மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

இரட்டை உழைப்பாளிகள்!கே.யுவராஜன்

''பசங்களா... வந்து ரொம்ப நேரம் ஆச்சா?'' என்று கேட்டவாறு வீட்டுக்குள் வந்தார் மாயா டீச்சர்.

''கொஞ்ச நேரம்தான் ஆச்சு டீச்சர். நீங்க ஹாஸ்பிட்டல் போயிருக்கிறதா மந்திரக் கம்பளம் சொல்லுச்சு'' என்றாள் கயல்.

''ஆமாம். தெரிஞ்ச ஒருத்தருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடந்தது'' என்றார் டீச்சர்.

''எங்க பெரியப்பாவுக்குக்கூட கிட்னி ஃபெய்லியர். ஆறு வருஷமா டயாலிசிஸ் செய்துக்கிறார்'' என்றான் அருண்.

''அவ்வளவு நாளா கிட்னி ஃபெய்லியராகி இருக்க முடியுமா?' எனக் கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''முடியும் கதிர். மாற்று சிறுநீரகம் கிடைக்காதவங்க, அந்த ஆபரேஷனைச் செய்துக்கப் பயப்படுறவங்க, டயாலிசிஸ் செய்து உயிர் வாழ முடியும். ஆனா, வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்துக்கணும். நிறைய செலவு, உடம்பையும் மனசையும் கஷ்டப்படுத்தும் விஷயம்'' என்றார் டீச்சர்.

''இன்றைய தேதியில், உலகம் முழுக்க 10 லட்சத்துக்கும் அதிகமானவங்க டயாலிசிஸ் செய்துக்கிறாங்க. இதய நோய் மாதிரி, சிறுநீரகப் பாதிப்பும் அதிகமாகிட்டே இருக்கு. இப்போ, சிறு வயதிலேயே பலருக்கும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுது. உங்ககிட்டே ஒரு கேள்வி, சிறுநீரகம் நம்ம உடம்பில் எங்கே இருக்கு?'' என்றது மந்திரக் கம்பளம்.

''அடி வயிற்றுப் பகுதியில்'' என்றாள் ஷாலினி.

''தப்பு. சிறுநீரகங்கள், நம்ம வயிற்றுக்குப் பின்புறம், முதுகெலும்புக்கு இரண்டு பக்கமும் இருக்கு. வலது சிறுநீரகம், கல்லீரலுக்குக் கொஞ்சம் கீழேயும் இடது சிறுநீரகம், மண்ணீரலுக்குப் பக்கத்திலும் இருக்கு. இந்தச் சிறுநீரகங்களின் செயல்பாடு பற்றி நேரில் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்' என்ற கம்பளம், அவர்களை சிறிய உருவங்களாக மாற்றிக்கொண்டு காற்றில் கரைந்தது.

அவர்கள், ஒரு மனித உடலில், வயிற்றுப் பகுதிக்குப் பின்புறம் வந்தார்கள். இளம் சிவப்பு நிறத்தில், அவரை போன்ற வடிவில் சிறுநீரகங்கள் இருந்தன.

''இதன் அளவு என்ன?'' என்று கேட்டாள் கயல்.

''வளர்ந்த ஒரு மனிதரின் சிறுநீரகம், சராசரியாக 12 சென்டிமீட்டர் நீளம், 6 சென்டிமீட்டர் அகலம் இருக்கும். ஆணுக்கு, 125 முதல் 170 கிராம் எடையிலும் பெண்ணுக்கு, 155 கிராம் எடைக்குள்ளும் இருக்கும். பொதுவாக, வலது சிறுநீரகத்தைவிட இடது சிறுநீரகம் கொஞ்சம் பெரிதாக இருக்கும். நெஃப்ரான் (Nephron) என்கிற சிறுநீர் முடிச்சு இழைகளின் தொகுப்புதான் சிறுநீரகம். இந்த நெஃப்ரான்கள், சிறுசிறு முடிச்சுகளாக ஒரு ஸ்பிரிங் மாதிரி சுருண்டு இருக்கும். முழுமையாக வளர்ந்த ஒரு மனிதரின் சிறுநீரகம், ஒரு மில்லியன் முடிச்சுகளால் ஆனது. இந்த முடிச்சுகளை நூல் போல தொகுத்தால், 60 கிலோமீட்டர் நீளம் இருக்கும்'' என்றது கம்பளம்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''அம்மாடியோவ்... இவ்வளவு பெரிய விஷயம் இந்தச் சின்ன இடத்தில் இருக்கா?'' என்று ஆச்சர்யப்பட்டான் கதிர்.

''இந்த நெஃப்ரான்கள் செய்கிற வேலையைச் சொன்னால் இன்னும் ஆச்சர்யப்படுவே. மூச்சு விடுவது, இதயம் துடிப்பது மாதிரி, சிறுநீரகமும் ஓய்வே இல்லாமல் வேலை செய்யும். அதாவது, தாயின் வயிற்றில் கரு உருவான 14-வது வாரத்தில் தன் வேலையை ஆரம்பித்து, அந்த மனிதன் இறக்கும் வரை வேலை செய்யுது' என்றார் டீச்சர்.

'இதோட வேலை என்ன?' என்று கேட்டான் அருண்.

'ரத்தத்தில் கலந்துவரும் கிருமிகளைக் கண்டுபிடித்து வெளியேற்றுவது சிறுநீரகம்தான். உடம்பில் இருக்க வேண்டிய அமிலம், உப்பு போன்றவற்றின் அளவைக் கட்டுப்படுத்துவதும், ரத்தச் சிவப்பணுக்களைப் பராமரிப்பதும் சிறுநீரகம்தான்''  

''அப்போ, 24 மணி நேர துப்புரவுப் பணியாளர்னு சொல்லுங்க' என்றது கம்பளம்.

'துப்புரவு என்றால் எப்படி?' என்று கேட்டான் அருண்.

'நமது உடம்பில், ஒரு நிமிடத்தில் ஐந்து லிட்டர் ரத்தம் சுற்றிவருது. இதில், ஒண்ணே கால் லிட்டர் ரத்தம் இந்தச் சிறுநீரகப் பகுதிக்கு வரும். அந்த ரத்தத்தில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பேட், அமோனியா போன்றவற்றைத் தண்ணீரோடு சேர்த்துப் பிரித்து, சிறுநீராக மாற்றி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர் பைக்கு அனுப்பிவிட்டு, நல்ல ரத்தத்தை உடம்புக்கு அனுப்பும். இதெல்லாம் ஒரு நிமிடத்தில் நடக்கும். அடுத்த நிமிடம், இன்னொரு ஒண்ணே கால் லிட்டர் ரத்தம், கழிவுகளோடு வரும். ஒரு நாளைக்கு 150 லிட்டர் சிறுநீரை முதல் கட்டமாக சிறுநீரகத்தின் மேல் பகுதியில் வடிகட்டும். இது, படிப்படியாக மற்ற சிறுநீர் முடிச்சுகளால் வடிகட்டப்பட்டு, சிறுநீர்ப் பைக்குச் செல்லும்' என்றது கம்பளம்.

'இப்படி சுத்தம் செய்வதற்கு, ரத்தத்தோடு கலந்துவரும் தண்ணீர் மிக முக்கியம். அதனால்தான், நாம் ஒரு நாளைக்கு  குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்'' என்றார் டீச்சர்.

''இப்படி ஓயாமல் வேலை செய்யும் சிறுநீரகம் எப்படி கெட்டுப்போகுது?'' என்று கேட்டாள் ஷாலினி.

''நம்முடைய தவறான பழக்கத்தால்தான். நாம் சாப்பிடும் உணவில் உயிர்ச் சத்துகளோடு சேர்த்து பொட்டாசியம், பாஸ்பேட், யூரியா போன்றவையும் இருக்கு. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இது, ரத்தத்தில் அளவோடு வர்ற வரைக்கும் பிரச்னை இல்லை. சிறுநீரகம், சீராகத் தன்னுடைய துப்புரவு வேலையைச் செய்துட்டு இருக்கும். ஆனால், நொறுக்குத் தீனி, ஃபாஸ்ட் ஃபுட், பல வகை செயற்கை ரசாயனங்கள் கலந்த உணவு, அதிகமான உப்பு மற்றும் மசாலா கலந்த உணவுகளைச் சாப்பிடும்போது, கழிவுகள் அதிகம் சேருது. அதை வெளியேற்ற சிறுநீரகங்கள் இன்னும் தீவிரமாக வேலை செய்யும். அப்போது, நெஃப்ரான்கள் என்கிற இந்தச் சிறுநீரக முடிச்சுகள் சுருங்கி, செயலிழக்க ஆரம்பிச்சுடும். கழிவுகளை வெளியேற்றுவதற்குப் பதிலாக, சத்துகள் வெளியேற ஆரம்பிக்கும். அதுதான் சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்பக் கட்டம்' என்றது கம்பளம்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

'இப்போ எனக்குப் புரியுது. உணவில் இருக்கும் சத்துகள், ரத்தத்தில் குளுகோஸாகப் பயணிக்கும்போது, அதை சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் தேவை. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இன்சுலின் சுரப்பது மிகக் குறைவாக இருக்கும். இதனால், ரத்தத்தில் உள்ள குளுகோஸை வடிகட்ட, சிறுநீரகம் கூடுதல் வேலை செய்யும். ஒரு கட்டத்துக்கு மேல்  அந்தக் கூடுதல் வேலையைச் செய்ய முடியாமல் சிறுநீரில் குளுகோஸையும் சத்துகளையும் வெளியேற்றிவிடும்னு படிச்சிருக்கேன்' என்றாள் கயல்.

'சிறுநீரகத்தில் கற்கள் சேருவதும் இப்படித்தானா?' என்று கேட்டான் கதிர்.

'ஆமாம். கால்சியம் அதிகம் உள்ள உணவு, உப்பு மற்றும் அமிலம் நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுவது, தொற்றுக்கிருமிகளால் உருவாவது, மரபணுப் பிரச்னை எனச் சிறுநீரகக் கற்களில் நான்கு வகைகள் இருக்கு. கால்சியம், உப்பு போன்றவை அளவுக்கு அதிகமாக வடிகட்டப்படும்போது, கொஞ்சம் சிறுநீரகப் பகுதியிலேயே படிந்துவிடும். மேலே மேலே படிந்து, சிறுசிறு கற்களாக மாறும். இவை, அளவில் சின்னதாக இருந்தால், சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைக்கு போய்விடும். அளவு அதிகம் ஆகும்போது, ஆங்காங்கே தங்கிவிடும்' என்றார் டீச்சர்.

'ஒரே ஒரு கிட்னி இருந்தாலே உயிர் வாழலாம்னு சொல்றாங்களே அது உண்மையா?' என்று கேட்டாள் ஷாலினி.

'உண்மைதான் ஷாலினி. சிறுநீரகங்கள் உழைப்புக்கு அஞ்சாதவை. நம் உடம்பைக் காப்பாற்றுவதற்காக கடைசி வரை போராடும் விசுவாசிகள். ஒரு மில்லியன் நெஃப்ரான்கள் சேர்ந்ததுதான் சிறுநீரகம் எனச் சொன்னேன். இதில், மற்ற நெஃப்ரான்கள் எல்லாம் செயலிழந்து, கடைசி சில நூறு நெஃப்ரான்கள் மட்டுமே இருக்கும்போதும், அவை சுத்தம் செய்யும். ஒரு நாளில் 5 மில்லிக்கும் குறைவான அளவே சிறுநீர் வடிகட்டப்படும் என்ற நிலை ஏற்படும்போதுதான் முழுமையாகச் செயல் இழந்து, புதிய சிறுநீரகத்தைப் பொருத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போதும் செயல் இழந்த சிறுநீரகத்தை வெளியே எடுத்துவிட மாட்டார்கள். அதற்கு சற்று கீழேதான் புதிய சிறுநீரகத்தைப் பொருத்துவார்கள். அந்தப் புதிய சிறுநீரகம் செயல்பட ஆரம்பித்து, சில ஆண்டுகளில் பழைய சிறுநீரகம் கொஞ்சம் உயிர்பெறுவது மிக அபூர்வமாக நடக்கும்' என்றார் டீச்சர்.

'ஆரோக்கியமான சிறுநீரகம் உள்ளவர்கள் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பார்கள். இதில் கொஞ்சம் முன்னே பின்னே வேறுபடலாம். ஆனால், மணிக்கணக்கில் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலோ, மணிக்கு ஒருமுறை சிறுநீர் கழித்தாலோ, சிறுநீர் கழிக்கச் சிரமமாக இருந்தாலோ, சிறுநீரின் நிறம் மாறுபட்டு வந்தாலோ, கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்கணும்' என்ற மந்திரக் கம்பளம், அவர்களை அங்கே இருந்து வெளியே அழைத்துவந்தது.

'சிறுநீரக தானம் பற்றிய விழிப்புஉணர்வு, உலகம் முழுக்கவே குறைவாகத்தான் இருக்கு. அதனால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்று சிறுநீரகத்துக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, கிடைக்காமலே இறந்துவிடுவது உண்டு.  பொருத்திக்கொண்ட பிறகும், அலட்சியத்தால் செய்யும் சிறு தவறால், இன்ஃபெக்‌ஷன் உண்டாகி இறந்துவிடுவதும் உண்டு. அதேநேரம் மிகவும் கட்டுப்பாடாக இருந்து, பல ஆண்டுகள் உயிரோடு இருந்தவர்களும் உண்டு' என்றார் டீச்சர்.

'இந்தச் சிரமம் எல்லாம் வேண்டாம் என்றால், அடிப்படையான சில விஷயங்களைப் பின்பற்றி, வரும் முன் காப்பதே நல்லது. தினமும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். உணவில், அரை உப்பு, மிதமான காரம் எடுத்துக்கொள்ள வேண்டும். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் வகைகள்தான் முதல் எதிரி. அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த வயதில் சாக்லேட், ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். ஆனால், அதிலும் கட்டுப்பாடாக, எப்போதாவது விசேஷங்களில் மட்டுமே சாப்பிடுவது என்று உறுதியாக இருக்க வேண்டும்' என்றது மந்திரக் கம்பளம்.

'நல்லாப் புரிஞ்சுக்கிட்டோம். இரவு, பகல் பார்க்காமல் வேலை செய்யும் சிறுநீரகத்துக்கு, நாங்க இனிமே ஓவர் வொர்க் தரவே மாட்டோம்' என்றான் கதிர்.

ஓவியம்: பிள்ளை