இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

காலம் சொல்லும் போர்க் கதை!

காலம் சொல்லும் போர்க் கதை!

முதல் உலகப் போர், நம் கண் முன்பு நடந்தால் எப்படி இருக்கும்? நியூஸிலாந்தின் தலைநகர், வெலிங்டன் மாகாணத்தில் இருக்கும் ‘டெ பாபா’ (Te papa) மியூசியத்தில், இதைக் காணலாம்.

முதலாம் உலகப் போரின்போது, துருக்கியின் ‘கலிப்பொலி’ என்ற இடத்தில் ஏப்ரல் 25, 1915 முதல் ஜனவரி 9, 1916 வரை நடைபெற்ற போர்க் காட்சிகளை, இந்த மியூசியத்தில் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

காலம் சொல்லும் போர்க் கதை!

ஆஸ்திரேலியா–நியூசிலாந்து நாட்டுப் படைகளின் கூட்டாக, 1915-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு படையின் பெயர், அன்ஸாக். இந்தப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு, ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ம் தேதி, அன்ஸாக் தினம்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், டிவி நிகழ்ச்சிகளில் செய்தி வாசிப்பவர்கள், தொகுப்பாளர்கள் என அனைவரும் சிவப்பு நிற ‘பாப்பி’ என்ற பூவை, சட்டையிலோ, தொப்பியிலோ குத்திக்கொண்டு வருவார்கள். இதன் இன்னொரு வடிவமே, இந்த மியூசியம்.

புகழ்பெற்ற ‘தி லார்ட் ஆஃப் த ரிங்ஸ்  படத்தின் இயக்குநர் பீட்டர் ஜாக்சன், உலகின் தலைசிறந்த ஹாலிவுட் மேக்-அப் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட் கம்பெனியான விடா வொர்க் ஷாப் கலை இயக்குநர், ரிச்சர்டு  டெய்லர் கூட்டணியில் உருவான இந்த மியூசியம், வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும்.

இந்த ஆண்டு, கலிப்பொலி யுத்தத்தின் நூற்றாண்டு நிறைவுக்காக, பிரத்யேக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்தவர், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட்.

இந்த மியூசியத்தில் நுழைந்ததும், போர் அறிவிப்புப் பிரசார போஸ்டர்கள் சூழ,  பெல்ஜியத்தில் ஒரு கிராமத்தின் போர்ப் பகுதிக்கு நுழையும் உணர்வு உண்டாகும். அங்கே ஆரம்பிக்கிறது, முதல் உலகப் போரின் பயணம். கொல்லப்பட்ட வீரர்கள், அழிக்கப்பட்ட ஆயுதங்கள், பயன்படுத்தப் பட்ட கருவிகள்... என அனைத்தையும் தத்ரூபமாகக் காணலாம்.

காலம் சொல்லும் போர்க் கதை!

போரின் பிரமாண்டத்தைக் குறிக்கவே, போர்க் காட்சிகளை மிகப் பெரிய சிலைகளாக வடித்து இருக்கிறார்கள். இவை, 3D பிரிண்டிங், சிலிகான் காஸ்டிங் முறையில் செய்யப்பட்டவை. ஹாலிவுட் படங்களில், ஸ்பெஷல் எஃபெக்ட் ஒப்பனைக்காக உபயோகப்படுத்தும் முறையே இது.

இதன் மேக்கிங் மற்றும் சிறப்பு அம்சங்களை விவரிக்கும் வீடியோக்களும் உள்ளன.

முதல் உலகப் போர், அவசியம் இல்லாத ஒன்று. அதனால், எவ்வளவு உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் உண்டானது என்பதைப் பார்வையாளர்களின் மனதில் அழுத்தமாகப் பதியவைக்கிறது.

இதன் உருவாக்கத்தில் பங்காற்றிய பீட்டர் ஜாக்சன், ‘‘இந்தப் போர் மட்டும் அல்ல, உலகில் இன்று வரை நடக்கும் பல்வேறு போர்களும், தேவையில்லாத போர்களே. இதனால், சாதிக்கப்போவது எதுவும் இல்லை. அன்பு மட்டுமே மனித வாழ்வை மேம்படுத்தும். எனவே, கோபம், வெறுப்பு, ஆணவம் ஆகிய குணங்களை விட்டு, அன்பு செலுத்துங்கள். இந்த மியூசியத்துக்கு ஒரு முறை வருபவர்கள், இதை நன்கு புரிந்துகொள்வார்கள்” என்கிறார்.

ஷாலினி நியூட்டன்