பின்னி எடுத்த தென்னை உருவங்கள்!
மிரட்டலாக நிமிர்ந்து நிற்கிறது டைனோசர், இறக்கைகளை விரித்துச் சிரிப்பது போல இருக்கிறது வெளவால், ஒரு காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார் நடராசர், மோட்டார் சைக்கிளில் பறக்கிறார் ஒருவர், யானையில் பவனி வரும் அரசருக்கு முன்பாக ஒரு பரிவாரம் செல்கிறது...

திருப்புவனம், வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், திரும்பிய பக்கம் எல்லாம் விதவிதமான உருவங்கள். எல்லாமே தென்னை மற்றும் பனை மட்டை, நார் போன்றவற்றால் உயிர்பெற்றதுபோல வரவேற்கின்றன.

பள்ளியின் முதல்வர் இந்திராதேவி, ‘‘இந்தப் பகுதியில் பனை மற்றும் தென்னை மரங்கள் அதிகம். அவற்றின் கழிவுகளைப் பயன்படுத்தி, ஜாலியான கிராஃப்ட் பயிற்சியை இந்த விடுமுறையில் மாணவர்களுக்குக் கொடுக்க முடிவுசெய்தோம். இதுக்காக, புதுச்சேரியில் இருந்து ஓர் ஆசிரியரை வரவைத்தோம். ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளை வரச் சொல்லி, நான்கு நாட்கள் பயிற்சி முகாம் நடத்தினோம். அந்தப் பயிற்சியின் அடிப்படையில் எங்கள் மாணவ, மாணவிகளே உருவாக்கியவைதான் இவை” என்றார் பெருமிதமாக.

‘‘இத்தனை மாதமாக படிப்பு, பரீட்சை, ஹோம் வொர்க் என இருந்த எங்களுக்கு, இது ஒரு புது அனுபவமா இருந்தது. நான்கு நாள் பயிற்சி முடிந்த பிறகு, ‘இந்த உலகில், வீணான பொருள் என்று எதுவுமே இல்லை. நம்மைச் சுற்றி கிடைக்கும் விலையில்லா பொருட்களையே அழகான கலைப் பொருட்ளாக மாற்ற முடியும். ஓய்வு நேரத்தில், இந்த மாதிரி சின்னச் சின்ன பொருட்களில் உருவங்களைச் செய்து, பள்ளியையும் வீட்டையும் அலங்கரிக்கலாம்’ என்று சொன்னாங்க. ‘அதென்ன சின்னச்சின்னதா செய்றது? பெருசாவே செய்வோம். அதையும் இப்பவே செய்வோம்’னு முடிவு பண்ணினோம். நானும் என்னோட தோழிகளும் சேர்ந்து, தென்னை மட்டையில் பெரிய பாய்மரம் ஒன்றை உருவாக்கினோம்” என்கிறார், ஏழாம் வகுப்பு மாணவி அழகு சௌந்தரி.

‘‘இவ்வளவு நாட்களா இதே ஊரில்தான் இருக்கோம். பனை, தென்னை மரங்களையும் மட்டைகளையும் தினமும் பார்த்துட்டுதான் இருக்கோம். தரையில் விழுந்து மண்ணோடு மண்ணாக மட்கிப்போகும் அந்தக் கழிவுகளில் இத்தனை உருவங்கள் மறைஞ்சு இருக்கிறது தெரியலை. எங்களுக்குள்ளும் இவ்வளவு கற்பனை வளம் இருக்கும்னு யோசிக்கலை. இதுக்கு எல்லாம் காரணமா இருந்த எங்க பிரின்ஸிபாலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும்” என்கிறார் ஒரு மாணவி.


எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக, பழைய செய்தித்தாள்களைக் கூழாக்கி, 10 அடி உயர டைனோசர் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ‘‘இவற்றை, எங்க பள்ளிக்கூடத்தின் வரவேற்பறை, நூலகம், மைதானம், படிக்கட்டு என எல்லா இடங்களிலும் வைக்கப்போறோம். பள்ளிக்கூடம் திறந்து, முதல் நாள் வரப்போகும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போறோம். இதை எல்லாம் பார்த்துட்டு, அவங்களும் தென்னை மட்டைகளைத் தேடி ஆவலோடு ஓடணும்” என்கிறார்கள், பொங்கும் மகிழ்ச்சியோடு.
மட்டை, நார்களை வெச்சுப் பின்னி எடுத்துட்டீங்க.
ர.அரவிந்த்
நா.ராஜமுருகன்