இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

டைம் மெஷினாக ஒரு ரயில் மியூசியம்!

டைம் மெஷினாக ஒரு ரயில் மியூசியம்!

‘‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு...

கலக்குது பார் எங்க ஸ்டைலு.’’

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், உற்சாகமாக ஒலித்தது இந்தத் தமிழ்ப் பாட்டு. டெல்லி, தேசிய ரயில் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தனர் அந்தச் சுட்டிகள்.

‘‘இந்த அருங்காட்சியகம், 1977 பிப்ரவரி முதல் மக்களின் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்ட ரயில் இன்ஜின்கள் முதல், தற்போதைய இன்ஜின்கள் வரை இங்கே இருக்கு” என்றார், அங்கே பணியில் இருந்த ஒருவர்.  அவர் இந்தியில் சொன்னதை மற்றவர்களுக்கு தமிழில் சொன்னான் சிவ கார்த்திகேயன்.

டைம் மெஷினாக ஒரு ரயில் மியூசியம்!

‘‘எனக்கு, இந்த ரயில் மியூசியம் பற்றி நிறையத் தகவல்கள் தெரியும். நானே உங்களுக்கு கைடா இருக்கேன்” என்று  வான்டட் கைடாக மாறினான்  வாகேஸ்வரன்.

“ஓகே. கைடு சார்” என்று கோரஸ்ஸா சொன்னார்கள் நண்பர்கள்.

‘‘நம் நாட்டின் குடியரசுத் தலைவராக வி.வி.கிரி இருந்தபோது, இந்த ரயில் அருங்காட்சியகம் அமைக்க 1971, அக்டோபர் 7, அடிக்கல் நாட்டினார்.  1977 பிப்ரவரி 1-ல், ரயில்வே அமைச்சராக இருந்த கமலாபதி திரிபாதி,  அருங்காட்சியகத்தைத் திறந்து வெச்சாங்க”  என்றான் வாகேஸ்வரன்.

‘‘சபாஷ், நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுவெச்சிருக்கே” என்றாள் நந்தினி.

அப்போது, குக்கூ எனச் சத்தம் போட்டபடி வந்துநின்றது அந்த ரயில். ‘‘இது எந்த ஊருக்குப் போகிற எக்ஸ்பிரஸ்?” எனக் கேட்டான் சிவ பிரசாத்.

‘‘தம்பி, இது வெளிய போகாது. மியூசியத்துக்குள்ளயே சுத்தும் மினி எக்ஸ்பிரஸ். வாங்க, டிக்கெட் வாங்கிட்டு ஏறுவோம்” என்றாள் நந்தினி.

டைம் மெஷினாக ஒரு ரயில் மியூசியம்!

அந்த ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். மணி அடித்ததும் கிளம்பியது மினி ரயில். ‘‘எவ்ளோ பொறுமையாப் போகுது பார்த்தீங்களா. நடுவுல எங்கேயும் நிறுத்த மாட்டாங்க.” என்றான் வாகேஸ்வரன்.

ரயில் ஒரு ரவுண்டு அடித்து, மீண்டும் பழைய இடத்திலேயே அவர்களை இறக்கியது. மீண்டும் மியூசியத்தை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

‘‘அட, திடீர்னு தமிழ்நாட்டில் நுழைந்த மாதிரி இருக்கு. நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கி வரும் ஊட்டி மலை ரயில், ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் ஆகியவற்றின் மாதிரி வடிவங்களை வெச்சிருக்காங்களே” எனக் குதூகலமாகச் சொன்னான் சிவ கார்த்திகேயன்.

ஆங்கிலேயர் காலத்தில், இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வந்த ரயில்களின் மாதிரி வடிவங்கள், 150 வருடங்களுக்கு முன்பு இருந்த  நீராவியில் இயங்கும் ரயில், மைசூர் மற்றும் இந்தூர் மகாராஜாக்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த ரயில்களின் மாதிரிகள், ‘டிராம்’ எனப்படும் பொதுமக்கள் பயன்படுத்திய வண்டிகள் என வரிசையாக இருந்தன.

‘‘இந்தியாவின் மிகப் பெரிய ரயில் மியூசியமான இங்கே, 91 ரயில்களின் மாதிரிகள் இருக்கு. டெல்லிக்கு சுற்றுலா வரும் எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டிய இடம், இந்த ரயில் மியூசியம்” என்றான் வாகேஸ்வரன்.

டைம் மெஷினாக ஒரு ரயில் மியூசியம்!

ரயில் நிலையத்தை நம் கண்முன் நிறுத்தும் வகையில் ஓர் இடம் இருந்தது. அந்தக் காலத்தில், ரயில் வரும்போதும் புறப்படும்போதும் ஒலிக்கப்படும் இரும்பு மணி, சிக்னல்களுக்குப் பயன்படுத்தும் லாந்தர் விளக்குகள், ரயில் நடைமேடை பெஞ்சுகள் போன்றவை பழைமை மாறாமல் வைத்திருந்தது ஆச்சர்யம் அளித்தது.

இந்திய ரயில்வேயின் முக்கிய மைல்கற்களின் விவரங்கள், சாதனைகளை விளக்கும் வகையில் அரிய புகைப்படங்கள் எனத் தகவல் களஞ்சியமாக அரங்கு இருந்தது. ரயில் சிக்னல்கள், லெவல் கிராஸிங் போன்றவற்றின் செயல்பாடுகள் அவற்றின் முக்கியத்துவம் பற்றி விளக்கும் புகைப்படங்கள் இருந்தன.

அந்த மியூசியத்தை விட்டு வெளியே வந்தபோது, காலச் சக்கரத்தில் ஏறி இந்தியா முழுவதும் சுற்றிவந்த பிரமிப்பு.

ரயில் அருங்காட்சியகம்... சில துளிகள்!

டைம் மெஷினாக ஒரு ரயில் மியூசியம்!

• புது டெல்லியின் சாணக்கியபுரி என்ற இடத்தில் அமைந்துள்ளது, தேசிய ரயில் அருங்காட்சியகம்.

• ஃபேரி குயின் (Fairy Queen) என்பது, 1855-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நீராவி ரயில். இயங்கும் நிலையில் உள்ள உலகின் மிகப் பழைய தொடர்வண்டியான இது, டெல்லி தேசிய ரயில் அருங்காட்சியத்தில் உள்ளது.

• சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் (Integral Coach Factory) ரயில் மியூசியம், திருச்சியில் உள்ள ரயில்வே ஹெரிடேஜ் சென்டர் (Railway Heritage Centre), மைசூரில் இருக்கும் மைசூர் ரயில் மியூசியம் ஆகியவையும் இந்தியாவின் முக்கியமான ரயில் அருங்காட்சியகங்கள் ஆகும்.  

த.க.தமிழ்பாரதன்