நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் வழியே 75 வயது பெண்மணிக்கு Open Heart Surgery மேற்கொண்டு, வெற்றி கண்டுள்ளனர் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள். சீரற்ற இதயத்துடிப்பு பிரச்னைக்கு ஆளாகியிருந்த அவருக்கு இந்த அறுவை சிகிச்சையின் மூலம் இதயத் துடிப்பு சீராக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவக்குழுமமான காவேரி மருத்துவக் குழுமத்தின் அங்கமான சென்னை காவேரி மருத்துவமனையில், இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு பிரச்னையால் அவதியுற்ற 75 வயது மூதாட்டிக்கு, Radiofrequency ablation (RFA) என்கிற மருத்துவத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதயத்தின் இயல்பான மின்சாரப் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுவதாலேயே அதிவேக இதயத்துடிப்பு (tachycardia), மிகக்குறைந்த இதயத் துடிப்பு (bradycardia) ஆகிய சீரற்ற இதயத்துடிப்பு உண்டாகிறது. இப்பெண்மணிக்கு 30 வயதாக இருந்தபோதே, சிக்கலான இதய அறுவைசிகிச்சை ஒன்று செய்யப்பட்டிருக்கிறது.
இயல்பாக நமது இதயத்தில் 2 மேலறைகளும், 2 கீழறைகளும் இருக்கும். பிறவியிலேயே இதயக் குறைபாடுள்ள இப்பெண்மணிக்கு இதயத்தின் மேல் பகுதியில் 3 அறைகள் இருந்தன. சமீப காலமாக, மிக அதிக களைப்பும் படபடப்பும், தலைச்சுற்றலும் இவருக்கு இருந்து வந்துள்ளது. இத்தகைய அறிகுறிகளால் அவதிப்படுபவர்கள் பெரும்பான்மையாக, தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் கண்டறிவதில்லை. இதன் விளைவாக அவர்களது உடல்நிலையே மோசமாகிவிடுகிறது.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையைச் சார்ந்த இதயநோய் மருத்துவர் சக்திவேல் கூறுகையில்...
``இப்பெண்மணிக்கு சீரற்ற இதயத்துடிப்பு பிரச்னைகள் இருப்பதை ஈசிஜி பரிசோதனை அறிக்கைகள் வெளிப்படுத்தின. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக ablation என்கிற மருத்துவச் செயல்முறை அவசியமாக இருந்தது. இத்தகைய பாதிப்புள்ள நோயாளிகளுக்கு மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிப்பதைவிட குறைந்த ஊடுருவல் மருத்துவ செயல்முறை (advanced minimally invasive procedures) அதிக திறனுள்ளதாகவும், பயனளிப்பதாகவும் இருக்கின்றன. இருந்தாலும், இதற்கு முன்னதாகவே, பிறவிக் குறைபாட்டை சரிசெய்வதற்கான திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் ஒரு நோயாளிக்கு இந்த மருத்துவச் செயல்முறையை மேற்கொள்வது மிகவும் கடினமானது. பெரும் இடர்ப்பாடுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அப்படியான நிலையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என்றார்.

இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி குறித்து பேசிய சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்... ``வயது முதிர்ந்தோர் அதிக ரிஸ்க்கான அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். இது குறித்த அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில் அதி உயர்தரத் தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. ஆகவே, எப்படிப்பட்ட அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டு குறைவான காலத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யுமளவுக்கு தரமான சிகிச்சையை வழங்குகிறோம். குறைந்த ஊடுருவல் மருத்துவ சிகிச்சை, இதய பாதிப்புகளைக் குணமாக்க உதவுகிறது. இத்தொழில்நுட்ப யுக்தியைப் பயன்படுத்தி 75 வயதுப் பெண்ணுக்கு சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்தியிருக்கிற மருத்துவர் சக்திவேல் மற்றும் அவரின் குழுவினரை நான் பெரிதும் பாராட்டுகிறேன். வயது முதிர்ந்த இப்பெண்ணின் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது இந்த வெற்றிகர சிகிச்சையின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது” என்று கூறினார்.
வெற்றிகரமாக நடைபெற்ற இந்த மருத்துவச் செயல்முறை நடைபெற்ற நாளிலிருந்து 3வது நாளன்று இப்பெண்மணி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சீரற்ற இதயத்துடிப்பு பிரச்னையிலிருந்து இப்பெண்மணி மீண்டிருக்கிறார். இப்பிரச்னைக்காக இதுவரை அவர் எடுத்துக்கொண்டிருந்த மருந்துகளும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன'' என்றார்.