மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

பரி என்னும் ஃபாஸ்ட் ஸ்டார்கே.யுவராஜன்

அரையாண்டுத் தேர்வு முடிந்த நாளில், மாயா டீச்சருடன் கடற்கரைக்கு வந்திருந்தார்கள் சுட்டிகள். 

''ஹலோ மேடம், நல்லா இருக்கீங்களா?'' எனக் கேட்டபடி குதிரையுடன் வந்தார் ஒருவர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''நல்லா இருக்கேன் டேவிட். ஹாய் நெப்போலியன் எப்படி இருக்கே?'' என்றபடி அந்தக் குதிரையின் முகத்தைத் தடவினார் டீச்சர்.

டேவிட், இரண்டு இரண்டு பேராக குதிரையில் ஏற்றி, ரவுண்டு அடித்துவிட்டு விடைபெற்றார்.

''தெரிஞ்சவரா டீச்சர்?'' எனக் கேட்டான் கதிர்.

''ஆமாம். 10 குதிரைகளை வெச்சு சினிமா ஷூட்டிங் வாடகைக்கு விடுவார். சினிமாக்களில் விலங்குகளைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் வந்த பிறகு வித்துட்டார். இப்போ, ரெண்டு குதிரைகள்தான் இருக்கு'' என்று சொல்லிக்கொண்டே, மணலில் நடக்க ஆரம்பித்தார் டீச்சர்.

''குதிரைகளை வளர்ப்பது கஷ்டமா டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

''வளர்ந்த ஒரு குதிரை 450 கிலோ இருக்கும். ஒரு நாளைக்கு 10 கிலோவுக்கும் அதிகமாக புல், தானியங்களைச் சாப்பிடும். 45 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தூய்மையான தண்ணீரா இருக்கணும். குதிரையின் குளம்புகளுக்கு லாடம் அடிக்கணும். உடம்பில் முடி அதிகம் இருப்பதால், தொற்றுப்பூச்சிகள் இல்லாமல் பார்த்துக்கணும். தடுப்பூசி போடணும். ஒரே இடத்தில் இருந்தால், மனரீதியா பாதிக்கும். வெளியே ரவுண்டு கூட்டிட்டுப் போகணும்'' என்றார் டீச்சர்.

''அட, இவ்வளவு விஷயங்கள் இருக்கா? நான் பெரிய குதிரைகளைப் பார்த்திருக்கேன் குட்டியைப் பார்த்ததே இல்லை'' என்றாள் ஷாலினி.

'''நான் இருக்கிறப்ப... இல்லை, கிடையாது, முடியாது’ என்ற வார்த்தைகள் வரலாமோ?'' என்று டீச்சரின் கைப்பையில் இருந்து குரல் வந்தது.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குச்சென்று கைப்பையைத் திறக்க, பாய்ந்து வெளியே வந்த மந்திரக் கம்பளம், குதிரையைப் போல கனைத்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''எங்கே போறோம்?'' எனக் கேட்டான் அருண்.

''பீச்சில், ரேஸில் குதிரையைப் பார்த்திருப்பீங்க. சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காட்டுக் குதிரைகளைப் பார்த்திருக்க மாட்டீங்க. அங்கே போகலாம்.'' என்றது கம்பளம்.

அடுத்த நொடி, புற்கள் அடர்ந்த சமவெளிப் பகுதியில் இருந்தார்கள். அவர்களுக்கு சற்றுத் தள்ளி ஒரு தாய்க் குதிரை, குட்டியை ஈன்றுகொண்டிருந்தது.

''நம்ம மேலே அம்மாவுக்கு வருத்தம் ஏற்பட்டால், 'உன்னை 10 மாசம் சுமந்து பெற்றேனே’ எனச் சொல்வாங்க. இதே டயலாக்கை குதிரையின் அம்மா,  ஒரு மாசம் சேர்த்துச் சொல்லும். இவற்றின் கர்ப்பகாலம்  340 நாட்கள். சராசரியாக 30 ஆண்டுகள் உயிர் வாழும். மனிதர்களால் நன்கு பராமரிக்கப்படும் குதிரை, அதிக ஆண்டுகள் வாழ்ந்திருக்கு'' என்றார் டீச்சர்.

''வாவ்... குட்டி பிறந்துடுச்சு'' என்று துள்ளினான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த குட்டி, புல் தரையில் புரண்டது. தாய்க் குதிரை உசுப்பிவிட, மெள்ள எழுந்துகொண்டது. தாயைச் சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு, துள்ளல் நடைபோட, அந்தக் குட்டியுடன் சேர்ந்து இவர்களும் நடந்தார்கள்.

''இப்பதான் வயிற்றில் இருந்து வந்துச்சு. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குப் போகிற மாதிரி நடக்க ஆரம்பிச்சுடுச்சே'' என வியந்தாள் கயல்.

''மனிதனைத் தவிர, பெரும்பாலான விலங்குகள் அப்படித்தான். பிறந்த சில நாட்களிலேயே தனது தேவைகளை தானே செய்துக்கும்'' என்றது கம்பளம்.

''குதிரைகளுக்கு வயது அடிப்படையில் சிறப்புப் பெயர்கள் இருக்கு. ஒரு வயதுக்குள் இருக்கும் குதிரைகளை, ஃபோல் (foal) எனச் சொல்வாங்க. ஒன்று முதல் இரண்டு வயது வரை, இயர்லிங் (yearling). நான்கு வயதுக்குள் இருக்கும் ஆண் குதிரைக்கு, கோல்ட் (coltt) என்று பெயர். பெண் குதிரையாக இருந்தால், ஃபில்லி (filly) என்று பெயர். பொலிக்குதிரை என்பது நன்கு வளர்ந்த குதிரையைக் குறிக்கும். தமிழில் பெயருக்கான காரணம், குதித்து வருவதால் குதிரை. பரிந்து, அதாவது வேகமாக வருவதால், 'பரி’ என்று பெயர்'' என்றார் டீச்சர்.

'பரி என்னும் ஃபாஸ்ட் ஸ்டார்' என்றாள் ஷாலினி.

குதிரைகள் கூட்டமாக இருந்த இடத்துக்கு வந்ததும், ''குதிரையின் உயரம் எவ்வளவு?'' என்று கேட்டான் அருண்.

''சராசரியாக 152 சென்டிமீட்டர் இருக்கும். அதன் வயதை பற்கள் மூலம் கணக்கிடுவாங்க. வாழ்நாள்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

முழுவதும் பற்கள் வளரும். ஆடு, மாடு மாதிரி குதிரைகள் அசைபோடாது. இரைப்பை சின்னதா இருக்கும். பெருங்குடல் நீண்டு இருக்கும். இதனால், உடனுக்குடன் செரிமானம் நடந்து, சத்துக்கள்  கிடைக்கும். குதிரையின் வலிமைக்கு இதுவும் ஒரு காரணம்'' என்றார் டீச்சர்.

''இவற்றுக்கு வாந்தி எடுக்கத் தெரியாது. அதனால், புற்களை மேயும்போது கவனிச்சுச் சாப்பிடும். அதையும் மீறி விஷச்செடி எதையாவது சாப்பிட்டுவிட்டால், வாந்தி எடுக்கத் தெரியாமல் இறந்துடும்'' என்றது கம்பளம்.

''அச்சச்சோ'' என்ற அருண்,  ஒரு குதிரையை அன்புடன் தடவியபடி, ''குதிரைகள் நின்றுகொண்டுதான் தூங்குமா?'' என்று கேட்டான்்.

''படுத்தும் தூங்கும். அதன் கால் மூட்டு எலும்புகள், நமது மணிக்கட்டு மூட்டு மாதிரி இருக்கும். இதனால், மூட்டுக்குக் கீழ்ப் பகுதியும் மேல் பகுதியான தொடையும் நன்கு பிடிச்சுக்கும். இதனால், 15 மணி நேரம்கூட ஒரே இடத்தில் நின்று ஓய்வெடுக்க முடியும். நின்றுகொண்டே தூங்க முடியும். நம்மைப் போல தொடர்ச்சியாகத் தூங்காமல், விட்டுவிட்டுத் தூங்கும். சிங்கம், புலி போன்ற விலங்குகள் தாக்கி, இரையாகிவிடுவோமோ என்ற அச்சமும்தான் காரணம். தனியா இருக்கும் குதிரை, அடிக்கடி முழிச்சுக்கும். கூட்டத்தோடு இருக்கும்போது, ஒரு குதிரை கண்காணிக்க, மற்ற குதிரைகள்  தூங்கும். ஒரு நாளைக்கு குதிரையின் மொத்தத் தூக்கம் மூன்று மணி நேரம்தான்'' என்றது கம்பளம்.

''குதிரைக்கு, கண்களைப் பாதி மறைக்கிற மாதிரி கவசம் போடுறது ஏன் டீச்சர்?'' எனக் கேட்டாள் கயல்.

''குதிரையின் கண், 350 டிகிரிக்கு காட்சியைப் பார்க்கும் திறன்கொண்டது. நேராகச் செல்லும்போது, பக்கவாட்டில் உள்ள பொருட்களால் கவரப்பட்டு, திசை மாறிடக் கூடாதுனு கவசம் போடுறாங்க. இரவிலும் நன்கு பார்க்கும். ஆனால், எல்லாமே கறுப்பு, வெள்ளை நிறங்களாகத்தான் தெரியும். இதன் காது மடல்கள் 180 டிகிரிக்குத் திரும்பும். எந்தப் பக்கத்தில் இருந்து சத்தம் வந்தாலும் உடனே உணர முடியும். தொடு திறனும் கூர்மையானது. உடம்பில் சிறு பூச்சி உட்கார்ந்தாலும் உடனே உணர்ந்து, விரட்ட முயற்சிக்கும். எல்லாப் புலன்களும் விழிப்போடு இருக்கும் விலங்கு இது'' என்றார் டீச்சர்.

''இவ்வளவு உஷாரான குதிரைகள், மனிதனுக்கு எப்படி அடிமையா மாறுச்சு?'' எனக் கேட்டாள் ஷாலினி.

''அதுதான் மனிதனின் அறிவுத்திறமை. கி.மு.4000ம் ஆண்டிலேயே மனிதன், குதிரைகளைப் பழக்கி, அதன் மேல் சவாரிசெய்தான். போர்களில் பயன்படுத்தினான். நவீன சாலைகள், வாகனங்கள் இல்லாத  காலத்தில், பல கிலோமீட்டர்கள் பயணிக்க  உபயோகித்தான்'' என்றது கம்பளம்.

''இதில் கொடுமை என்ன தெரியுமா? அந்தக் காலத்தில் காடு, மலைகளைக் கடந்து கூட்டமாக குதிரைகளில் பயணம் செய்யும் மனிதர்கள், உணவு தீர்ந்ததும், சுமந்த குதிரையையே கொன்று சாப்பிடுவாங்க'' என்றார் டீச்சர்.

''ரேஸ், ஊர்வலம் தவிர வேற எதுக்கெல்லாம் குதிரையைப் பயன்படுத்துறாங்க?'' எனக் கேட்டான் அருண்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''நிறைய இருக்கு அருண். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் மலைப்பாங்கான இடங்களில்... மீட்பு பணி, ரோந்து போன்ற பாதுகாப்பு விஷயங்களில்  பயன்படுத்துறாங்க. பாம்பு கடிக்கு மருந்து தயாரிப்பதில் குதிரையின் பங்களிப்பும் இருக்கு. பாம்பிடம் இருந்து எடுத்த விஷத்தை, குதிரையின் உடம்பில் ஊசி மூலம் செலுத்துவாங்க. அந்த விஷம், குதிரையின் ரத்தத்தில் கலக்கும். அப்போ, அந்த ரத்தத்தில் ஒரு வேதி நீர்மம் உண்டாகும். குதிரையைப் பாதிக்காத வகையில் அதை உடனே பிரித்து எடுத்து, விஷக்கடிக்கு மருந்தாக மாற்றுவாங்க. குதிரையின் சிறுநீரகத்தில் இருந்தும் மருந்து தயாரிக்கப்படுது. இதன் தோலில் கையுறை, காலணி செய்றாங்க. குளம்பு மூலம் பசையும் தயாரிக்கிறாங்க. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, குதிரையோடு பழகவும், சவாரி செய்யவும் பயிற்சி தருவாங்க. இதனால், அவங்க மனநிலையில் முன்னேற்றம் ஏற்படும். குதிரை சவாரி உடல்ரீதியாகவும் நல்லது'' என்று அடுக்கியது கம்பளம்.

''அடேங்கப்பா... குதிரை என்றதும் வேகம் மட்டும்தான் ஞாபகம் வரும். இத்தனை விதங்களாகப் பயன்படுதா?'' என்றாள் கயல்.

''நம்மைச் சுற்றி இருக்கும் பல உயிரினங்கள், இப்படித்தான் கண்களுக்குத் தெரியாமல் மறைமுகமாகப் பல பயன்களைக் கொடுத்துட்டு இருக்கு'' என்றார் டீச்சர்.

எல்லோரையும் சுமந்துகொண்டு குதிரை வேகத்தில் கிளம்பியது கம்பளம்.