Published:Updated:

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் நீர்ச்சுருக்கு; நிரந்தர தீர்வு உண்டா?

Pain (Representational Image)
News
Pain (Representational Image)

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் நீர்ச்சுருக்கு; நிரந்தர தீர்வு உண்டா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Pain (Representational Image)
News
Pain (Representational Image)

எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி நீர்ச்சுருக்கு ஏற்படுகிறது... சிகிச்சை எடுத்துக்கொண்டால் மூன்று மாதங்கள் தொந்தரவு இல்லாமல் இருக்கிறது. பிறகு, மறுபடி அதே பிரச்னை தொடர்கிறது. இதற்கு என்ன சிகிச்சை எடுப்பது?

- சரஸ்வதி பத்மநாபன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சசித்ரா தாமோதரன்
மருத்துவர் சசித்ரா தாமோதரன்

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

``கோடைக்காலம் வந்தாலே சிறுநீர்த்தொற்றும் கூடவே வருவது இயற்கைதான் என்றாலும், பெண்களுக்கு இது சிலநேரம் பெரும் பிரச்னையாக மாறிவிடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. பொதுவாகவே பெண்களை சற்று அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றான இந்த சிறுநீர்த்தொற்று, கோடைக்காலத்தில் அவர்களுக்கு கொடுக்கும் தொல்லையும் அதிகம்.

`யூரின் போனா பயங்கர எரிச்சல், சூடு தாங்கல டாக்டர்... சொட்டு சொட்டா யூரின் போய் முடியறதுக்குள்ள உள்ளங்கால் வரை எரியுது...' என்று பல பெண்கள் புகார் சொல்வதுதான் இதன் முதல் அறிகுறி.

சிறுநீர்த்தொற்று ஏற்பட பெண்களின் சிறுநீர்ப்பாதையின் அமைப்புதான் முதல் காரணம் என்கிறது மனித உடலியல். சாதாரணமாக நமது உடலின் நீர்க்கழிவுகள் சிறுநீரகங் களிலிருந்து பிரிந்து, சிறுநீர்க்குழாய்கள் (ureters) மூலமாக சிறுநீர்ப்பையை (urinary bladder) அடைந்து urethra எனப்படும் சிறுநீர்த்தாரை வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்த யூரித்ரா என்ற சிறுநீர்த்தாரையின் செயல்பாடு ஆண், பெண் இருவருக்கும் ஒன்றுபோலத்தான் என்றாலும், ஆண்களில் 20 செ.மீ. வரை இருக்கும் இது, பெண்களில் வெறும் 4 செ.மீ. மட்டுமே இருக்கிறது.

இந்த குறுகிய நீளம் காரணமாக பெண்களுக்கு, அருகிலுள்ள உறுப்புகளிலிருந்தும் (ஆசனவாய் மற்றும் யோனி) சுற்றியுள்ள சருமத்திலிருந்தும் காணப்படும் பாக்டீரியா கிருமிகள் எளிதாகப் பரவி கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பாகிறது. போதாதற்கு சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் சுருக்குத்தசைகளின் இயக்கத்தை பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன என்பதால், இந்த ஹார்மோன்கள் குறைபாட்டின்போதும் சிறுநீர் உபாதைகள் ஏற்படுகின்றன.

இதில் இவற்றுடன் கோடைக்காலமும் சேர்ந்துகொண்டால், சொல்லவே வேண்டாம். உண்மையில் 60% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த சிறுநீர் உபாதைகளை அனுபவிக்கிறார்கள் என்பதோடு, இவர்களில் பெரும்பான்மை பெண்கள் மருத்துவ உதவியை நாட வேண்டியும் உள்ளது என்பதுதான் நடைமுறையாக உள்ளது.

மேற்கூறப்பட்ட சிறுநீர் எரிச்சல், சிறுநீர்ப்பாதை வலி மட்டுமல்லாமல் குளிர்க்காய்ச்சல், வாந்தி, அடிவயிற்றில் வலி, வாடையுடன் வெளியேறும் சிறுநீர், வெள்ளைப்படுதல் போன்ற அறிகுறிகளும் இதில் காணப்படலாம். இப்படி, வருடத்துக்கு மூன்று முறையோ, ஆறு மாதங்களுக்குள் இருமுறையோ சிறுநீர்த்தொற்று அடுத்தடுத்து ஏற்படுவதை Recurrent UTI, அதாவது மீள்நிகழ் சிறுநீர்த்தொற்று என்று அழைக்கும் மருத்துவ அறிவியல், இதற்கான காரணங்களையும் பரிந்துரைகளையும் எடுத்துரைக்கிறது.

Pain (Representational Image)
Pain (Representational Image)
Photo by Ivan Samkov from Pexels

பொதுவாக, இந்த சிறுநீர்த்தொற்றுகளில் பாக்டீரியா தொற்றுதான் அதிகம் காணப்படுகிறது. இதிலும் E.coli, Proteus, Staphylococcus போன்ற, அருகிலுள்ள உறுப்புகளில் சாதாரணமாகவே காணப்படும் பாக்டீரியா கிருமிகள்தான் தொற்றை ஏற்படுத்துவதால், உடலுறவுக்குப் பிறகும், வயிற்றுப்போக்கு ஏற்படும்போதும் சிறுநீர்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதில் சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீர்ப்பாதையில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட் (stent) ஆகியன சேரும்போது, மீள்நிகழ் சிறுநீர்த்தொற்றும் எளிதில் ஏற்படுகிறது.

எந்தவொரு நோய் அறிகுறியைப் போலவே, சிறுநீர்த்தொற்றிலும் அறிகுறிகள் தோன்றிய ஓரிரு நாள்களுக்குள் காய்ச்சல், வயிற்று வலி முன்பைவிட அதிகரிக்கும்பட்சத்தில் மருத்துவ ஆலோசனை அவசியம் தேவைப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன், சிறுநீர்ப் பரிசோதனை, culture & sensitivity பரிசோதனை, தேவைப்படும்போது ரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேனிங் ஆகியவை தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன. கூடவே, கிருமித்தொற்றுக்கு ஏற்ற ஆன்டிபயாடிக்குகள் 14 நாள்கள் முதல் 21 நாள்கள் வரை பரிந்துரைக்கப்படுகின்றன. சர்க்கரைநோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், நீண்ட கால ஆன்டிபயாடிக்குகள், அமிலத்தன்மையுடன் கூடிய Lactobacillus fermentum நிறைந்த புரோபயாடிக் மாத்திரைகள் மற்றும் லோஷன்கள், ஹார்மோன் குறைபாட்டைக் குறைக்கும் ஈஸ்ட்ரோஜென் க்ரீம்கள், சிறுநீர் பெருக்கை உண்டாக்கும் கிரான்பெர்ரி தயாரிப்புகள், சிறுநீரில் அமிலத்தன்மையைக் குறைக்கும் ஆல்கலைசர்கள் ஆகியவற்றையும் மருத்துவரின் பரிந்துரையுடன் இதில் பயன்படுத்தலாம். சமீப காலமாக ஆன்டிசெப்டிக் மருந்தான மெத்தனமைன் (Methenamine Hippurate) இதில் நன்கு பலனளிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவையனைத்துக்கும் மேலாக, அதிகப்படியான நீரைப் பருகுவது (3 லிட்டருக்கும் மேல்), இளநீர், தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ், கம்பங்கூழ் ஆகியவற்றை உட்கொள்வது, நீண்டநேரம் தாமதிக்காமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது, தளர்வான பருத்தி உள்ளாடைகளை உடுத்துவது, வாசனை ஸ்பிரே மற்றும் பவுடர் ஆகியவற்றை உறுப்புகளில் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற பொதுவான வழிமுறைகளும் சிகிச்சைகளும் சிறுநீர்த்தொற்று வராமல் தடுக்க உதவுகின்றன.

Pain (Representational Image)
Pain (Representational Image)
Photo by Sora Shimazaki from Pexels

ஏன் ஒரு சாதாரண சிறுநீர்த்தொற்றுக்கு இவ்வளவு பரிந்துரைகள் என்ற கேள்வி இப்போது எழுகிறதல்லவா..? ஏனெனில், இந்த சாதாரண தொற்று, சமயங்களில் மேலே பரவி சிறுநீரக பாதிப்பை (Acute Pyelonephritis) ஏற்படுத்தக் கூடும் என்பதாலும், அது சில நேரம் சிறுநீரகத்தை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் என்பதாலும், அதேசமயம் ரத்தத்தில் இந்தக் கிருமிகள் கலந்து, Septicemia எனும் பேராபத்தை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது என்பதாலும், எல்லா நேரத்திலும் இதை ஒரு சாதாரணத் தொற்று என்று ஒதுக்கிவிட முடியாது. மேலும் ஒருசிலரில் இதற்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக்குகளுக்கு எதிர்ப்பாற்றல் (antibiotic resistance) ஏற்படுவதுடன், நிரந்தர சிறுநீர்ப்பை சுருக்கம் ஏற்படவும் இதில் வாய்ப்புள்ளது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?