ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!

ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!

சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் எனக் கற்பனையில் தோன்றி, நிஜம் போல மக்கள் மனதில் பதிந்த ஹீரோக்கள், காமிக்ஸ்களில் கலக்கி வருவது ஒரு பக்கம். நிஜத்தில், தங்கள் துறையில் படைத்த சாதனைகள் மூலம், மக்கள் மனதைக் கவர்ந்து, ரியல் டு காமிக்ஸ் கதாபாத்திரங்களாக ஜொலிக்கும் சிலரின் அப்டேட் இங்கே...

ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!

ஒபாமா காமிக்ஸ்!

பாரக் ஒபாமா அமெரிக்காவின் அதிபர் எனத் தெரியும். அவர், தீவிரமான ஸ்பைடர்மேன் காமிக்ஸ் பிரியர் எனத் தெரியுமா?

ஸ்பைடர்மேன் கதைப் புத்தகங்கள் வெளிவந்த காலம் முதலே அவற்றைச் சேகரித்து ‌ வைத்திருக்கிறார் ஒபாமா. இந்த விஷயம் தெரிந்ததும், காமிக்ஸ் நிறுவனங்கள் ஒபாமாவையும் கதாபாத்திரமாக மாற்றும் கோதாவில் இறங்கின. மார்வெல் காமிக்ஸ் நிறுவனம், 2009-ம் ஆண்டு ‘The Amazing Spiderman’ என்ற காமிக்ஸ் அட்டைப் படத்தில் ஒபாமாவை வெளியிட்டது.

ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!
ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!

ஒபாமா எந்த காமிக்ஸில் வந்தாலும் அது ஹிட் எனத் தெரியவே, அவருக்காகவே ஸ்பெஷல் கதாபாத்திரங்களைத் தங்கள் காமிக்ஸ் கதைகளில் கொண்டுவந்தது, மார்வெல் காமிக்ஸ். ஒபாமா அதிபர் ஆவதற்கு முன்பே, அவர் பெயரில் வெளிவந்த காமிக்ஸ் உண்டு. அதிபர் ஆன பிறகு, காமிக்ஸ்களில் கௌரவத் தோற்றத்தில் வந்து செல்கிறார் ஒபாமா. உள்ளூர் பத்திரிகைகள் பலவும் ‘ஒபாமா காமிக்ஸ்’, ‘ஒபாமா சாகசங்கள்’ என காமிக்ஸ்களை வெளியிடுகின்றன. இவை அனைத்துமே அமெரிக்காவில் வைரல் ஹிட்!

பர்கா அவெஞ்சர் (Burka Avenger)

ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!

பாகிஸ்தானில் உருவான சூப்பர் ஹீரோயின் தொடர், ‘புர்கா அவெஞ்சர்’. பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்காக, ஆரோன் ஹரூன் ரஷீத் (Aaron Haroon Rashid) என்பவர் உருவாக்கிய பாத்திரம், ஜியா (Jiya). ஜூலை 2013-ல் உருது மொழியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் அமோக வரவேற்பைத் தொடர்ந்து, ஆங்கிலம், ஹிந்தி எனப் பலமொழி பேசினாள் ஜியா.

பாகிஸ்தான் என்றதும், இளம் போராளி மலாலாவை மறக்க முடியுமா? அதிகாரபூர்வமாக அவர் பெயரை எங்கும் குறிப்பிடாவிட்டாலும், மலாலாதான் ஜியா... ஜியாதான் மலாலா எனக் கொண்டாடுகிறார்கள் பாகிஸ்தான் சுட்டிகள்.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் இருக்கும் கற்பனை ஊரான ஹல்வாபூர், ஜியாவின் சொந்த ஊர். அந்த ஊரின் குழந்தைகளுக்கு ஜியா, ஒரு முன்மாதிரியான ஆசிரியை. அஷு, இம்மு, மூலி என்ற மூன்று சுட்டிகள், ஜியாவுக்கு ஸ்பெஷல். அமைதியான ஆசிரியையாக உலாவரும் ஜியா, ஊருக்குள் தீய நோக்கத்துடன் யாராவது நுழைந்தால், பர்தா அணிந்துகொண்டு சூப்பர் ஹீரோயின் அவதாரம் எடுப்பார். பேனா, புத்தகங்கள் ஆகியன தற்காப்பு ஆயுதங்களாக மாறும். மூன்று சுட்டிகளும் ஜியாவுக்கு உதவுவார்கள்.

ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!

சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கும் ஜியா சொல்லும் முக்கிய மெசேஜ்... பெண் கல்வி, பெண் உரிமை, குழந்தைகள் மீது அன்பு. இதில் எங்கு தப்பு நடந்தாலும் ஜியா ஆஜர் ஆகிவிடுவார். குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பையும் பல விருதுகளையும் அள்ளிவிட்டது, பர்கா அவெஞ்சர். இப்போது, யூடியூபில் செம ஹிட்!

தி கவர்னேட்டர் (The Governator)

கவர்னர் + டெர்மினேட்டர் என்பதன் கலவைதான் ‘கவர்னேட்டர்’. அப்படியானால், ஹீரோ யாராக இருக்கும்?

ஆக்‌ஷன் ஹீரோவாக ஹாலிவுட்டில்  பின்னியெடுத்தவர். கலிஃபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்தவர். அர்னால்டு ஸ்வாஸினேகர் (Arnold Schwarzenegger) 2011-ம் ஆண்டு அறிவித்த இந்தக் கதை, 2012-ல் காமிக்ஸாக வெளிவந்து அமெரிக்காவில் ஹிட் அடித்தது. இதன் தயாரிப்பாளர் அர்னால்டு மற்றும் ஸ்டான் லீ.

ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!

கலிஃபோர்னியாவின் கவர்னராக இருக்கும் அர்னால்டு, சட்டவிரோதச் செயல்களை சட்டப்படி தட்டிக்கேட்கும் மனிதர். நிலைமை கைவிட்டுப் போனாலோ, காவல் துறையினால் பிடிக்க முடியாத அளவுக்கு வில்லன்கள் டிமிக்கி கொடுத்தாலோ, அண்ணன் வழி தனி வழியாக மாறும்.

திருட்டு, கொள்ளை அடாவடி களில் ஈடுபடும்  வில்லன்களை, ராட்சச துப்பாக்கி, நவீனக் கருவிகள் மூலம் ஒண்டிக்கு ஒண்டி சந்திப்பார். அப்புறம் என்ன? அதகளம்தான்.

வில்லன்களின் மெகா கூட்டணியான G.I.R.L.I.E (Gangsters Imposters Racketeers Liars & Irredeemable Ex-cons) என்னும் அமைப்பு, மொத்த காவல் துறைக்கும் அல்வா கொடுக்க, அவர்களை எப்படி அழிக்கிறார் என்பது கிளைமாக்ஸ். இந்த காமிக்ஸ் வெற்றி உற்சாகம் கொடுக்க, இப்போது அதனை 3D தொடராக மாற்றும் வேலையில் சுறுசுறுப்புடன் இறங்கியிருக்கிறார் அர்னால்டு.

ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!

பிரேசில் காமிக்ஸ்!

பிரேசில் நாட்டு மக்களுக்கு காற்று, நீர், உணவுக்கு அடுத்து எல்லாமே கால்பந்து விளையாட்டுதான். விளம்பரமோ, காமிக்ஸோ எதுவானாலும் அவர்களின் ஹீரோக்கள், கால்பந்து வீரர்கள்தான். கால்பந்து வீரர்களை காமிக்ஸ் ஹீரோவாக்கி ரசிப்பது, கால்பந்து ஜாம்பவான் பீலே காலத்தில் இருந்தே இருக்கிறது. இதில், ரொனால்டோ. ரொனால்டினோ எல்லோரும் வந்துவிட்டார்கள். இப்போது ஹிட் காமிக்ஸ் ஹீரோ, நெய்மர்.

மோவாக் ஹேர்ஸ்டைலுடன் பந்தை இலக்கு நோக்கிச் செலுத்தும் கோல் கிங், நெய்மரை கடந்த உலகக் கோப்பைத் தொடரில் பார்த்து ரசித்திருப்பீர்களே. அதிரடி நெய்மரின் சிறிய வயது கதாபாத்திரம்தான் நெய்மர் ஜூனியர். (Neymar Jr). நார்வே புத்தகக் கழகத்தால் 2013 முதல் வெளியிடப்பட்டு வரும் காமிக்ஸ் இது.

ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!

பிரேசில் பள்ளியில் படிக்கும் ஜூனியர் நெய்மர், கால்பந்து விளையாட்டில் படுசுட்டி. நண்பர்களோடு கால்பந்து விளையாடும் நெய்மர், எப்படி தன் எதிரி அணிகளை ஜெயித்து  சாம்பியன் ஆகிறான் என்பது கதை. விடுமுறையில் நடக்கும் சினக்ச் சின்ன நகைச்சுவைக் கலாட்டாக்கள்  கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. பிரேசிலில் இதற்கு முன்பு வெளியிடப்பட்ட காமிக்ஸ்களைவிட, இதற்கு பக்கா மாஸ் வரவேற்பு!

ஞா.சுதாகர்