சென்னைக்கு வந்த சோட்டா பீம்!
‘இந்த சோட்டா பீம் ஸ்கூலுக்குப் போகிற மாதிரியும், ஹோம் வொர்க் எழுதுகிற மாதிரியும் ஒரு எபிசோடு எடுங்கப்பா. பசங்க அப்படியாவது புத்தகத்தைக் கையில் எடுக்கட்டும்’ என்பது ஒரு அப்பாவின் புலம்பல்.

‘சோட்டா பீம் சொன்னால்தான் சோறே சாப்பிடுவேன்’ என்று சொல்லும் அளவுக்குச் சுட்டிகளைக் கவர்ந்திருக்கும் சோட்டா பீம் மற்றும் அவனது நண்பர்கள், இந்தக் கோடை விடுமுறையைக் கொண்டாட, சென்னைக்கு வந்து இறங்கினார்கள்.

சென்னை, வடபழனி விஜயா ஃபோரம் மால். சோட்டா பீம், டோலு, போலு, காளியா, ராஜு, சுக்வி, பிரின்சஸ் இந்துமதி, ஜக்கு என ஒவ்வொருவரும் மேடைக்கு வர, சுற்றி நின்ற சுட்டிகளிடம் ஆரவாரம்.
இதைப் பார்த்து கூடை நிறைய லட்டு சாப்பிட்டது போல உற்சாகமாக நடனம் ஆடினார்கள், சோட்டா பீம் மற்றும் நண்பர்கள். அவர்களோடு சேர்ந்து சுட்டிகளும் நடனம் ஆடினார்கள். கை குலுக்கி, புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

ஃப்ளையிங் ஹார்ஸ், ஹெர்குலஸ் சேலஞ்ச், பைரேட்ஸ் ஆஃப் த ஸீ எனப் பல்வேறு

விளையாட்டுகளும், சோட்டா பீம் கேரக்டர்களை மையப்படுத்தி நடந்தன. அவற்றில் பின்னி எடுத்த சுட்டிகள், சகலகலா சூரன் சோட்டா பீமையே ‘அடேங்கப்பா’ எனச் சொல்லவைத்தார்கள்.
“தினமும் டி.வியில் பார்த்த சோட்டா பீமை, நேரில் பார்த்து கை குலுக்கியது செம ஹேப்பி. அவங்க சென்னைக்கு வரலை. நாங்கதான் தோலாக்பூர் போயிட்டோம்” என்ற ஒரு சுட்டியின் முகத்தில் அவ்வளவு எனர்ஜி.
இந்த இதழில் இடம்பெற்றுள்ள விரல் ரேகை ஓவியங்களை உருவாக்கியவர், அரவிந்த் குப்தா.
பி.ஆனந்தி
பா.அருண்