Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் அதிக ரத்த அழுத்தம்; மருந்துகள் எடுப்பது பாதுகாப்பானதா?

கர்ப்பிணி (Representational Image)
News
கர்ப்பிணி (Representational Image)

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் அதிக ரத்த அழுத்தம்; மருந்துகள் எடுப்பது பாதுகாப்பானதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

கர்ப்பிணி (Representational Image)
News
கர்ப்பிணி (Representational Image)

நான் மூன்று மாத கர்ப்பிணி. இரண்டு மாதங்கள் வரை ரத்த அழுத்தம் சீராக இருந்தது. தற்போது உயர்ந்துள்ளது. ரத்த அழுத்த அளவை சீராக வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ளலாமா? அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

- விஜயா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அதைக் குறைப்பதற்கு உங்கள் மகப்பேறு மருத்துவர் ஆன்டிஹைப்பர்டென்சிவ் (antihypertensive) மருந்துகளைப் பரிந்துரைப்பார். தவறாமல் நீங்கள் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் பரிந்துரைக்கப்படும் இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தாதவை. எனவே, பயமின்றி எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பகால ரத்த அழுத்தத்தைக் குறைக்காமல் விட்டால், குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். கருவிலுள்ள குழந்தையின் எடை குறையும். குழந்தையைச் சுற்றியுள்ள தண்ணீர் குறையலாம். ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சைகளை எடுக்காததால் ஏற்படும் குறைப்பிரசவம், பேறுகால வலிப்பு, நஞ்சு பிரிந்துபோவது போன்ற பிரச்னைகள் வரலாம்.

தினமும் உங்கள் ரத்த அழுத்தத்தை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அது நார்மலாக இல்லாத பட்சத்தில் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். பகலிலும் 2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். கருவிலுள்ள குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த இது உதவும்.

கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமுள்ள பெண்களுக்கு நஞ்சு சரியாக உருவாகாமலிருக்கலாம். நஞ்சிலுள்ள `ஸ்பைரல் ஆர்ட்டீரியோல்ஸ்' (spiral arterioles) எனப்படும் ரத்த நாளங்கள் சரியாக உருவாகியிருக்காது. அதுதான் இதில் பிரச்னையாக இருக்கும். பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களின் மூலம் எந்தளவுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியுமோ, அதை முயற்சி செய்வதற்குதான் ஆன்டி ஹைப்பர்டென்சிவ் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அதை கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி (Representational Image)
கர்ப்பிணி (Representational Image)

கர்ப்பிணிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம் வருகிறது.

இதற்கு, மிக இளவயதில் முதல் கர்ப்பம், அதிக உடல் பருமன், முந்தைய கர்ப்பத்தின்போது அதிக ரத்த அழுத்தம் இருந்தது, ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமப்பது, வயதான பிறகு கர்ப்பமாவது போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கர்ப்பகாலத்தில் அது தீவிரமாகலாம். ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர் பிரச்னை உள்ளவர்கள், கிட்னி பாதிப்புள்ளவர்களுக்கும் கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.

கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் வராமலிருக்க முதலில் அதிகப்படியான எடையைக் குறைக்க வேண்டும். கர்ப்பத்துக்கு முன்பே ரத்த அழுத்தம், கிட்னி பாதிப்புகள் இருந்தால் அவற்றுக்கான முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு கர்ப்பத்துக்குத் திட்டமிடலாம். முதல் கர்ப்பத்தில் அதிக ரத்த அழுத்தம் இருந்திருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அப்படி வராமலிருக்க முன்கூட்டியே மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.

கர்ப்பகாலத்தில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு, அடிக்கடி பிபி அளவைப் பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சி, அதைச் சுற்றியுள்ள தண்ணீரின் அளவு போன்றவற்றை சரிபார்க்க வேண்டும்.

கர்ப்பிணி
கர்ப்பிணி
மாதிரி புகைப்படம்

அதீதமான தலைவலி, பார்வை மங்குதல், நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, குழந்தையின் அசைவை உணர முடியாதது, லேசான ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் ஆபத்தின் அறிகுறிகள். எனவே, சரியான மருத்துவ ஆலோசனை, ஃபாலோ அப், மருந்துகள் எடுத்துக்கொள்வது, ஸ்கேன் செய்வது போன்றவற்றின் மூலம் கர்ப்பகால ரத்த அழுத்த பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?