மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.கணேசன்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சர், வீட்டில் சுட்டிகளுக்கு அன்றைய செய்திகளைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தார். மாலை நேரமாகிவிட்டதால் அறையில் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. டீச்சர், பிரசன்னாவை லைட் போடச் சொன்னார். விளக்கின் வெளிச்சத்தில் அறை பிரகாசமாகியது.

''இந்த மின்சார விளக்குகளை மட்டும் கண்டுபிடிக்கலைன்னா அவ்வளவுதான். இருட்டுல நாமெல்லாம் ஒருத்தர் மீது ஒருத்தர் மோதிப்போம் இல்ல டீச்சர்?'' என்றான் பிரசன்னா.

''அதெல்லாம் இல்லை. நம் முன்னோர்கள், எண்ணெயைக் கொண்டு தீப்பந்தங்களைப் பயன்படுத்தினார்கள். அதற்குப் பிறகுதான் மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்டு, மின்சார விளக்குகள் (Incandescent Lamp)  வந்தன'' என டீச்சர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே... கணேஷ் சிந்தனையில் ஒரு பல்பு தோன்றியது.

''தெரியுமே... இந்த முறை டாபிக் பல்புகள்தானே? என் மண்டைக்குள்ளே பல்பு எரியுது டீச்சர்'' என்றான்.

புன்னகைத்தபடி டீச்சர் ஆரம்பித்தார்... ''மின்சார விளக்கைக் கண்டுபிடித்தவர் யார் என்றால், உடனே எடிசன் என்று சொல்லிவிடுவீர்கள். ஆனால், அவருக்கு முன்னோடியாக இருந்தது ஹம்ப்ரி டேவி என்பவர் 1809-ல் கண்டுபிடித்த விளக்கு. அதற்கு பின் வந்த ஆண்டுகளில்... பலரும் இந்த ஆராய்ச்சியில் இறங்கினார்கள். மின்விளக்கினை மிக நீண்ட நேரம் எரியச் செய்ய பலரும் முயன்றார்கள். இந்த நீண்ட முயற்சியில் வென்றவர் தாமஸ் ஆல்வா

##~##

எடிசன். இவர், 1879-ல் கண்டுபிடித்த மின்விளக்கில் பயன்படுத்திய கார்பன்(கரி)இழையானது, தொடர்ந்து நாற்பது மணிநேரம் எரிந்தது. அதன் பிறகு, எடிசன் மீண்டும் பல முயற்சிகள் செய்து, 1880-ல் மூங்கிலால் ஆன இழையைக் கொண்டு 1200 மணி நேரம் எரியும் மின்விளக்கினைக் கண்டுபிடித்தார்'' என்றார் மாயா டீச்சர்.

பல்பையே உற்றுப் பார்த்த பிரசன்னா, ஒரு சினிமாவில் வரும் காட்சியைப் போல, ''டீச்சர், இந்த பல்ப் எப்படி எரியுது?'' எனக் கேட்டான். டீச்சர் அவனையும், மதுவையும் எரிந்து கொண்டிருந்த மின்சார பல்பினுள் அனுப்பி வைத்தார்.

பல்புக்குள் சென்ற சுட்டிகள், பல்பின் முக்கியப் பகுதியான டங்க்ஸ்டன் இழையை இணைக்கும் குழல்களுக்கு அருகில் நின்றிருந்தனர். வெளியே இருந்த டீச்சர் தொடர்ந்து சொல்ல ஆரம்பிக்க, மற்ற சுட்டிகள் கவனித்தனர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''ஹம்ப்ரி டேவியின் விளக்கினை வைத்து, எடிசன் ஆராய்ச்சிகள் செய்தார். அப்போது, அவர் ஒரு உண்மையை உணர்ந்தார். ஒரு சில பொருட்களில் மின்சாரம் எளிதில் பாய்ந்து செல்லும் என்றும், சில பொருட்களில் மின்சாரம் தடுக்கப்படும் என்பதையும் கண்டுபிடித்தார். அவற்றை எளிதில் கடத்திகள்(Good Conductors) என்றும், அரிதில் கடத்திகள்(Bad Conductors) என்றும் அழைத்தார். இதை அடிப்படையாகக் கொண்டே மின் விளக்கினை எடிசன் வடிவமைத்தார்'' என்ற மாயா டீச்சர் தொடர்ந்து, மின் விளக்கின் அடிப்படையை விளக்க ஆரம்பித்தார்.

''பொதுவாக மின் விளக்குகள் அவற்றின் ஆரம்பக் காலகட்டத்தில் இருந்தே எளிமையான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு வந்துள்ளன.  ஒரு மெல்லிய கண்ணாடிக் குடுவை... அதன் உள்ளே வெற்றிடமாக்கிய பிறகு, மந்தநிலை(Inert) வாயுக்களில் ஒன்றான ஆர்கன் வாயு நிரப்பப்படும். கண்ணாடிக் குடுவையின் மத்தியில் இரண்டு கண்ணாடித் தூண்கள் டங்க்ஸ் டன் இழையைத் தாங்கிக் கொண்டு இருக்கும். அந்தக் கண்ணாடித் தூண்கள் இரண்டும், உலோகக் கம்பி களால் மின்சார சர்க்யூட்டு டன் இணைக்கப்பட்டு இருக் கும். இந்த உலோகக் கம்பிகளின் முனையில், இரண்டு மின்சாரக் கம்பிகள்(Wire) இருக்கும். இவற்றின் வழியாக வெளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத் தின் தூண்டுதலால், டங்க்ஸ்டன் இழை தொடர்ந்து எரிய ஆரம்பிக்கும். மின் தூண்டுதல் பெற்ற டங்க்ஸ்டன் இழையின் வழியே... மின் அணுக்கள் இணைக்கப்பட்டு இருக்கும் கண்ணாடித் தூண்களுக்கு இடையே ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பாயும். இந்த சுழற்சியானது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

இந்த சுழற்சியினால் கிடைக்கும் வெப்பம்தான் வெளிச்சமாகப் பரவுகிறது. இந்த மின் விளக்குகளுக்கு வெளியே இருந்து கிடைக்கும் மின்சாரம் தடைபட்டால், விளக்குகள் ஒளிர்வது நின்றுவிடும். மின் விளக்குகளில் தேவைக்கு ஏற்ப ஆர்கன் வாயுக்குப் பதிலாக, மெர்க்குரி வேபர் மற்றும் சோடியம் வேபர் பயன்படுத்தப்பட்டன.

எடிசன் கண்டுபிடித்த விளக்குகளில்... கார்பன் இழைகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர், கார்பன் இழையைக் காட்டிலும் நீண்ட நாள் உழைக்கக் கூடிய டங்க்ஸ்டன் இழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவைதான் இப்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன.'' என்றார்.  

''பல்ப் எல்லாம் எவ்ளோ நாள் பயன்பாட்டில் இருக்கும் டீச்சர்?'' என கேட்டாள் சரண்யா.

''பல்புகளுக்கு சரியான அளவில் மின்சாரம் கிடைத்தால் ஆண்டுக்கணக்கில் வரும். ஓர் ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால், உலகில் இப்போது  பயன்பாட்டில் இருக்கும் மிகவும் பழமையான மின் விளக்கு, கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு தீயணைப்பு நிலையத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நான்கு வாட்ஸ் பல்புதானாம். இது 1901 முதல் இன்று வரை தொடர்ந்து வெளிச்சம் தந்துகொண்டு இருக்கிறது. வெகு அரிதாக ஒரு சில சமயங்களில் மட்டும் அது அணைத்து வைக்கப்பட்டதாம். அதுகூட குறைந்த மணிநேர அளவில்தானாம். இந்தப் பல்பு, தன் நீண்ட நெடிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதைப் பராமரிக்க ஒரு சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது'' என்று முடித்தார் டீச்சர்.

''பல்புகளை எல்லாம் பொதுவா   முட்டை/கோள வடிவில் செய்யறது ஏன் டீச்சர்?'' என்றான் கணேஷ்.

''இதோ பார்றா, ஐயா வாங்குற மார்க் ஞாபகம் வந்துடுச்சு போல இருக்கு. அதான் இந்தக் கேள்வி கேக்குறாரு'' என்று அவனைக் கேலி செய்தாள் சரண்யா.

''இது ஒரு சுவாரசியமான விஷயம்! மிகவும் மெலிதான... ஆனால், எளிதில் அழுத்தத்தினால் உடைக்க முடியாது முட்டை ஓடு. முட்டை மீது செலுத்தப்படும் அழுத்தமானது, ஒரே இடத்தில் குவியாமல் முட்டை முழுவதற்கும் பரவுவதால் அதை அழுத்தத்தின் மூலம் உடைப்பது கடினம். அதேபோல, மெலிதான கண்ணாடியால் மின் விளக்குகளும்  உருவாக்கப்படுகின்றன. இதனால் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் செலுத்தப்படும் அழுத்தத்தினால் அவை எளிதில் பாதிக்காது'' என்றார் டீச்சர்.

''ஓ... அப்ப முட்டைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கா?'' என வியந்தாள் சரசு!

அப்போது திடீரென ஞாபகம் வந்தவனாக கணேஷ், ''டீச்சர், இந்த குண்டு பல்புகளை பயன்படுத்த வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்கிறார்களே என்ன காரணம்?'' என்றான்.

''ஆமாம்! குண்டு பல்புகள் எரியும்போது கிடைக்கும் வெப்பத்தின் ஆற்றலில் நமக்கு வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே வெளிச்சமாகக் கிடைக்கிறது. மீதமுள்ள அனைத்து வெப்ப ஆற்றலும் ஆவியாகி விடுகிறது. இதனால், புவி வெப்பம் அடைதல் அதிகரிக்கிறது. அதனால்தான் இந்தக் குண்டு விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுற்றுச் சூழல் ஆர்வலர் கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்தக் குண்டு பல்புகளுக்குப் பதிலாக காம்பேக்ட் ஃப்ளோரோசன்ட் விளக்குகளையும் (CFL),எல்.ஈ.டி.(LED) விளக்குகளையும் பயன்படுத்தச் சொல்கின்றனர்.

இப்போது உலகம் முழுவதும் சிதிலி விளக்குகளே அதிக அளவில் விரும்பப் படுகிறது. இதில் மெர்க்குரி வேபர் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண பல்பைவிட இதன் விலை அதிகமாக இருந்தாலும்... கிடைக்கும் ஒளி, நீண்ட நாள் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருப்பது போன்ற காரணங்களுக்காக சுற்றுச்சூழலியல் விஞ்ஞானிகள் இவற்றைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள்.

அதே போல, LED-பல்புகள். இவை, நிறைய குட்டி குட்டி LED-பல்புகளின் தொகுப்பு அமைப்பாகும். இவற்றின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்களின் தொடர்ந்த சுழற்சியே வெளிச்சத்தைக் கொடுக்கிறது. இவை, பழங்கால விளக்கு களைவிட நீண்ட நாட்கள் உழைக்கின்றன. அதுவும் தவிர, இவற்றில் இருந்து வெளியாகும் வெளிச்சம் அதிகமாகவும் வெப்ப ஆற்றல் மிகக் குறைவாகவும் இருப்பதால், மக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், எல்லா பல்புகளிலும் அடிப்படைச் செயல்பாடு ஒன்றுதான்.'' என்ற டீச்சர், பல்பின் ஸ்விட்சை அணைத்து, சுட்டிகளை வெளியில் வரவழைத்தார். சுட்டிகள் பிரகாசமாக வீடு திரும்பினர்.