இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

கின்னஸ் 60 வயதினிலே

கின்னஸ் 60 வயதினிலே

கின்னஸ் 60 வயதினிலே

லகின் மிக வித்தியாசமான, விறுவிறுப்பான, வியக்கவைக்கும் சாதனைகளை ஆவணப்படுத்தும் கின்னஸ் புத்தகத்துக்கு இது 60-வது ஆண்டு.

‘கின்னஸ்’ என்கிற வார்த்தைக்கு ‘அயர்லாந்தில் இருந்து மேற்கொள்ளப்படும் சிறந்த இறக்குமதி’ என்று பொருள். அயர்லாந்தைச் சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான், கின்னஸ். அதன் செயல் இயக்குநர், ஹியூ பீவர் (Hugh beaver) நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார். அங்கே, பறவைகளைச் சுடும் போட்டி நடந்தது. பீவர் எவ்வளவு சிறப்பாகச் சுட்டும், ஒரு குறிப்பிட்ட பறவையை வீழ்த்த முடியவில்லை. ‘இந்தப் பறவைதான் ஐரோப்பாவிலேயே வேகமான பறவை போல!’ என்றார்.

கின்னஸ் 60 வயதினிலே

நண்பர்களோ, ‘இல்லை’ என்று மறுத்தார்கள். ஏதாவது புத்தகத்தில் தேடலாம் என்றால், ஒன்றுமே சிக்கவில்லை. பிரிட்டன்  கலைக்களஞ்சியங்கள், செய்தித்தாள்கள் என்று பலவற்றுக்கும் தகவல்களைத் தேடித்தரும் மெக்வைட்டர் (Mcwhirter) சகோதரர்களை அழைத்தார், ஹியூ பீவர். ‘உலகம் முழுக்க இருக்கும் சாதனைகளைத் தொகுத்துத் தர வேண்டும்’ என்றார்.

கிடைத்த தகவல்களை, 7 இன்ச் அகலம், 10 இன்ச் நீளத்தில் பச்சை மஞ்சள் வண்ணப் புத்தகமாக அச்சிட்டு, 1955-ம் ஆண்டு மதுக்கூடங்களில் மட்டும் இலவசமாகக் கொடுத்தார்கள். 198 பக்கங்கள் கொண்டிருந்த அந்தப் புத்தகம் ஹிட் ஆனது. அன்று தொடங்கி, சாதனைகளைச் சொல்வதில் சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறது கின்னஸ் புத்தகம். இன்று, உலகம் முழுக்க மிக அதிகமாக விற்கும் காப்பிரைட் செய்யப்பட்ட அச்சுப் புத்தகம், கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்தான்.

கின்னஸ் 60 வயதினிலே

• இந்த 60-வது இதழை, 3D Augmented reality முறையில் வெளியிட்டுள்ளது. உருவங்கள், சாதனை நிகழ்ச்சிகள் கண்களுக்கு அருகில் வரும். கேம் பிரியர்களுக்கான தனிப் பிரதிகளும் உண்டு.

• 60 வருடங்கள் ஆனதை ஒட்டி, சிறந்த 60 கின்னஸ் ஐகான்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. உசைன் போல்ட், எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறிய பெண்மணி ஜாங்கோ தைபே, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இதில் இடம்பெற்று உள்ளனர்.

• தற்போது செல்ஃபியில் செய்யப்பட்ட சாதனைகளும் இடம்பெற்று உள்ளன.

• ஒரே வருடத்தில் மிக அதிகமாக அச்சிடப்பட்ட வண்ண கெட்டி அட்டைப் புத்தகம் என்கிற சாதனையும் கின்னஸ் புத்தகத்துக்கே. 2000-ம் வருடம், ஒரே பதிப்பில் 24 லட்சத்து 2 ஆயிரம் பிரதிகள் விற்றன.

கின்னஸ் 60 வயதினிலே

• இந்தியாவைச் சேர்ந்த பலரின் சுவாரஸ்யமான கின்னஸ் சாதனைகள்... ராகேஷ் குமார் என்பவர் தன்னுடைய காதுகளால் தூக்கிய எடையின் அளவு, 82.60 கிலோ. ராம் சிங் சவுஹான் என்பவரின் மீசைதான், உலகிலேயே மிகவும் நீளமானது. மீசையின் நீளம், 4.29 மீட்டர். சௌடாம்பிகா பள்ளிகளின் 2,955 மாணவர்கள் இணைந்து, காந்தியடிகள் போல வேடமிட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். தீபக் சர்மா பஜகைன், என்பவர் 113 மணி நேரம் 15 நிமிடங்களில் 17 புத்தகங்களை வாசித்தது கின்னஸ் சாதனை. ‘உலகின் மிகப் பெரிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட கொடி’ என்ற சாதனை, தமிழகத்தின் வசம் உள்ளது.

பூ.கொ.சரவணன்