மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

தண்டு இல்லை...தண்டு மாதிரி !கே.யுவராஜன் படங்கள் : பிள்ளை

மாயா டீச்சரின் வீட்டு வரவேற்பறையில் இரண்டு வாழைத்தார்கள் இருந்தன. உள்ளே நுழைந்ததும் அதுதான் கண்ணில் பட்டது. “என்ன டீச்சர், வாழைப்பழம் பிசினசில் இறங்கிட்டீங்களா?” என்று கேட்டான் கதிர்.

“விவசாய நண்பர் ஒருத்தர் அன்பளிப்பாகக் கொடுத்தார். வீட்டுக்குப் போகும்போது ஆளுக்கு ஒரு டஜன் எடுத்துட்டுப் போங்க” என்று அன்புக் கட்டளை போட்டார் டீச்சர்.

“இது தெரிஞ்சிருந்தா இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டேனே” என்றான் அருண்.

“வாழைப்பழம் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? நீங்க கொடுங்க டீச்சர்” என்ற கயல், ஒரு பழத்தைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“இந்தியாவில்தான் வாழைப்பழம் அதிகமா விளையுதாமே நிஜமா?” என்று கேட்டாள் ஷாலினி.

“ஆமாம். உலகின் மொத்த உற்பத்தியில், 24 சதவிகிதம் இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. ஆனால், இதன் தாயகம் இந்தோனேஷியா அருகே இருக்கும் பப்புவா நியூ கினி (Papua New Guinea). வாழை, வெப்பமண்டலப் பகுதியில் நன்றாக வளரும். ஒரு வாழை மரம் எப்படி உருவாகுது எனப் பார்க்கலாம் வாங்க” என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மேஜை மீது சுருண்டிருந்த மந்திரக் கம்பளம், வாழை இலை போல விரிந்துகொண்டது. ஐந்து பேரும் அதில் ஏறி அமர்ந்ததும், மீண்டும் சுருண்டு, ஜன்னல் வழியாகப் பறந்தது.

“காட்டுப் பழமாக இருந்து பயிர்த் தாவரமாக  மாறியவற்றில் வாழையும் ஒன்று. இதன் அறிவியல் பெயர், மூசா (Musa). வகைகள், விளையும் இடங்களைப் பொருத்து, பல்வேறு துணைப் பெயர்கள் உண்டு.பப்புவா நியூ கினியாவில் நடந்த அகழ்வாராய்ச்சியின்படி, கி.மு.7,000 ஆண்டுகளிலேயே வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அங்கிருந்து இந்தோனேஷியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குப் பரவியது. மாமன்னர் அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்தபோது, வாழைப்பழம் சாப்பிட்டார் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்தியாவுக்கு வந்த முகலாயர்கள், போர்ச்சுகீசியர்கள், அரேபியர்கள் மூலம் உலகம் முழுவதும் வாழை பரவியது” என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் ஒரு தோட்டத்தில் இறங்கியது. அங்கே, நடுவதற்கான வாழைக்கன்றுகள் ஒரு பக்கமாக வைக்கப்பட்டிருந்தன.ஒரு கன்றைக் கையில் எடுத்த டீச்சர், “வாழைமரம் என்று சொல்லப்பட்டாலும் இது, பூண்டுத் தாவரம் வகையில் வருகிறது. கிழங்கிலிருந்தே இலைகளாக உருவாகி  வாழைக்கன்றுகளாக மாறும். இதை, பூச்சிக்கொல்லி மருந்துகளில் முக்கி எடுத்து நடுவார்கள். அப்படி நடுவதால், வளரும்போது பூச்சித் தாக்குதல் குறைவாக இருக்கும். ரகத்தைப் பொருத்து ஏக்கருக்கு 400 முதல் 800 வாழைக்கன்றுகள் நடப்படும்” என்றார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!


கிழங்குடன் இருந்த அந்த வாழைக்கன்றை எல்லோரும் வாங்கிப் பார்த்தார்கள். “வாழையின் வேர்கள் இப்படித்தான் மெல்லியதாக இருக்குமா டீச்சர்?” என்று கேட்டான் கதிர்.

“ஆமாம் கதிர். மாமரம், பலாமரம் போல உறுதியான ஆணி வேர்கள் வாழை மரத்துக்குக் கிடையாது. இதன் தண்டும் மற்ற மரங்களிலிருந்து வேறுபட்டது. வாழையின் தண்டுப் பகுதி, மண்ணுக்கு உள்ளேயே வளர்ந்து மேலே வரும். மேலே இருக்கும் நீளமான பகுதி, உண்மையில் தண்டே கிடையாது. இதை, போலித்தண்டு என்பார்கள். அதாவது, இலைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து உருவான ஒரு பகுதி. இனத்தின் வகையைப் பொருத்து 2 முதல் 8 மீட்டர் உயரம்கூட இந்தப் போலித்தண்டுகள் வளரும். அதனால்தான் மற்ற தண்டுகள் போல உறுதியாக இருப்பது இல்லை. மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலே, முறிந்து விழுந்துவிடும். பூச்சித் தாக்குதலைவிட காற்றின் தாக்குதல்தான் வாழைத் தோட்டங்களை அதிகம் பாதிக்கும்” என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், அவர்களை அருகே இருந்த இன்னொரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கே, நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களில் காய்களும் பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

“போலித்தண்டு குறிப்பிட்ட உயரம் வளர்ந்த பிறகு, அதிலிருந்து பிரிந்து தனி இலைகள் உருவாகும். இது, இளம் குருத்தாக இருக்கும்போது சுருண்டிருக்கும். இலைகளில் நரம்புகள் சீரான வரிசையில் தோன்றத் தோன்ற நன்கு விரிந்துகொள்ளும். வாழையின் பூக்கள், கொத்தாகப் பூக்கும். பூந்தண்டு எனப்படும் இதன் அடிப் பகுதியில் இருப்பவை, ஆண் பூக்கள். இதுதான் முதலில் உருவாகும். பின்னர், மேல் பகுதியில் பெண் பூக்கள் உருவாகும். இந்தப் பூக்களிலிருந்து காய்கள் உருவாகும். இதுதான்  சீப்புகள் எனப்படும் வாழைத்தார். ஒரு வாழைக்கன்று இந்த நிலையை அடைவதற்கு 6 முதல் 8 மாதங்கள்  ஆகும். இந்த 8 மாதங்களில் பயங்கரக் காற்று, பூச்சித் தாக்குதல் எனப் பல சோதனைகளில் இருந்து தப்பி வருவதுதான் நாம் சாப்பிடும் வாழைப்பழம்” என்றார் டீச்சர்.

“வாழைப்பழத்தில் இருக்கும் விதைகள், இவ்வளவு சின்னதாக இருக்கே ஏன் டீச்சர்?” என்று கேட்டான் அருண்.

“ஆரம்பத்திலிருந்த காட்டு வாழைப்பழங்கள், பெரிய விதைகளோடுதான் இருந்தன. இதில், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலும் குறைவு. மனிதர்கள் பயிர் செய்ய ஆரம்பித்த பிறகு, பல்வேறு சிற்றினங்கள் தோன்றின. கிழங்கு மூலம் இனவிருத்தி செய்யப்பட்டதால், விதைகளின் அளவும் குறைந்துபோனது. இப்போது இருக்கும் வாழை வகைகள் எல்லாமே சிற்றினங்கள்தான். இப்படி உலக அளவில் 70 வகையான வாழைகள் இருக்கின்றன” என்றார் டீச்சர்.

அவர்கள், தோட்டத்தின் ஒரு பக்கமாக அமர்ந்துகொண்டார்கள். “வாழை இலையில் சாப்பிடுவது கெளரவத்துக்கா டீச்சர்? அதிலும் தலைவாழை இலையில்தான் விருந்து பரிமாறணும்னு சொல்றாங்களே” என்றாள் கயல்.

‘‘கெளரவம் என்பது பின்னாளில் உருவானது கயல். வாழை இலையில் சுரக்கும் அமிலங்கள், கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. அதில் உணவை வைத்துச் சாப்பிடும்போது, உணவுடன் கலந்து செல்லும் அமிலங்கள், உடலில் இருக்கும் நச்சுக் கிருமிகளை அழிக்கும். நாம் பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் டிபன் பாக்ஸில் சாப்பாடு கொண்டுபோறதைவிட, வாழை இலையில் கட்டி எடுத்துப்போனால் இன்னும் நல்லது. ஏன்னா, நேரம் செல்லச் செல்ல, சமைத்த உணவில் உருவாகும் சில பாக்டீரியாக்களை வாழை இலையில் உள்ள அமிலங்கள் கட்டுப்படுத்தும்” என்றார் டீச்சர்.

‘‘தீக்காயம், புண் போன்றவற்றைக் குணப்படுத்தவும் வாழை இலை பயன்படுகிறது எனப் படிச்சிருக்கேன்” என்றான் அருண்.‘‘வாழைத்தண்டு, சிறுநீரகத்தில் இருக்கும் கற்களைக் கரைக்கும். வாழைப்பூ, வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பூ ரொம்ப நல்லது. வாழைக்காயும் நல்ல உணவுதான். ஆனால், வயதானவர்கள் குறைவாகப் பயன்படுத்தணும். வாழைப்பழம் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. குளுக்கோஸ், பொட்டாசியம், பல்வேறு வைட்டமின்கள் நிறைந்தது. செவ்வாழை, கற்பூரவல்லி, பேயன் என ஒவ்வொரு வகையிலும் தனி ருசியும் தனிச் சத்தும் இருக்கு” என்றார் டீச்சர்.

“மாம்பழம் போல வாழைப்பழத்தையும் செயற்கை முறையில் பழுக்கவைக்கிறதா சொல்றது உண்மையா டீச்சர்?” என்று கேட்டாள் கயல்.“ஆங்காங்கே அப்படி நடப்பது உண்மைதான்.  வெளிநாடுகளுக்கும் தொலைதூர இடங்களுக்கும் அனுப்பும் பழங்களை, பாதி காய் நிலையிலேயே பறித்து, பெட்டிகளில் அடைச்சுடுவாங்க. தேவைப்படும் இடங்களில், எத்திலீன் (Ethylene) வாயுவை செலுத்தி பழுக்கவைப்பாங்க.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

இது, பெரிய அளவில் தீங்கு ஏற்படுத்தாது. ஆனால், அசிட்டிலீன் (Acetylene), கால்சியம் கார்பைடு (Calcium carbide) போன்றவற்றால் பழுக்கவைக்கப்படும் பழங்கள், பல்வேறு நோய்களை உருவாக்கும். பழத்தின் மேல் பகுதியில் வாழைக் கறைகள் இல்லாமல் இருக்க, பிளீச்சிங் செய்றாங்க. தோலை நீக்கிதான் சாப்பிடுகிறோம் என்றாலும் அதுவும் கெடுதல்தான்” என்றார் டீச்சர்.

“டீச்சர் வீட்டில் இருக்கும் பழம் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. அது நிச்சயமா, இயற்கை முறையில் பழுத்ததாதான் இருக்கும்” என்றாள் ஷாலினி.

“அதனால், வீட்டுக்குப் போனதும் மறக்காமல் ஆளுக்கு ஒரு டஜன் கொண்டுபோகணும்” என்று மீண்டும் அன்புக் கட்டளை போட்டார் மாயா டீச்சர்.```