மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

ஆசிரியை உருவில் ஓர் அம்மா!

‘‘அம்மாவைப் பார்க்கணுங்களா? நான் கூட்டிட்டுப்போறேன்” என அந்தச் சுட்டிகள் ஆளாளுக்கு கையைப் பிடித்து உற்சாகமாக அழைத்துச் சென்றார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம்,  சந்தவாசல் அருகே உள்ளது துளுவபுஷ்பகிரி கிராமம். அங்கே அமைந்திருக்கிறது இரண்டு வகுப்புகளே உடைய ‘அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி’. அதன் பொறுப்பாசிரியை  மீனா. அவரை எல்லோரும் அம்மா என்றே அழைக்கிறார்கள்.

கனவு ஆசிரியர்!

“நான் இங்கே, 14 வருடங்களா ஆசிரியையா இருக்கேன். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றது முதல் பொறுப்பாசிரியையா இருக்கேன். வேறு பெரிய பள்ளிக்குப் போனால், சம்பளம் அதிகமாகக் கிடைக்கும். ஆனால், இந்தப் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு குழந்தையையும் என்னுடைய குழந்தையா நினைக்கிறேன். யாராவது சொந்தக் குழந்தையை விட்டுட்டுப் போவாங்களா?” எனப் புன்னகைக்கிறார் இந்த அன்பு அம்மா.

இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் எட்டு சிறிய கிராமங்கள் உள்ளன. அங்கே உள்ள குழந்தைகள் ஆரம்பக் கல்விக்காக தொலைவில் உள்ள அரசுப் பள்ளிக்கோ, தனியார் பள்ளிக்கோ செல்லும் நிலைதான் இருக்கிறது.

கனவு ஆசிரியர்!

‘‘அதுக்குக் காரணம், இங்கே என்னையும் சேர்த்து இரண்டு ஆசிரியைகள் மட்டுமே. 38 மாணவர்களே படிக்கிறார்கள். அரசும் புதிய ஆசிரியர்களை நியமிக்கலை. 150 மாணவர்களாவது இருக்கணும். இந்த நிலையை மாற்றணும்னா, அடிப்படை வசதிகளோடு புதிய கட்டடத்தை உருவாக்கணும்னு அதற்கான முயற்சியில் இறங்கினேன். அரசுப் பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான கோவிந்தசாமி, 20 சென்ட் நிலத்தை தானமாகக் கொடுத்தார். அப்பலோ மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் மோகன் என்பவர்  ரோட்டரி கிளப் மூலம் உதவி செய்திருக்கிறார்.இன்னும் பலரின் உதவியோடு புதிய கட்டடத்தைக் கட்டிட்டு இருக்கோம். அதில், கணினி வசதியையும் கொண்டுவரப்போறோம். எட்டு கிராமத்துக் குழந்தைகளும் இங்கே இலவசமா கல்வி கற்கணும். அதுதான் என்னுடைய ஆசை” என்கிறார் மீனா.

‘‘டீச்சர் அம்மாவே அவங்களோட செலவில் எங்களுக்கு செருப்பு, நோட்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்காங்க. தினமும் இடைவேளையில், பால், ரொட்டி, இனிப்பு வாங்கிக் கொடுப்பாங்க. நாங்க எவ்வளவு குறும்பு பண்ணினாலும் திட்டாம சிரிப்பாங்க” என்கிறார், நான்காம் வகுப்பு படிக்கும் ரேணுகா தேவி.

கனவு ஆசிரியர்!

மாணவர்கள், தினமும் காலையில் 7.30 மணிக்கே உற்சாகமா வந்துவிடுகிறார்கள். யோகா, தியானப் பயிற்சிகளையும் கற்றுத்தருகிறார் மீனா. அதன் பிறகுதான் பாடம்.

‘‘உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தானே நல்லா படிக்க முடியும்.  வருடம் ஒருமுறை கல்விச் சுற்றுலாவும் அழைச்சுட்டுப்போறேன். தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தைக்குக் கிடைக்கிற கல்வி சம்பந்தமான விஷயங்கள் எதையும் இவங்க  மிஸ் பண்ணிடக் கூடாது. அதுதான் என்னுடைய நோக்கம்” என்கிற மீனா குரலில் அக்கறை ஒளிர்கிறது.

ரா.கீர்த்திகா, கு.ஆனந்தராஜ்

கா.முரளி