மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.கணேசன்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீட்டில் துணிகளைத் துவைப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார் மாயா டீச்சர். பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு... படிப்பில் பிஸியாக இருந்த சுட்டிகள், இடையில்  மாயா டீச்சர் வீட்டுக்குப் படையெடுத்து இருந்தார்கள்.

வாஷிங் மிஷின் முன்னால் நின்றிருந்த மாயா டீச்சரைச் சூழ்ந்துகொண்ட சுட்டிகள், டீச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கணேஷ், ''நம்ம பிரசன்னாவுக்கு இந்த துவைக்கிற கவலை எல்லாம் கிடையாதுப்பா. இந்த டிரெஸ்ஸ போன தீபாவளிக்குப் போட ஆரம்பிச்சான் அதுலேர்ந்து கழட்டவே இல்லையே.'' என பிரசன்னாவை வாரினான்.

##~##

''டீச்சர், ஏன் துணிகளைத் துவைக்கணும்?'' என்றாள் மது.

''முதல் முதலில் மனிதன் விலங்குகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட இலை மற்றும் தழைகளால் தனது உடலை மறைத்துக் கொண்டான். இந்தப் பழக்கம் நாளடைவில் ஆடை அணியும் பழக்கமாக உருவெடுத்தது. துணியால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிவதில் இருந்து அவற்றைத் துவைக்கும் பழக்கத்தை மேற் கொண்டான்.

துணிகளில் சேரும் அழுக்கு, துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அவற்றைப் போக்க, துணிகளின் மீது வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, அதன் மூலம் துணிகளில் படிந்த அழுக்கினை நீக்கினார்கள். அந்த அடிப்படைக் கான்செப்ட் தான் இவ்வளவு காலங்கள் கடந்து வாஷிங் மிஷின் வழி நடைபெறுகிறது. நீர்நிலைகள் உள்ள இடங்களில்... துணிகளை நீரில் நனைத்து, பாறைகளில் அடித்து, துணியில் உள்ள அழுக்கை நீக்கினார்கள். சில இடங்களில் துணிகளை நனைத்து அவற்றைத் தடியால் அடித்தும் துவைத் தார்கள். (வட மாநிலங்களில் இப்போதும் அப்படித்தான்). இன்னும் சிலரோ சுத்தமான கால்களால் துணிகளை மிதித்துத் துவைத்தார்கள்.

அந்தக் காலத்தில் துணி துவைப்பதற்கு என்றே தனியாக ஆட்களை வேலைக்கு அமர்த்தினார்கள். தனியாக துவைப்பதற்கென ஊருக்கு வெளியே  குறிப்பிட்ட  இடங்களை ஒதுக்கி இருந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே துணிகளைத் துவைப்பதற்கு பணிப் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். சலவைத் தொழில் என்பது அந்தக் காலத்தில் இருந்தே நல்ல வருமானத்தைக் கொடுக்கும் தொழிலாக இருந்து வந்துள்ளது. பொதுவாக, துணிகளை தினசரியும் வாரத்துக்கு ஒரு முறையும் துவைக்கும் வழக்கம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.'' என்று டீச்சர் சொன்னார்.

''டீச்சர், இந்த வாஷிங் மிஷின்களைப் பத்திச் சொல்லுங்க.'' என்றாள் சரசு.

'

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

'வீட்டு உபயோகப் பொருட்களில் நேரத்தையும் உடல் அசதியையும் தவிர்க்கும் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது இந்த வாஷிங் மிஷின். அமெரிக்கன் எலெக்ட்ரிக் கம்பெனி 1927-ல் மட்டும் ஒன்பது லட்சம் சலவை இயந்திரங்களை விற்றதில் இருந்து அவற்றின் தேவையை உணர்ந்து கொள்ளலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற பணிகளுக்கு வேலையாட்கள் கிடைப்பது அரிது. அதுவும் தவிர, இதற்கான கட்டணம் மிகவும் அதிகமானது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துவந்தனர். முதல் முதலாக மரத் தொட்டியால் செய்யப்பட்ட சலவை இயந்திரத்தை 1782-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த எச்.சிட்கியர் வடிவமைத்தார். 1846-ல் கைகளால் சுழற்றி இயக்கப்படும் சலவை இயந்திரம் வடிவமைக் கப்பட்டு, காப்புரிமம் பெற்றார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஹாமில்டன் ஸ்மித் 1858-ல் வாஷிங் மிஷினைக் கண்டுபிடித்தார். அடுத்து, மோட்டாருடன் இணைக்கப்பட்ட தானியங்கி சலவை இயந்திரம் 1907-ல் வடிவமைக்கப்பட்டது. இதில், தண்ணீர் மின்சாரக் கம்பிகளில் பட்டு, அடிக்கடி விபத்து ஏற்பட்டது. அதிலே இன்னும் சில மாற்றங்களைச் செய்து, அடுத்து வந்த ஆண்டுகளில் பலவிதமான வசதிகளுடன்  மேம்படுத்தப்பட்டன. 1950-களின் தொடக்கத்தில், அமெரிக்க நிறுவனம் பாதுகாப்பான சுழற்சியுடன் துணிகளை உலரச் செய்து கொடுக்கும் இயந்திரத்தை வடிவமைத்தது. தலைமுடி மற்றும் கைகள் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டு ஏற்படும் விபத்தினைத் தவிர்க்கும் பாதுகாப்பு வசதிகளும் இதில் இருந்தன. 1957-ல் ஜி.இ. நிறுவனம் ஐந்து விதமான சுவிட்ச் கன்ட்ரோலுடன் கூடிய மிகவும் பாதுகாப்பான சலவை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது.'' என்றார் டீச்சர்.

'' இந்த மிஷின் எப்படி செயல்படுதுன்னு சொல்லுங்க டீச்சர்.'' என்றான் பிரசன்னா.

''வாஷிங் மிஷின்களில் மூன்று வகைகள் உள்ளன. தொடக்க காலங்களில் ஒரு நீளமான குழாய்... துணிகளைச் சுழலவைத்துத் துவைக்கும். இதை அஜிடேட்டர் வகை என்பார்கள். இப்போது உள்ள வகையின் பெயர் பல்சேட்டர். இதில், பிளாஸ்டிக்கினால் ஆன டிஸ்க் இருக்கும். அது சுழன்று துணிகளைத் துவைக்கும். மேலே சொன்ன ரெண்டு வகைகளும் மேல் பக்க மூடியைத் திறந்து, அதில் துணிகளைப் போட்டு துவைப்பார்கள். சமீப காலங்களில் முன் பக்கக் கதவு வழியாக துணிகளைப் போட்டு துவைக்கிறார்கள். இந்த மாடலை டம்பிள் வாஷிங் மிஷின் என்கிறார்கள். இதுதான் இப்போது அதிகமாக விற்பனையாகும் மாடலாகும்.

அடிப்படையில் எல்லா வாஷிங் மிஷின்களிலும் உள்ள முக்கியமான பகுதிகள் அஜிடேட்டர் (கிரீவீtணீtஷீக்ஷீ), உள் மற்றும் வெளித் தொட்டிகள் (ஜிuதீ), தண்ணீர் உள்ளே வர மற்றும் வெளியேற என ரெண்டு குழாய்கள், குளிர்ந்த நீர் மற்றும் சூடு நீர் செல்வதற் கான தனிக் குழாய் கள். இது தவிர, சுழலும் வேகத்தை அதிகப் படுத்த, துணிகளின் தன்மைக்கேற்ப சாஃப்ட், மீடியம், ஹார்டு என சிறப்புத் தேவைகளுக்கான பல்வேறு வகையான ஸ்விட்ச் கன்ட்ரோல்கள் கொண்ட மின்சாரப் பேனல்கள், மின் மோட்டார், புல்லி என இவை எல்லாம் கொண்டதுதான் வாஷிங் மிஷின். இதில் ஒவ்வொரு மாடலுக்கும் அதன் சிறப்புக்கு ஏற்ப வேறு சில பாகங்களும் இருக்கும்.'' என்றார் மாயா டீச்சர்.

''துணிகள் எப்படி வெளுக்கின்றன?'' இந்தக் கேள்வி சரசுவிடமிருந்து வர...

ஏற்கெனவே சோப்புக் கரைசல் தண்ணீரை வாஷிங் மிஷினில் ஊற்றி வைத்திருந்த டீச்சர், தான் கையில் வைத்திருந்த துணிகளுடன் எல்லோரையும் மந்திரக் கம்பளத்தின் உதவியால் மிகவும் குட்டியாக்கி, வாஷிங் மிஷினுக்குள் திணித்தார். துணிகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டு உள்ளே போன அவர்களுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.

''மிஷினை ஆன் பண்ணுங்க டீச்சர்... அப்படியாவது இவங்க டிரெஸ்ஸைத் துவைக்கலாம்'' என்று கத்தியபடியே உள்ளே போனாள் சரண்யா.

உள்ளே... தண்ணீர் தொட்டி போல இருந்தது. அவர்களை மிஷினுக்குள் திணித்த வுடன் வாஷிங் மிஷினை மூடிய டீச்சர், மிஷினை ஆன் செய்தார். இப்போது  மிஷினின் உள்ளே இருந்த உள் தொட்டி, மின் மோட்டாரின் மூலம் சுழல ஆரம்பித்தது. அதனால் தண்ணீரும் சுழல, துணிகளுடன் சேர்ந்து சுட்டிகளும் சுனாமியில் மாட்டிய கப்பல்கள் போல  சுழன்றபடி இருந்தார்கள். சில நிமிடங்கள் சுழன்ற பிறகு, சற்று சுழற்சி நிற்க, அப்பாடா என சுட்டிகள் ஆசுவாசப் படுத்திக்கொண்டிருக்கும்போதே... தண்ணீர் எதிர்ப் புறமாகச் சுழலத் தொடங்கியது. இப்படி பலமுறை தண்ணீர் சுழலச் சுழல, சுட்டிகளின் கண் முன்னே துணிகளில் இருந்த அழுக்குகள் வெளியேறுவதைக் காணமுடிந்தது. சோப்புத் தண்ணீரில் இருக்கும் என்சைம்கள் துணிகளின் இழைகளுக்கு உள்ளே புகுந்து, நுண்ணிய அழுக்குகளையும் அப்புறப்படுத்தியதைக் கண்டனர் சுட்டிகள். ''அஜிடேட்டரின் முக்கியமான வேலை... உள் தொட்டிக்குள்ளே துணிகளை முன் பின்னாகச் சுழலவைப்பதும், மேல் மற்றும் கீழாக எல்லா கோணங்களிலும் புரட்டிப் போடுவதும் ஆகும்.  அஜிடேட்டர் சுழலும் திசைக்கு எதிர்ப் புறமாக அழுக்குத் தண்ணீர் வெளியேறுகிறது. அப்படி வெளியேறும்போது துணிகளில் படிந்து இருந்த அழுக்குகளும் வெளியேறி, 'அவுட்டர் டப்’பில் சேர்கின்றன.'' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''டீச்சர்... அஜிடேட்டர் சுற்றும்போது தண்ணீரும் அதே திசையில் தானே டீச்சர் சுற்ற வேண்டும்?'' என்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான் பிரசன்னா.

'' ஆமாம்... இருந்தாலும் இங்கு முக்கியமான ஓர் அறிவியல் சக்தி பயன்படுகிறது. அதுதான் 'மைய விலக்கு விசை.’ அஜிடேட்டருக்கு எதிர் திசையில் தண்ணீர் சுழலும்போது, அதில் இருக்கும் அழுக்குகள் உள் தொட்டியில் இருக்கும் எண்ணற்ற துளைகள் வழியாக வெளியேறி, வெளித் தொட்டியில் சேருகின்றன. அங்கிருந்து வடி குழாய் மூலம்  அவை வெளியேற்றப்படும்.'' என்றார் டீச்சர்.

தங்கள் ஆடையில் படிந்திருந்த அழுக்குகள் வெளியேறிய பிறகு, ஆடைகள் பளிச்சென இருந்ததை சுட்டிகள் கவனித்தனர்.  இடங்களில் அழுக்கும் சோப்புத் தூளும் படிந்திருப்பதைக் கண்டார்கள். 'அப்பாடி! எல்லாம் முடிஞ்சுதுபோல...’ என தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர் சுட்டிகள். ஆனால், அது சில நிமிடங்கள் தான் நீடித்தது. அந்தச் சமயத்தில் இரண்டாவது முறையாகத் தண்ணீர் உள் தொட்டிக்கு வர ஆரம்பித்தது. இந்த முறை சோப்புக் கரைசல் இல்லாமல் வந்ததால், சுட்டிகள் கொஞ்சம் தைரியமாக இருந்தார்கள். ஒரு முறை அனுபவப்பட்டுவிட்ட தால், இந்த முறை அஜிடேட்டர் அலசல், கலக்கல் பற்றிய பயம் அவர்களுக்கு இல்லை. கொஞ்சம் நல்ல நீரில் துணிகளோடு துணியாக மிதந்தபடி சுழன்றார்கள். இப்போது துணிகளில் ஆங்காங்கே படிந்திருந்த சோப்புத் துகள்களும் அழுக்கும் நீங்கி வெளித் தொட்டிக்குப் போயின.

''இது ஜாலியா இருக்கு இல்லே'' என்றாள் மது.

''ஆமாம்!'' என்ற கணேஷ், ''எப்படி நம்மைக் காய வைப்பாங்க?'' என்ற டவுட்டைக் கிளப்பினான்.

''கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.'' என்றார் டீச்சர்.

இப்போது ரெண்டாவது சுழற்சி முடிந்து, மிஷின் மூன்றாவது சுழற்சிக்குத் தயாரானது. இந்த முறை உலர் சுழற்சிதான். இதன் மூலம் துணிகளில் உள்ள நீர், முடிந்தவரை வெளித்தொட்டிக்கு வெளியேற்றப்படுகிறது. அஜிடேட்டர் இந்த முறை மிகவும் விரைவாகச் செயல்பட்டு, துணிகளில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை முடிந்தவரை வெளியேற்ற வகை செய்கிறது. இதனால் துணிகள் உலரத் தயாராகின்றன.

''அவ்வளவுதானா டீச்சர்?'' என்றாள் மது.

''உங்களைத் துவைச்சாச்சு, காயப்போட வேண்டாமா?'' என்றபடியே டீச்சர் டிரை வாஷர் பட்டனை அழுத்தினார். இப்போது உள்ளே இருக்கும் சுடு நீர்க் குழாய் வழியே வெளியான சூடான ஆவி, துணிகளின் வழியே புகுந்து வெளியே வந்தது.

''ஐ... 'ஸ்டீம் பாத்’டா'' என்று பிரசன்னா கூச்சல் போட்டான்.

சிறிது நேரத்தில் துணிகளில் புகுந்த வெப்ப ஆவியால் துணிகள் மேலும் நன்றாக உலர்ந்தன. வாஷின் மிஷின் எச்சரிக்கை ஒலி கொடுத்தவுடன், வாஷிங் மிஷினின் இயக்கத்தை நிறுத்திய டீச்சர், துணிகளையும் சுட்டிகளையும் வெளியில் எடுத்தார். சுட்டிகளின் உடலும்  துணிகளும் வெதுவெதுப்பாக இருந்தன.

மிகவும் சுத்தமான துணிகளுடன் வெளியே வந்தனர் சுட்டிகள்.

கீழே குதித்த கணேஷ்,''டீச்சர்... நம்ம பிரசன்னா அடுத்த தீபாவளி வரைக்கும் குளிக்கக்கூட வேண்டாம்.'' என்றபடியே ஓடினான்.