ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

”சவால்கள் அதிகம் வேண்டும்!”

”சவால்கள் அதிகம் வேண்டும்!”

”சவால்கள் அதிகம் வேண்டும்!”

“கடந்த ஏப்ரல் மாதத்தை என்னால் மறக்கவே முடியாது. மும்பையில் நடந்த தேசிய வில்வித்தைப் போட்டியின் சப்-ஜூனியர் பிரிவில், ஐந்து தங்கப் பதக்கங்களோடு, இந்தியாவின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் ஜெயிச்சு வந்தேன்” என தனது வசீகரச் சிரிப்பை அம்பாக ஏவுகிறார் கார்த்திகேயன்.

சேலம் மாவட்டம், வனவாசி கிராமத்தில் உள்ள ஈசா வித்யா ரமணியம் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் கார்த்திகேயன், வில்வித்தையில் தேசிய அளவில் சாதனை படைத்துவருகிறார்.

வில்வித்தை விளையாட்டில், இந்தியன் பேர் போ (Indian bare bow), ரீகவ் (Recurve), காம்பவுண்ட் (Compound) என மூன்று முக்கிய வகைகள் உண்டு. இதில், ‘இந்தியன் பேர் போ’ வகையில், இந்திய சப்-ஜூனியர் பிரிவின் முதல் நிலை வீரர், கார்த்திகேயன்.

”சவால்கள் அதிகம் வேண்டும்!”

‘‘நான் மூன்றாவது படிக்கும்போதே, வில்வித்தை விளையாட்டைக் கத்துக்க ஆரம்பிச்சேன். நான் கலந்துக்கிட்ட மாவட்ட அளவிலான முதல் போட்டியிலேயே தங்கம் ஜெயிச்சேன். ‘இந்தியன் பேர் போ’ வகை என்பது, மூங்கிலால் செய்யப்பட்ட வில்லையும் அம்பையும் பயன்படுத்தி விளையாடுவது. வில்வித்தை வகைகளில் மிகவும் சவாலானதும் கடினமானதும் இதுதான். சவாலை அதிகம் சந்திக்கச் சந்திக்கத்தானே, சாதனை படைக்க முடியும்” என்கிறார் கார்த்திகேயன்.

கார்த்திகேயனின் பயிற்சியாளர் மதன் குமார், தேசியஅளவிலான வில்வித்தை வீரர்.

‘‘வில்வித்தையில் இண்டோர், அவுட்டோர் என இரு பிரிவுகள் இருக்கு. இண்டோர் வகையில், ஒரு ஸ்டேடியத்துக்குள் போட்டிகள் நடக்கும். 14 வயதுக்கு உட்பட்ட சப்-ஜூனியர் பிரிவில், இலக்கு 12 மீட்டர் தொலைவில் இருக்கும். மூன்றரை நிமிடங்களுக்குள் ஐந்து அம்புகள் எய்த வேண்டும். சிறிய இடைவேளை விட்டு மீண்டும் அதேபோல எய்த வேண்டும். இப்படித் தொடர்ந்து ஆறு முறை 30 அம்புகளை எய்த வேண்டும். இந்த அம்புகளை, இலக்குப் பகுதியான ஐந்து வளையங்களைக்கொண்ட பலகையில்(Target Board) அல்லது மிருகங்களின் உருவம் பொறித்து, மார்க் செய்த பலகையில் எய்த வேண்டும். ஒவ்வொரு அம்புக்கும் தலா 5 புள்ளிகள். அம்புகள் செருகும் இடத்துக்கு ஏற்ப, புள்ளிகள் மாறும்.

”சவால்கள் அதிகம் வேண்டும்!”

அவுட்டோர் முறையில், வனப் பகுதியில் இலக்கை நிர்ணயித்து அம்பு எய்த வேண்டும். இந்தியன் பேர் போ வகையைக் கவனமாக விளையாடணும். சில நேரம் மூங்கில் உடைந்து, அம்பு நம் மீதே தாக்கும் வாய்ப்பும் இருக்கு. நமது பலமும், இலக்கின் மீதான கவனமும், ஒவ்வொரு நொடியும் மிக முக்கியம். கார்த்திகேயனின் இந்த தேசியச் சாதனை, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறது” என்றார்.

உணவுக் கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், பயிற்சி என எல்லாம் ஒரு புள்ளியில் இணைந்தால்தான், வில்வித்தையில் வெற்றிக்கான இலக்கை எட்ட முடியும்.

‘‘போன வருஷமே உலக வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைச்சது. ஆனால், வெளிநாடு செல்ல, பொருளாதார வசதி இல்லை. இந்த வருஷம், செப்டம்பரில் நடக்கப்போகும் உலக வில்வித்தைப் போட்டிக்கு மீண்டும் தேர்வாகி இருக்கேன். இந்த முறையாவது கலந்துக்கணும்னு ஆசை. இந்திய அளவில் சாதனை படைச்சு, தமிழன் எனச் சொல்லிக்கிட்ட மாதிரி, உலக அளவில் சாதனை படைச்சு, இந்தியன் எனப் பெருமையாகச் சொல்லிக்கணும். ஒலிம்பிக்கில் இதுவரை, இந்தியர்கள் யாரும் வில்வித்தையில் தங்கம் ஜெயிச்சது  இல்லை. அந்த நிலையை மாற்றணும்” என்ற கார்த்திகேயன் குரலில் நம்பிக்கை கூர்மையாகப் பாய்கிறது.

வில்வித்தை சில துளிகள்...

இந்தியன் பேர் போ வகையில், ஃபீல்டு ஆர்ச்செரி (Field Archery), டார்கெட் ஆர்ச்செரி (Target Archery) என இரு பிரிவுகள் உண்டு.

ஃபீல்டு ஆர்ச்செரியில், அனிமல் ஆர்ச்செரி என்பது ஒரு வகை.  யானை, மான், கரடி, உடும்பு, மரப்பல்லி என ஐந்து விலங்குகளின் பொம்மைகள் மீது அம்பை எய்த வேண்டும். முதல் மூன்று அம்புகளை சரியாக எய்தவர்களுக்கு 20 புள்ளிகள். அடுத்து, 18 மற்றும் 10 புள்ளிகள் என வழங்கப்படும்.

டார்கெட் ஆர்ச்செரி முறையில், இண்டோர் மற்றும் அனிமல் ஆர்ச்செரி வகைகள் கிடையாது. அவுட்டோர் ஆர்ச்செரி மட்டுமே.ஆறு சுற்றுகள் வீதம் 36 அம்புகளை எய்த வேண்டும். ஒவ்வொரு அம்புக்கும் 10 புள்ளிகள்.

ரீகவ் வகையில்... ரீகவ் பேர் போ, ரீகவ் ஃப்ரீஸ்டைல், ரீகவ் போ என மூன்று வகைகள் உள்ளன. காம்பவுண்ட் வகையில்... காம்பவுண்ட் பேர் போ, காம்பவுண்ட் ஃப்ரீஸ்டைல், காம்பவுண்ட் போ என மூன்று வகைகள் உள்ளன.

ரீகவ் மற்றும் காம்பவுண்ட் வகையில் பயன்படுத்தப்படும் வில்லானது, ஃபைபரால் செய்யப்பட்டிருக்கும். காம்பவுண்ட் வகையில் இருக்கும் வில்லில், லென்ஸ் ஒன்று இருக்கும். இந்த லென்ஸ் மூலம், எளிதாக இலக்கை நோக்கி அம்பை எய்த முடியும்.

ரீகவ் மற்றும் காம்பவுண்ட் வகைகளையே  வெளிநாட்டினர் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் விலை, மிகவும் அதிகம்.

கு.ஆனந்தராஜ்

க.தனசேகரன்