மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - ரஸ்கின் பாண்ட்

ஆயிஜா இரா.நடராசன் படங்கள் : பாரதிராஜா

அந்தச் சிறுவன், தனது நான்காவது வயதிலேயே சரளமாக ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கக் கற்றிருந்தான். அவன் அக்கா, எலன் (Ellen) ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவளது ஆங்கில பாடப் புத்தகத்தில் இருந்த கதைகள், கவிதைகள் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

அவர்கள், ஆங்கிலோ இந்திய மரபின் முதல் சந்ததியினர். ரஸ்கினின் அப்பா, ஆங்கிலேய விமானப் படையில் இருந்த அதிகாரி. அம்மா, இந்திய வம்சாவளி. விரைவில், குஜராத்திலிருந்து தனது பாட்டி வீடு இருந்த சிம்லாவுக்கு அனுப்பப்பட்டான்.

இமயமலை அடிவாரத்தில், இயற்கை எழிலான மலைகள் சூழ அமைந்திருந்தது, பாட்டியின் வீடு. அது, ரஸ்கின் மனதில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. மற்ற சிறுவர்களைப் போல ஒளிந்து பிடித்து விளையாடவில்லை அவன். ஆப்பிள் மரத்தில் கல்லெறிந்து பறித்துத் தின்று, பறவைகளைத் துரத்தவில்லை.   இயற்கைத் தாயின் உன்னத மடியில் மணிக்கணக்கில் இருப்பான். இயற்கை குறித்த தனது முதல் கவிதையை 4 வயதில் ஆங்கிலத்தில் எழுதினான்.

சுட்டி நாயகன் - ரஸ்கின் பாண்ட்

சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் ரஸ்கின் சேர்க்கப்பட்டான். அங்கே மூன்று நூலகங்கள் இருந்தன. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு என பெரிய படங்களோடு கூடிய அழகான வண்ணப் புத்தகங்கள் ஒரு நூலகத்தில் இருந்தன. ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்குத் தனி நூலகம். அங்கே படமும் எழுத்துகளும் கூடிய பல நூல்கள் உண்டு. பெரிய வகுப்பு மாணவர்களுக்கு நூற்றுக்கணக்கான கவிதை, நாவல், கதைகள் என மூன்றாவதாக ஒரு நூலகம், இரண்டாவது தளத்தில் இருந்தது.

ரஸ்கின், நான்காம் வகுப்பு தாண்டுவதற்குள் மூன்று நூலகங்களிலும் நுழைந்துவிட்டான். அவனைக் காணவில்லை என்று யாராவது தேடினால், நூலகத்தில் இருப்பான் என்று பதில் வரும். கதைகளையும் கவிதை நூல்களையும் விரும்பிப் படித்தான்.

ரஸ்கின் எழுதும் கவிதைகள் பெரும்பாலும் இயற்கை மீதான மனித ரசனையாக இருந்தன. கதைகளும் எழுதத் தொடங்கினான். ஏழாம் வகுப்பு படிக்கும்போது, தனது நண்பர்களுடன் சேர்ந்து, சொந்தக் கையெழுத்தில் ஒரு பத்திரிகையை ஆங்கிலத்தில் ஆரம்பித்தான். மூன்று நூலகங்களிலும் ஒவ்வொரு பிரதி. மாதம் ஒரு முறை அது முளைக்கும். அதற்கு, மாணவர்கள் மத்தியில் வாசகர்கள் இருந்தார்கள். கவிதை, குட்டிக் கதைகள், படங்களையும்கூட அதில் அவனே வரைந்தான்.

மாவட்ட, மாநில அளவிலான கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் ரஸ்கின் கலந்துகொள்வான். மற்றவர்களோ, அப்பா எழுதிக் கொடுத்தது, ஆசிரியை சொல்லி எழுதியவைகளைப் போட்டிக்கு மனப்பாடம் செய்வார்கள். ரஸ்கின் எப்போதுமே சொந்தமாகத்தான் எழுதுவான்.
ஆங்கில மாணவர்களுக்காக லண்டனில் இருந்து இரண்டு பரிசுகள் தருவார்கள். கவிதைக்காக, ‘இர்வின் டிவினிட்டி’ பரிசு.’ எட்டாம் வகுப்பு படிக்கும்போது அதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஸ்கின், தனது கவிதைகளை அனுப்பி வெற்றிபெற்றான். பள்ளியின் ‘வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்’ என்று பெயரும் பெற்றான்.

கதைகளுக்காக ஆங்கில மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசு, ‘ஹெய்லி இலக்கியப் பரிசு.’           12-ம் வகுப்பு மாணவர்களே திணறும் போட்டி அது. கல்லூரி மாணவர்களுக்கும் சேர்த்து நடத்தப்படும் அதில், 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ரஸ்கினின் கதை, வெற்றிக் கதையாக அறிவிக்கப்பட்டபோது, ‘பள்ளியின் டிக்கன்ஸ்’ என்ற பெயர் பெற்றான்.

கவிதை, கதைகளுக்காக வெற்றி மேல் வெற்றி பெற்ற ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond), பின்னாட்களில் சுட்டிகளின் ஆதர்சன எழுத்தாளராக உருவெடுத்தார்.