மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சந்தோஷத்தின் சாவி - உங்கள் மனம்தான்!

health
பிரீமியம் ஸ்டோரி
News
health

இப்படிக்கு... தாய்மை - 02

ம் கதாபாத்திரங்கள் ஸ்ரீராமும் மேனகாவும் அந்தப் பிரபல மருத்துவமனையின் ஸ்கேன் பிரிவில் வார இறுதிநாள் ஒன்றில் காத்திருந்தார்கள். இந்த மாதமும் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. உடைந்து போயிருந்தாள் மேனகா. ‘இந்த முறை நிச்சயம் கர்ப்பமாகிவிடுவேன்னு இருந்தேனே...’ என்று புலம்பித் தீர்த்தாள். ஸ்ரீராம் அவளைச் சமாதானப்படுத்தி, மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அவர், இருவரையும் கவுன்சலரிடம் அனுப்பினார்.

சந்தோஷத்தின் சாவி -  உங்கள் மனம்தான்!

கவுன்சலர் அறைக்கு முன் காத்திருந்தபோது, மருத்துவமனையின் மேல்மாடியில் சில பச்சிளம் குழந்தைகள் அழும் சத்தம் மேனகாவை என்னவோ செய்தது. ஓடிப்போய் அக்குழந்தைகளைப் பார்க்க மனம் துடித்தது. ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி...’ என்று உள்ளுக்குள் புழுங்கியவண்ணம் அமர்ந்திருந்தாள். கவுன்சலர் ராகவி, இருவரையும் உள்ளே வரச்சொன்ன நேரம், மேனகா அழுகையை அடக்க முடியாமல் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உள்ளே வருவதையும், ஸ்ரீராம் அவளைச் சமாதானப்படுத்தி அழைத்து வருவதையும் பார்த்தவுடன் நிலைமையைப் புரிந்துகொண்டார் ராகவி. சூழலை இயல்பாகக் கையாள நினைத்த அவர், சற்று நேரம் அமைதி காத்து பின்னர் பேசத் தொடங்கினார். யதார்த்தமான சில உண்மைகளைக்கொண்டு விளக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீராமுக்கும் மேனகாவுக்கும் உடல்ரீதியாக மிக மிகச் சிறிய குறைபாடுகளே இருக்கின்றன என்றும், இருவரும் வயதின்பால் இளமையுடனேயே இருப்பதாகவும், விரைவில் மேனகா கர்ப்பம் தரிக்க எல்லாச் சூழ்நிலைகளும் ஏற்புடையதாக இருப்பதாகவும் சொல்லி முடித்தார். ‘சிகிச்சைகளையெல்லாம் மீறிச் சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்’ என்று சொல்லி நிறுத்தினார். இருவரும் புரியாமல் அவரையே பார்த்தனர்.

‘ஆம், அது உங்களின் முழு நம்பிக்கை மட்டுமே. மருத்துவர் மீதோ, மருத்துவமனை மீதோ, உங்கள் உடலின் மீதோ, இந்த இயற்கையின் மீதோ இப்படி ஏதாவது ஒன்றில் நீங்கள் அசாதாரணமான நம்பிக்கை வைத்தாலொழிய எந்த நிகழ்வும் வெற்றி பெறாது. குறிப்பாக, குழந்தைப்பேறு’ என்றார்.

சந்தோஷத்தின் சாவி -  உங்கள் மனம்தான்!

‘கண்ணுக்குத் தெரிந்த காரணங்களை மருத்துவர்களால் களைய முடியும். 50 சதவிகிதம் மருத்துவமுறைகள் என்றால், மீதமுள்ள 50 சதவிகிதம் உங்கள் நம்பிக்கையும், உறுதியும், ஸ்ட்ரெஸ்ஃப்ரீ வாழ்க்கைமுறையுமே. எனவே, கண்ணுக்குத் தெரியாத காரணங்களான ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்ற பூதங்கள் வசிக்கும் உடலில் கர்ப்பத்துக்கான ஹார்மோன்கள் வாசம் செய்ய விரும்பாது’ என்று சொல்லி முடித்தார். இப்போது மேனகா சற்று நிமிர்ந்து உட்கார்ந்து, ‘ஆமாம் மேடம், எனக்கு ஸ்ட்ரெஸ் இருக்கு. எந்த நேரமும் பதற்றமாகவே இருக்கு. நான் என்ன செய்யட்டும்னு சொல்லுங்க...’ என்று சிறு குழந்தையைப்போலக் கேட்டாள்.

‘உங்களுக்குப் புரியும்படி சில உண்மைச் சம்பவங்களைச் சொல்கிறேன் கேளுங்கள். 1990-களில் மிகச் சொற்பமான எண்ணிக்கையிலான தம்பதிகளே, ‘குழந்தையின்மை’ என்ற துயரத்தை அனுபவித்திருப்பார்கள். அப்போது குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகளே அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தன. அந்தக் காலகட்டத்தில், என் அம்மா திருமணமாகி ஒன்பது வருடங்கள் குழந்தை இல்லாமல் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். சில பல மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்டு, எவையும் பயனளிக்காமல் போனபோது என் அப்பாவிடம், ‘இனிமேல் எந்தச் சிகிச்சையும் வேண்டாம்; என் மனதும் உடலும் இனி தாங்காது; தயவுசெய்து இதற்கு வேறு தீர்வு சொல்லுங்கள்’ என்று மன்றாடினார்.

அப்பா, ‘நாம் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ளலாம்’ என்றார். பெரும் கூட்டுக் குடும்பத்திலிருந்த அவர்கள், தங்கள் முடிவை அனைவரிடமும் சொல்லிவிட்டு, தனிக்குடித்தனம் சென்றனர். ஆறே வாரங்களில் ஒரு தத்துக்குழந்தை அவர்கள் வசம் வரவிருந்த நிலையில், என் அம்மா கர்ப்பமுற்றார். எந்தச் சிகிச்சையுமின்றி... வேண்டுதல், கோயில், பிரார்த்தனை என்று எதுவுமின்றி, அவர் கருவுற்றிருந்தார். இந்த அதிசயத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தில் பெரியவர்களெல்லாம், ‘வீட்டில் ஏதோ தோஷம் இருந்திருக்குபோல... அதான் இங்கேயிருந்து வெளியேறியதும் நல்லது நடந்திருக்கு’ என்று ஆசுவாசப்பட்டனர்.

ஒரு மனோதத்துவ நிபுணராக என் கணிப்பு என்ன தெரியுமா... என் அம்மா, ‘இனிமேல் குழந்தையில்லை என்ற பெயர் இல்லை. நமக்கே நமக்காக ஒரு குழந்தை வரப்போகிறது’ என்ற நிம்மதியில், தன் கவலைகளையெல்லாம் விட்டொழித்திருப்பார். அந்த ஸ்ட்ரெஸ்ஸை எப்போது அவர் மனதிலிருந்து இறக்கி வைத்தாரோ, அடுத்த நிமிடம் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களுக்கு ரீப்ளேஸ்மென்ட்டாக நல்ல ஹார்மோன் சுரப்பிகள் தம் வேலையை முடுக்கிவிட்டிருக்கும். அதன் விளைவாக, சந்தோஷத்துக்கான ஹார்மோன்கள் உடலில் சுரக்க ஆரம்பித்திருக்கும். அதுநாள்வரை அவரது கர்ப்பத்துக்குத் தடையாக இருந்த காரணிகளும் மாயமாக மறைந்திருக்கும். 27 வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அப்படி உருவான அந்த ஆச்சர்யக் குழந்தை நான்தான்’ என்று சொல்லி முடித்தார் ராகவி.

சந்தோஷத்தின் சாவி -  உங்கள் மனம்தான்!

‘அப்படி ஒண்ணு, ரெண்டு மாசத்திலேயே அவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸும் காணாமல் போயிடுமா மேம்?’ என்று ஆர்வமாகக் கேட்டாள் மேனகா. ‘இன்னொரு சுவாரஸ்யமான கதையும் சொல்கிறேன் கேளுங்கள்’ என்று சற்று ஓங்கிய குரலுடன் உற்சாக தொனியில் பேச ஆரம்பித்தார் ராகவி.

`சில வருடங்களுக்கு முன்பு இந்தச் சென்னை மாநகரத்தில் வெள்ளம் வந்தது நினைவிருக்கிறதா... இரண்டு வாரங்களுக்கும் மேலாக நகரமே ஸ்தம்பித்தது. அப்படி ஒரு நேரத்தில், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துகொண்டிருந்த தம்பதிகளில், மூன்று ஜோடிகள் மட்டும், வெள்ளத்துக்குப் பிறகு அடுத்தகட்ட சிகிச்சைக்கு வரவில்லை. நீண்ட நாள்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர்களுக்கு, அடுத்தடுத்த மாதங்களில் சில முக்கியமான சிகிச்சைகள் தர வேண்டியிருந்தன. அதற்கான பணத்தையும் அவர்கள் செலுத்தியிருந்தார்கள். எனவே, அவர்களைத் தொலைபேசி மூலம் அழைத்து விசாரித்தோம்.

மூன்று பெண்களில், இரண்டு பேர் இயல்பாகவே கர்ப்பம் அடைந்திருந்ததாகச் சொன்னார்கள். எந்தவித மருத்துவ உதவியுமின்றி, சிகிச்சையும் இல்லாமல் அவர்கள் கர்ப்பம் அடைந்ததாகச் சொன்னது எங்களுக்கெல்லாம் பெரும் சந்தோஷமாக இருந்தது. என்றாலும், ஆச்சர்யமாகவும் இருந்தது. காரணம், அதுநாள்வரை அந்த இரு தம்பதிகளும் பல்வேறு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருந்தன. `சரி, ஏதோ விந்தை’ என்றும், `ஆண்டவன் அருள்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், அனுபவமிக்க எங்கள் மூத்த மருத்துவர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் இவை...

‘காரணம் புரியவில்லையா உங்களுக்கு... அந்த வெள்ளப்பெருக்கின்போது இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் அலுவலகம் இல்லை, டி.வி இல்லை, மின்சாரம் இல்லை, வெளியுலகத் தொடர்பு இல்லை, சண்டை சச்சரவு இல்லை. அப்படியான தருணத்தில் இருவருக்குமான மன உளைச்சலும் இல்லாமல் அமைதியாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம். அந்நேரத்தில் வேறு மாதிரியான ஹார்மோன் மாற்றங்கள் உடலில் நடந்தேறியிருக்கலாம். கர்ப்பம் நிகழ ஏதுவான மாற்றங்கள் உண்டாகியிருக்கலாம்... அவ்வளவுதான்’ என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆக, உங்கள் ஸ்ட்ரெஸ் காணாமல் போகும் வழிகளைப் பின்பற்றுங்கள். உணவிலும் அக்கறை காட்டுங்கள்....’’ ராகவி பேசி முடிக்கும் முன்னரே, மேனகா முகத்தில் ஒரு பெரும் மலர்ச்சி உண்டாவதை ஸ்ரீராமும் கவனித்தான்.

இணையத்தில் இணைந்திருப்போம்!

(இனி இந்தத் தொடரை vikatan.com-ல்

1 மற்றும் 15-ம் தேதிகளில் வாசிக்கலாம்)

மன அழுத்தம் தவிர்க்கும் உணவுகள்

மன அழுத்தத்தை (Stress) எதிர்த்து, நல்ல மனநிலையை அதிகரிக்கும் ஊட்டச்சத்துகளான கால்சியம், குரோமியம், ஃபோலேட், இரும்பு, மக்னீசியம், ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி6, வைட்டமின் பி12,

வைட்டமின் டி மற்றும் துத்தநாகம் போன்றவை நிறைந்த உணவுகள் கர்ப்பம் தரிக்கும் காலத்தில் உங்கள் ஆற்றல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

நல்ல மனநிலையை உயர்த்தும் உணவுகள்

பெர்ரி, டார்க் சாக்லேட், மீன், கெமோமில் தேநீர், கிரீன் டீ, கீரை வகைகள், குறிப்பாக பசலைக்கீரை, கொட்டைகள் மற்றும் விதைகள் (Nuts and Seeds), பழங்கள், புரோபயோடிக்ஸ் (Probiotics) எனப்படும் புளித்த உணவுகள் (Fermented Foods) இவையெல்லாம் நல்ல மனநிலையை உண்டாக்கும்.

மன அழுத்தத்தைத் தூண்டும் உணவுகள்

கஃபைன், மது, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து நிறைந்த உணவுகளான ரொட்டி மற்றும் பாஸ்தா, உருளைக்கிழங்கு, வெள்ளை அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பழச்சாறுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் போன்ற உணவுகள் மன அழுத்தத்தைத் தூண்டும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.