்கள் வரை பயணம் செய்ய அனுமதிக்கிறார்கள். ஆனாலும்  நீங்கள் 14 முதல் 28 வாரங்கள் வரையிலான  இரண்டாவது ட்ரைமெஸ்டரில் விமானப் பயணம் செய்வதுதான் பாதுகாப்பானது. 

கர்ப்ப காலம்
News
கர்ப்ப காலம்

நான் 3 மாத கர்ப்பிணி. வேலை நிமித்தமாக அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது, விமானப் பயணம் செய்வது பாதுகாப்பானதா? பயணத்தால் கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வருமா?

pregnant woman
pregnant woman
Pixabay

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. ஒருவேளை உங்களுக்கு கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே பயணம் செய்ய வேண்டும்.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் களைப்பு, வாந்தி, மயக்கம் போன்றவை இருக்கும் என்பதால் அந்த நாள்களில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதே போல 28 வாரங்களுக்குப் பிறகு, பிரசவ தேதியை நெருங்கும்போது பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் 14 முதல் 28 வாரங்கள் வரை பயணம் செய்ய ஏற்றவை.

 மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பயணம் செய்வதற்கு முன், உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி உங்களுடைய ரத்த அழுத்தம், உடல்நிலை, கருவிலுள்ள குழந்தையின் நிலை போன்றவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம். ஒருவேளை உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், நீங்கள் பயணத்தைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் `ப்ரீஎக்ளாம்சியா' எனப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு, திடீரென வலிப்பு வர வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தலைவலி, பார்வை மங்குதல், கை, கால்களில் வீக்கம், குழந்தையின் அசைவு சரியாகத் தெரியாதது, நெஞ்செரிச்சல், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பயணத்துக்குத் திட்டமிடும் முன், தடுப்பூசிகளைச் சரியாகச் செலுத்திக் கொண்டீர்களா என்று பார்க்க வேண்டும். உங்கள் மருத்துவக் குறிப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு பயணம் செய்யுங்கள். திடீர் ரத்தப்போக்கு, அடி வயிற்றில் வலி, குழந்தையின் அசைவு தெரியாதது, கால்களில் ரத்தம் கட்டிய உணர்வு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பயணம் செய்யும்போதும் கர்ப்பிணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். நீண்ட நேரம் கால்களைத் தொங்கவிட்டபடி பயணம் செய்தால் `டீப் வெயின் த்ராம்போசிஸ்' எனும் ரத்தக்கட்டு கால்களில் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். எனவே, பயணம் செய்யும்போது அடிக்கடி நிறுத்தி, கால்களை நீட்டி, மடக்குவது அவசியம். திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும், தளர்வான உடைகளை அணிந்துகொள்வதும் மிக அவசியம்.

Pregnant woman
Pregnant woman

விமானப் பயணம் செய்யலாமா என்றால், பெரும்பாலான ஏர்லைன்ஸில், கர்ப்பத்தின் 36 வாரங்கள் வரை பயணம் செய்ய அனுமதிக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் 14 முதல் 28 வாரங்கள் வரையிலான இரண்டாவது ட்ரைமெஸ்டரில் விமானப் பயணம் செய்வதுதான் பாதுகாப்பானது.

கர்ப்பத்தில் சிக்கல் இருப்பவர்கள் இதைத் தவிர்க்கலாம். விமானப் பயணத்துக்கும் மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் பொருந்தும். நிறைய திரவ உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும். அதை அடக்கக்கூடாது. பயணத்தின்போது கொதிக்க வைத்து ஆறவைத்த நீரையே பருகவும். சமைக்காத உணவுகளைத் தவிர்க்கவும். ஃபுட் பாய்சன் ஆகாமல் காத்துக் கொள்ளவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.