Published:Updated:

Doctor Vikatan: பட்டர் - பீநட் பட்டர்; என்ன வித்தியாசம்? எது சிறந்தது?

Peanut butter
News
Peanut butter ( Photo by Corleto Peanut butter on Unsplash )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: பட்டர் - பீநட் பட்டர்; என்ன வித்தியாசம்? எது சிறந்தது?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Peanut butter
News
Peanut butter ( Photo by Corleto Peanut butter on Unsplash )

பீநட் பட்டர் (Peanut Butter) என ஒன்று பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாதாரண வெண்ணெய்க்கும் பீநட் பட்டர் எனப்படும் வேர்க்கடலை வெண்ணெய்க்கும் என்ன வித்தியாசம்? இதை யார், எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்?

- ஷ்ருதி (விகடன் இணையத்திலிருந்து)

ரேச்சல் தீப்தி
ரேச்சல் தீப்தி

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி.

``வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் பீநட் பட்டர், சாதாரண வெண்ணெயைவிட ஆரோக்கியமானதுதான். மக்னீசியம், வைட்டமின் ஈ, புரதம், ஸிங்க், ஆரோக்கிய கொழுப்பான `மோனோ அன்சாச்சுரேட்டடு ஃபேட்' போன்றவை அதிகம் நிரம்பியது வேர்க்கடலை. ஆனால், வேர்க்கடலையிலுள்ள மைக்கோடாக்சின் எனப்படும் நச்சுப்பொருள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

சாதாரண வெண்ணெயானது பசும்பால் அல்லது எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படுவது. அதில் கொழுப்பு மிக அதிகம். அதிலும் ஆரோக்கியமற்ற பாலிஅன்சாச்சுரேட்டடு மற்றும் சாச்சுரேட்டடு ஃபேட் நிறைந்தது. இந்த இரண்டுவகை கொழுப்புகளும் அதிகரிக்கும்போது உடல் எடையும் அதிகரிக்கும். தவிர டிப்ரெஷன் எனப்படும் மன அழுத்தம், மந்த உணர்வு போன்றவையும் சேர்ந்துகொள்ளலாம்.

எனவே, அதற்கு மாற்றாக பீநட் பட்டரைப் பயன்படுத்தலாம். அதிலும் இதை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்துவது இன்னும் ஆரோக்கியமானது. அப்படிச் செய்யும்போது கெமிக்கல்கள், அதிகப்படியான உப்பு, ரீஃபைண்டு ஆயில் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

யாரெல்லாம் பீநட் பட்டர் எடுத்துக்கொள்ளலாம்?

- எல்லா வயதுக் குழந்தைகள்.

- ரன்னிங், சைக்கிளிங் மற்றும் அதீத உடலுழைப்பு தேவைப்படுகிற வொர்க் அவுட் செய்பவர்கள்.

- உடற்பயிற்சி பிரியர்கள்.

- எடையைக் குறைக்க விரும்புவோர்.

- புரதச்சத்தை அதிகரிக்க நினைக்கும் சைவ உணவுக்காரர்கள்.

- வயதானவர்கள்.

Peanut butter
Peanut butter
Photo by Tetiana Bykovets on Unsplash

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

- வேர்க்கடலை அலர்ஜி உள்ளவர்கள்.

- ரத்தத்தில் அதீத கொழுப்பு உள்ளவர்கள்

- சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள். இவர்கள் மருத்துவர் அல்லது டயட்டீஷியனின் பரிந்துரை இல்லாமல் பீநட் பட்டரை எடுத்துக் கொள்ளக்கூடாது.

பீநட் பட்டரில் ஃப்ளேவர்டு, அன்ஃப்ளேவர்டு, உப்பு சேர்த்தது, உப்பு சேர்க்காதது, இனிப்பு சேர்த்தது, இனிப்பு சேர்க்காதது, நட்ஸ் சேர்த்தது, சாக்கோசிப்ஸ் மற்றும் தேன் சேர்த்தது, சாக்லேட் சேர்த்தது எனப் பலவிதங்கள் கிடைக்கின்றன.

எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

- ஒருநாளைக்கு 1 - 2 டேபிள்ஸ்பூன் அளவு போதுமானது.

- வெஜிடபுள் ஸ்டிக்ஸுக்கு டிப்பாகப் பயன்படுத்தலாம்.

- சாலடுகளில் சேர்க்கலாம்.

- ஐஸ்க்ரீம், புட்டிங், பாரம்பர்ய இனிப்புகள், ஃப்ரூட் சாலட் உடன் சேர்க்கலாம்.

- காலை உணவு தானியங்களுடன் சேர்க்கலாம்.

- மில்க்ஷேக் மற்றும் ஸ்மூத்தியோடு சேர்க்கலாம்.

- பிரெடில் தடவிச் சாப்பிடலாம்.

வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

தேவையானவை:

எண்ணெயின்றி வறுத்த வேர்க்கடலை - 2 கப்

தேன் அல்லது சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு- விருப்பத்துக்கேற்ப.

Peanut butter
Peanut butter
Pixabay

செய்முறை:

வேர்க்கடலையை மிக்சி ஜாரில் போட்டு 3 - 5 நிமிடங்களுக்கு பிளெண்ட் செய்யவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. அதில் உப்பு (விருப்பப்பட்டால்) மற்றும் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து மீண்டும் பிளெண்ட் செய்யவும்.

ஈரமில்லாத பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தவும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?