இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

”அறிவியலில் இந்தியர்கள் சளைத்தவர்கள் அல்ல!”

”அறிவியலில் இந்தியர்கள் சளைத்தவர்கள் அல்ல!”

‘‘மக்களிடம் உள்ள அறியாமையை நீக்க வேண்டும், அறிவியல் பற்றிய தெளிவை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதே, ‘பிர்லா கோளரங்கம்’ என்கிற இந்தப் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்’’ என்கிறார், சென்னை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குநர், ஐயம்பெருமாள்.

‘அறிவியலாளர்களைச் சந்தியுங்கள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள், அறிவியல் நிபுணர்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்ச்சி, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் புதன்கிழமை நடைபெற்றுவருகிறது. அவரை, சென்னை சுட்டி ஸ்டார்களுடன் சந்தித்தோம்.

”அறிவியலில் இந்தியர்கள் சளைத்தவர்கள் அல்ல!”

‘‘விண்வெளியில் இருக்கும் கருந்துளைக்குள் (Black Hole), வருங்காலத்தில் நமது பூமி சிக்கிக்கொள்ளுமா?’’

‘‘ ‘கருந்துளை’ என்பது பல ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. பூமி அதில் சிக்கிக்கொள்ள வாய்ப்பே இல்லை.’’

‘‘சூரியனின் வெப்பம் அதிகரிப்பது ஏன்?’’

‘‘வருடங்கள் செல்லச் செல்ல, சூரியனில் உள்ள ஹைட்ரஜன், ஹீலியமாக மாறுகிறது. இந்த ஹீலியம், மாங்கனீஸ் மற்றும்  இரும்பாக மாறி, சூரியனின் விட்டமும் அதன் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதுதான் வெப்பத்தின் தாக்கத்துக்குக் காரணம்.”

‘‘பூமி உருவானபோது அது எந்த நிலையில் இருந்தது?’’

‘‘பூமி உருவானபோது, நெருப்புக் கோளமாக, உலோகம் மற்றும் கனிமங்கள் உருகிய நிலையில் இருந்தன. படிப்படியாகக் குளிர்ந்து, அடர்த்தி மற்றும் எடை அதிகமான இரும்பு மற்றும் நிக்கல், பூமியின் மையப் பகுதிக்கும், எடை குறைவான பொருட்களின் மேல் பரப்பிலும் தங்கி, தற்போது காணும் நிலையில் உள்ளது.’’

‘‘வார்ம் ஹோல் (Worm Hole) என்றால் என்ன?’’

‘‘அண்டவெளி புழுத் துளை (Worm Hole) என்பது, ஒரு கற்பனை சார்ந்த கோட்பாடு.  ஆனாலும், இதை உள்ளடக்கி, கொள்கைரீதியான சான்றுகள் காணப்படுகின்றன. ஒரு வகையில், கருந்துளையின் முப்பரிமான மாற்றுக் கோட்பாடாகக் கருதலாம்.’’

‘‘உண்மையிலேயே ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துள்ளதா?’’

‘‘அதை, ஓட்டை என்பதைவிட அடர்த்தி குறைவாக உள்ளது எனச் சொல்வதே சரி. தற்போது, உலகெங்கும் ‘க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட்’ (Green House Effect) மூலம் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற பிற வாயுக்களின் வெளிப்பாடு குறைக்கப்பட்டுள்ளது, வரவேற்க வேண்டிய விஷயம்.”

”அறிவியலில் இந்தியர்கள் சளைத்தவர்கள் அல்ல!”

‘‘சூரியன் மிகப் பெரிய சிவப்புக் கோளாக மாறி, உலகை அழித்துவிடும் என்கிறார்களே, அது உண்மையா?’’

‘‘சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அளவு முற்றிலும் குறைந்து, ஹீலியம் வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, சூரியனின் வெப்பம் உச்ச நிலையை அடைந்து, சிவப்புக் கோளமாக மாறும். இதற்கு, 500 கோடி ஆண்டுகள் ஆகும்.’’

‘‘வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா எந்த நிலையில் உள்ளது?’’

‘‘இந்தியா, விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. உதாரணத்துக்கு... நாம் மிகக் குறைந்த பொருட் செலவில் உருவாக்கிய ‘சந்திரயான் மற்றும் ‘மங்கள்யான்’ திட்டங்கள், உலக நாடுகள் அனைத்தையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளன.’’

‘‘விண்வெளியில் மனிதனால் வாழ முடியுமா? அப்படி முடிந்தால், பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு  முன்னேறிவிட்டான் என்று எடுத்துக்கொள்ளலாமா?’’

‘‘மனிதன் வாழ்வதற்கு உரிய தட்பவெப்ப நிலையும் ஆக்ஸிஜனும் விண்வெளியில் சீராக இல்லை. இவை அனைத்தையும் நாம் குறுகிய கால செயல்பாட்டுக்கு மட்டுமே செயற்கையாக உருவாக்க முடியும். ஆதலால், மனித சமுதாயம் நீண்ட காலம் விண்வெளியில் வாழ முடியாது.’’
 
‘‘கோள்களின் நிலைக்கும் மனிதனின் செயல்பாட்டுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?’’

‘‘அறிவியல் அடிப்படையில் எந்தச் சான்றும் இல்லை.’’

‘‘அறிவியல் துறையில் சிறந்து விளங்க எந்தப் படிப்பை தேர்வுசெய்ய வேண்டும்?’’

‘‘இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு பாடங்களைத் தேர்வுசெய்யலாம். முனைவர் பட்டம் வரை கண்டிப்பாக முடிக்க வேண்டும். இதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் பலவற்றில் பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் துறைகளில் ஆராய்ச்சி வசதிகள், சலுகைகள் வழங்கப்படுகின்றன.’’

‘‘நம் முன்னோர்கள், அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேறியவர்கள் என்ற கூற்று உண்மையா?’’

‘‘சந்தேகமே வேண்டாம். அறிவியலில் அன்று முதல் இன்று வரை இந்தியர்கள் சளைத்தவர்கள் அல்ல. ஆர்யபட்டா, பாஸ்கரா போன்றவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு பெரும் பங்கு

”அறிவியலில் இந்தியர்கள் சளைத்தவர்கள் அல்ல!”

ஆற்றியுள்ளனர். நம் முன்னோர்கள், இயற்கையின் செயல்பாடுகளைப் பல வருடங்கள் தொடர்ச்சியாக ஆராய்ந்து, ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பொறுமை, இன்றைய ஆராய்ச்சி மாணவர் களுக்கு இன்றியமையாத ஒன்று.’’

‘‘இந்த பிர்லா கோளரங்கத்தில், கோடை விடுமுறைக் கால சிறப்பு வகுப்புகள் ஏதேனும் உள்ளதா?’’

‘‘இருக்கிறதே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மூன்று நாட்கள் அறிவியல் முகாம், ‘ரோபோட்டிக்ஸ்’ பற்றிய அடிப்படை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை தவிர, கோவை, திருச்சி மற்றும் வேலூர் நகரங்களிலும் நடத்தப்படுகின்றன. அவற்றின் நேரம் மற்றும் கட்டணங்கள் குறித்து அந்தந்த நகரங்களில் உள்ள மையங்களை அணுகலாம். இவற்றில் பங்கேற்று, கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம்.”

பிர்லா கோளரங்கம்!

சென்னை, கோட்டூர்புரத்தில் இருக்கும் இந்தக் கோளரங்கத்தில், அண்டங்கள் மற்றும் விண்மீன்கள் எப்போது உருவாகின மற்றும் கோள்களின் இயக்கம் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘மருத்துவரைச் சந்தியுங்கள்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இரண்டாவது சனிக்கிழமைகளில், வானத்தில் உள்ள விண்மீன்களையும் கோள்களையும் தொலைநோக்கி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணிதத்தின் மேல் உள்ள பயத்தை நீக்குவதற்கு ‘Maths Phobia’ என்ற நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கு ‘Science is not costly’ என்ற கருத்தை வலியுறுத்த, எளிய பொருள்களில் பயிற்சி நடைபெறுகிறது. கோடைக்காலத்தில் பல்வேறு அறிவியல் முகாம்கள் நடைபெறுகின்றன.

சி.தினேஷ் குமார்