மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

நாங்க மூணு பேர்!- கே.யுவராஜன், ஓவியம்: பிள்ளை

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

தொலைக்காட்சியில் சீறிப் பாய்ந்துசென்றது அந்தச் சிறுத்தை.

 'யப்பா... என்ன வேகம்... என்ன வேகம்' என்றான் கதிர்.

'டீச்சர், எனக்கு ஒரு சந்தேகம். சீட்டா  (Cheetah), லியோபார்டு (Leopard), ஜாகுவார் (Jaguar) என ஆங்கிலத்தில் மூணு விதமா சொல்றாங்களே... எல்லாமே ஒண்ணுதானா?' என்று கேட்டாள் கயல்.

'இல்லே... இல்லே' என்று துள்ளியபடி வந்தது கம்பளம்.

'இது என்ன அதிசயம்? எப்பவும் நாங்களா தொடுகிற வரைக்கும் கண்டுக்காம இருப்பே. இன்னிக்கி நீயா முன்னாடி வர்றே?' என்று ஆச்சர்யப்பட்டார் மாயா டீச்சர்.

'பின்னே, கடுகில் ஆரம்பிச்சு கருந்துளை வரைக்கும் கூட்டிட்டுப் போனாலும் எனக்கு ஒரு டயலாக்கூட வைக்கிறதே இல்லை. அதான், நானா முன்வந்துட்டேன்' என்றது கம்பளம்.

'சரி, இப்போ என்ன செய்யப்போறே?' என்று கேட்டாள் ஷாலினி.

'சிறுத்தைக்கும் வேங்கைக்கும் என்ன வித்தியாசம்னு காட்டப்போறேன். மேலே ஏறி உட்காருங்க' என்ற கம்பளத்தின் உருவம் சிறுத்தை போல மாறியது.

'அது எனக்கே தெரியுமே... 'சிறுத்தை,’ கார்த்தி அங்கிள் நடிச்ச படம். 'வேங்கை,’ தனுஷ் அண்ணா நடிச்ச படம்' என்றான் அருண்.

'இவன் தனியா நின்னு ஜோக் அடிச்சுக்கிட்டு இருக்கட்டும். நாம போகலாம்' என்றபடி மந்திரக் கம்பளம் சீறிப் பாய, ஜம்ப் பண்ணி தொத்திக் கொண்டான் அருண்.

கண்களை மூடித் திறக்கும் முன்பு, அவர்கள் ஒரு காட்டில், மரத்தின் மீது அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு அடுத்த மரத்தில், இளம் மஞ்சள் நிறத்தில் அது படுத்தவாறு எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

'லன்ச் டைம்ல வந்திருக்கோம் போல' என்றான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மாயா டீச்சர் பேசினார், 'பூனைக் குடும்பத்தில், 'அசினோனிக்ஸ்’  (Acinonyx)  என்ற பேரினத்தில் வருவதுதான், அந்த மரத்தில் நீங்கள் பார்க்கிற 'சீட்டா’ என்கிற வேங்கைப் புலி. சிவிங்கிப் புலி என்றும் சொல்வாங்க. காரணம், ஒட்டகச்சிவிங்கி மாதிரி தலை சின்னதாகவும் உடம்பு நீளமாகவும்  கால்கள் ஒல்லியாகவும்  இருக்கும். பிறக்கும்போது 300 கிராமும் வளர்ந்த பிறகு 65 கிலோ வரையும் இருக்கும். குறைவான எடைதான் இதனோட ப்ளஸ். மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். வேட்டையாடிய உணவைத் தூக்கிக்கிட்டு, அசால்ட்டா மரத்தின் மேலே ஏறிடும்' என்றார் டீச்சர்.

'இந்த வேங்கை ஆணா, பெண்ணா டீச்சர்?' என்று கேட்டாள் கயல்.

'இப்படி ஒற்றையாக இருக்கும்போது கண்டுபிடிக்கிறது கஷ்டம் கயல். கும்பலில் சொல்லலாம்னா, ஆணைவிட, பெண் வேங்கையின் தலை பெரியதாக இருக்கும்' என்றார் டீச்சர்.

'ஆப்பிரிக்காவில் தோன்றி, இந்தியாவிலும் பிற நாட்டின் காடுகளிலும் பரவிய இனம் இது.  இப்போ, இந்தியாவில் கிட்டத்தட்ட அழிந்துபோச்சு. ஆப்பிரிக்காவிலும் குறைஞ்ச எண்ணிக்கையிலேதான் இருக்கு. சரி, ஏறிக்கங்க. சிறுத்தையைப் பார்க்கப் போகலாம்' என்று சுறுசுறுப்பானது கம்பளம்.

இப்போது, அவர்கள் ஒரு புதர் அருகே இருந்தார்கள். சற்றுத் தள்ளி, உறக்கத்தில் இருந்தது அந்தச் சிறுத்தை. சீரான மூச்சில், அதன் வயிறு ஏறி இறங்கியது.        

'பூனைக் குடும்பத்தில், பேந்த்தரா  (Panthera) என்ற வகையில் வருவது சிங்கம், புலி, ஜாகுவார் மற்றும் லியோபார்டு என்கிற இந்தச் சிறுத்தை. ஒரு காலத்தில் சைபீரியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை என எல்லாக் காடுகளிலும் ராஜ்ஜியம் செய்த விலங்கு. மனிதர்களால் வேட்டையாடப்பட்டு, அழிவின் விளிம்புக்கு வந்துடுச்சு. நீங்க ஏற்கெனவே பார்த்த வேங்கைக்கும் இதற்கும் எத்தனை  வித்தியாசம் இருக்கு? கண்டுபிடிங்க பார்ப்போம்' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

'நான் சொல்றேன். வேங்கையின் தலை சின்னதாக இருந்துச்சு. இதுக்கு, புலி மாதிரி பெருசா இருக்கு. கால்கள், குண்டாகவும் கொஞ்சம் குட்டையாகவும் இருக்கு' என்றாள் ஷாலினி.

'இன்னொரு வித்தியாசம், புள்ளிகள். வேங்கையின் உடம்பில் பொட்டு வெச்ச மாதிரி கரும்புள்ளிகள் இருந்துச்சு. இதன் உடம்பில் ஒழுங்கில்லாத வட்டங்களாக இருக்கு' என்றான் அருண்.

'சரியாச் சொன்னீங்க. இதன் எடை 90 கிலோவுக்கு மேலே இருக்கும். ஓட்ட வேகம், மணிக்கு 58 கிலோமீட்டர்தான். அடுத்து, ஜாகுவாரைப் பார்க்கப் போகலாம்' என்ற கம்பளம், அவர்களைச் சுருட்டிக்கொண்டு பறந்தது.

அவர்கள் இறங்கிய இடத்தில், பெரிய கர்ஜனை வரவேற்றது. சற்றுத் தள்ளி திரும்பிப் பார்த்தால், பாறை மீது நின்றவாறு முறைத்தது ஜாகுவார்.

'அசப்பில் புலி மாதிரியே இருக்கு. உடம்பில் இருக்கிற புள்ளிகள்தான், சிறுத்தைக்கு இருக்கிற மாதிரி ஒழுங்கில்லாத வட்டங்களாக இருக்கு' என்றான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

'நல்லாக் கவனிங்க... அந்த வட்டங்களிலும் சின்ன வேறுபாடு இருக்கு. இதன் வட்டங்களுக்கு நடுவில் சின்னப் புள்ளி இருக்கும். சிறுத்தைக்கு அப்படி இருக்காது. இதன் எடை, சராசரியாக 96 கிலோ. சில ஜாகுவார்கள் 150 கிலோவுக்கு மேலேயும் இருக்கும்.  300 கிலோ காட்டு எருமையை வேட்டையாடி, கவ்வி இழுத்துட்டுப் போகும்' என்றது கம்பளம்.

'இது, அமெரிக்கக் காடுகளில் தோன்றிய பேந்த்தரா இனம். சிங்கம், புலிக்கு அடுத்து அதிக எடைகொண்ட பூனைப் பேரினம். ஜாகுவார் என்கிற சொல், தென் அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த 'துபிகுவாரானி’  (Tupi–Guarani) என்ற பழங்குடியினரின் மொழியில், 'யாகுவாரா’ என்ற சொல்லில் இருந்து வந்தது. இதற்கு, மாமிசம் சாப்பிடும் விலங்கு என்று பொருள். அமெரிக்கக் காடுகளில் சிங்கமோ, புலியோ கிடையாது. அதனால், பயங்கரமான உருவத்தில் மாமிசம் சாப்பிட்ட இந்த விலங்குக்கு இப்படிப் பெயர் வெச்சாங்க. இதுவும் அழிவுப் பட்டியலில் இருக்கு' என்றார் டீச்சர்.

'எவ்வளவு வலிமையான, பயங்கரமான விலங்கையும் மனிதன் அழிச்சிடுறானே... இதை அவனுடைய சாதனை எனச் சொல்வதா? பயங்கர குணம் எனச் சொல்வதா?' என்றாள் கயல்.

'ஜாகுவாரைவிட பயங்கரமான கேள்வியைக் கேட்கறே. ஜாகுவாரோடு தொடர்புடைய இன்னொரு விலங்கைப் பார்த்துவிட்டுக் கிளம்புவோம்' என்றது கம்பளம்.

'கிர்ர்ர்ர்’ என உறுமிய அந்தக் கறுப்பு உருவத்தையும் அதன் கண்களையும் பார்க்கவே பயமாக இருந்தது. 'இதை எனக்குத் தெரியுமே... கருஞ்சிறுத்தை' என்றான் அருண்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

'ஆமாம்! பிளாக் பேந்தர்  (Black panther). இது, தனி இனம் கிடையாது. புலி, சிங்கம் போன்ற இனங்களில் மெலனின் குறைபாடு காரணமாக வெள்ளை நிறத்துக்கு மாறும் இல்லியா... அதே மாதிரி, ஜாகுவாருக்கு ஏற்படும் மெலனின் குறைபாடே கருஞ்சிறுத்தைகள். பார்க்க முழுவதும் கருமையாகத்  தெரிஞ்சாலும் இதன் உடலிலும் வட்டப் புள்ளிகள் இருக்கு' என்றார் மாயா டீச்சர்.

அதன் அருகேசென்று குனிந்து பார்த்த மந்திரக் கம்பளம், 'ஆமாம் டீச்சர், புள்ளிகள் இருக்கு' என்றது.

முன்பைவிட சத்தமாக, 'கிர்ர்ர்ர்’ என்று அந்தக் கருஞ்சிறுத்தை உறும, வேகமாகப் பறந்துவந்த மந்திரக் கம்பளம், அவர்களைச் சுமந்துகொண்டு கிளம்பியது.