ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

கசக்கும் விதை... இனிக்கும் கட்டி!

மாயா டீச்சரின் மந்திர கம்பளம்

“ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம். இனிப்போடு ஆரம்பிப்போம். நானே செய்த ஹோம் மேட் சாக்லேட், எடுத்துக்கங்க” என்றார் மாயா டீச்சர்.

கோடை விடுமுறை மற்றும் புது வகுப்பு பரபரப்பு முடிந்து, அன்றுதான் மாயா டீச்சரின் வீட்டுக்கு வந்திருந்தார்கள் கதிர், கயல், அருண் மற்றும் ஷாலினி.

கசக்கும் விதை... இனிக்கும் கட்டி!

“சாக்லேட் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு டீச்சர்” என்ற கதிர், இன்னொரு துண்டு எடுத்துக்கொண்டான்.

“கொக்கோ மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டைகளைப் பயன்படுத்திதான் சாக்லேட் தயாரிக்கிறாங்கன்னு படிச்சிருக்கேன். நிஜமாவா டீச்சர்?” எனக் கேட்டாள் கயல்.

கசக்கும் விதை... இனிக்கும் கட்டி!

‘‘ஆமாம் கயல். மத்திய மெக்சிகோ பகுதியில் வாழ்ந்த சிவப்பு இந்தியர்களின் நாவாடல் (Nahuatl) என்ற மொழியில், ‘சாக்கொலேட்’ என்பதற்கு ‘கசப்பான நீர்’ என்று அர்த்தம். கொக்கோ கொட்டைகளில் இருந்து அவர்கள் உருவாக்கிப் பருகிய சாறுதான் சாக்கொலேட். இதுதான் இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை, பால் எனப் பல்வேறு கலவைகளின் தயாரிப்பு நிலைக்கு மாறி, அப்புறம் இனிப்பான சாக்லேட் ஆனது. மாயன் இன மக்கள் கி.மு 600-ம் ஆண்டிலேயே கொக்கோ பானத்தைப் பயன்படுத்தியதுக்கான ஆதாரங்கள் இருக்கு” என்றார் டீச்சர்.

“கொக்கோ மரத்தை நீங்க பார்த்து இருக்கீங்களா?” எனக் கேட்டவாறு வந்தது மந்திரக் கம்பளம்.

“இது வரைக்கும் இல்லை. இனிமே பார்த்துடுவோம். உன் மேலே சவாரி செய்தும் ரொம்ப நாளாச்சு” என்றான் அருண்.

கசக்கும் விதை... இனிக்கும் கட்டி!

அடுத்த நொடி, அந்த அறை முழுவதும் கமகம மணம் வீசியது. பெரிய சாக்லேட் பட்டையாக மாறியிருந்தது மந்திரக் கம்பளம்.

‘‘வாவ்... சூப்பரா இருக்கிறே கம்பளமே. நீ என்ன ஃபிளேவர்?” என்று அருகில் குனிந்து முகர்ந்துபார்த்தாள் ஷாலினி.

“ஆர்வக்கோளாறுல கடிச்சு சாப்பிட்டுடாதே. சீக்கிரம் ஏறுங்க” என்றது மந்திரக் கம்பளம்.

எல்லோரும் ஏறிக்கொண்டதும், காற்றில் மிதந்து பறந்தது. சற்று நேரத்தில் அவர்கள் ஒரு மரத்தின் கீழே நின்றிருந்தார்கள். அந்த மரத்தின் கிளைகளில், சிறிய அளவு பப்பாளி போன்ற பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

கசக்கும் விதை... இனிக்கும் கட்டி!

“கொக்கோ மரம் முதன்முதலில் உருவானது, மத்திய மற்றும் தென் அமெரிக்கக் காடுகளில்தான். இன்று உலகம் முழுவதும் ஒரு கோடியே 70 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு பயிரிடப்பட்டு இருக்கு. நான்கு முதல் எட்டு மீட்டர் உயரம் வளரும் இந்த மரம், நான்கு அல்லது ஐந்தாவது ஆண்டில் பூக்கத் தொடங்கும்” என்றார் டீச்சர்.

‘‘மல்லிகை மாதிரி வெள்ளையா இருக்கே...அதுதான் கொக்கோ பூக்களா?” எனச் சுட்டிக்காட்டி கேட்டான் கதிர்.

‘‘அதேதான். ஒரு மரத்தில் ஓர் ஆண்டுக்கு சுமார் 6,000 பூக்கள் பூக்கும். ஆனால், அவற்றிலிருந்து 20 காய்கள்தான் உருவாகும். கொக்கோ காய் அல்லது கொக்கோ பழம் எனப்படும் இவை, அதிகமாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இருக்கும். ஒரு பழம், அரை கிலோ எடை இருக்கும். ஒரு பழத்துக்குள் அதன் தன்மையைப் பொருத்து, 20 முதல் 60 கொட்டைகள் வரை இருக்கும். சுமார் 1,200 கொட்டைகளில் இருந்து ஒரு கிலோ சாக்லேட் பேஸ்ட் தயாரிக்கலாம்” என்றது கம்பளம்.
“இந்த கொக்கோ மரங்களில் வகைகள் இருக்கா?” எனக் கேட்டாள் கயல்.

கசக்கும் விதை... இனிக்கும் கட்டி!

“ஓ... மூன்று முக்கிய ரகங்கள் இருக்கு. இவற்றில் விலை உயர்ந்தது, மத்திய அமெரிக்காவில் காணப்படும் கிரில்லோ (Criollo) என்ற வகை. இதன் கொட்டைகள் குறைந்த கசப்புத் தன்மையோடு இருக்கும். கொஞ்சம் வறுத்தாலே, அருமையான மணம் கிடைக்கும். இதற்கு அடுத்த வகை, ஃபொராஸ்டிரோ (Forastero) என்பது. இந்த இரண்டின் கலப்பினத்தில், டிரினிடாட் நாட்டில் உருவாக்கப்பட்டது, டிரினிடாரியோ (Trinitario) வகை. மற்றவற்றைவிட இதன் தரம் குறைவானது” என்றார் டீச்சர்.

“இந்தக் கொட்டைகளில் இருந்து சாக்லேட் பேஸ்ட்டை எப்படித் தயாரிப்பாங்க?” எனக் கேட்டான் அருண்.

கசக்கும் விதை... இனிக்கும் கட்டி!

“பெரிய பெரிய ஃபேக்டரிகளில் எல்லாவற்றுக்கும் மெஷின் இருக்கு. அது இல்லாமல், சிறிய அளவில் கொட்டைகளைப் பிரித்து எடுத்து விற்பனை செய்பவர்கள் இருக்காங்க. அதை நேரடியாகவே பார்க்கலாம்” என்ற கம்பளம் அவர்களை அதே இடத்தின் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றது.

அங்கே, பறிக்கப்பட்ட கொக்கோ காய்களை அறுத்து, அதிலிருந்து கொழகொழப்பான வெள்ளைச் சதையுடன் வந்த கொட்டைகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

“இந்தக் கொட்டைகளைத் திறந்த நிலையில் உள்ள மரப் பெட்டிகளில் சேகரித்து, ஆறு நாட்கள் வரை நொதிக்கவிடுவாங்க. பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டதும், வெளியே எடுத்து ஆறு நாட்கள் காயவிடுவாங்க. அப்படிக் காயவிட்டதும், பாதாம் அல்லது காபி நிறத்துக்கு மாறி இருக்கும். அவற்றைத் தரம் பிரித்து, சாக்லேட் ஃபேக்டரிகளுக்கு அனுப்புவாங்க. அங்கே, வறுத்துக்  கூழாக்குவாங்க. வறுக்கப்படும் முறை, வறுக்கும் நிமிடங்களின் அளவைப் பொருத்து அவற்றின் மணமும் தரமும் மாறும். சுவையும் மாறும். அதன் பிறகு, அதில் சேர்க்கப்படும் கலவையைப் பொருத்து பல்வேறு சாக்லேட்டுகளாக உருவாகும்” என்றது கம்பளம்.

கசக்கும் விதை... இனிக்கும் கட்டி!

“முதன்முதலில் சாக்லேட் கட்டிகளை எப்போ டீச்சர் கண்டுபிடிச்சாங்க?” எனக் கேட்டாள் ஷாலினி.

“மத்திய கால அமெரிக்கர்கள், இதை சோளக்கூழ், தேன் கலந்து பானமாகக் குடிச்சுட்டு இருந்தாங்க. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க வந்தார். இந்த கொக்கோ கொட்டைகளைப் பார்த்து, ஸ்பெயினுக்கு எடுத்துப்போனார். ஐரோப்பா முழுவதும் கொக்கோ பானம் பரவிச்சு. ஐரோப்பியர்கள், கொக்கோ பானத்தில் சர்க்கரையைச் சேர்த்துக் குடிச்சாங்க. இப்படி ரொம்ப ஆண்டுகளுக்கு சாக்லேட் ஒரு பானமாகத்தான் இருந்தது” என்றார் டீச்சர்.

‘‘திரவ வடிவில் இருந்த சாக்லேட் பானம், 1826-ல் திட வடிவ சாக்லேட்டுகளாக விற்பனைக்கு வர ஆரம்பிச்சது. ஜோசப் ஃபிரை (Joseph Fry) என்ற ஆங்கிலேயர், 1847-ல் கன செவ்வக வடிவில் சாக்லேட்டுகளை உருவாக்கி விற்பனை செய்தார். டேனியல் பீட்டர் என்பவர், பால் கலந்த மில்க் சாக்லேட்டுகளை 1867-ல் உருவாக்கினார். 1868-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த கேட்பரி (Cadbury) சகோதரர்கள், பெட்டிகளில் அடைச்சு விற்பனை செய்தாங்க. இன்றைக்கு வரை சாக்லேட் தயாரிப்பில் கொடி கட்டிப் பறந்துட்டு இருக்காங்க” என்றது மந்திரக் கம்பளம்.

‘‘குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களைத் தயாரித்த ஹென்றி நெஸ்லே (Henri Nestle), மில்க் சாக்லேட்டுகளில் சில மாற்றங்களைச் செய்து, இன்னும் சுவையான சாக்லேட்டுகளை உருவாக்கினார். இப்படி பல வகைகளில் சாக்லேட் உருவாக ஆரம்பிச்சது” என்றார் மாயா டீச்சர்.

“உலக அளவில் அதிகமாக விற்கும் இனிப்புப் பண்டம் சாக்லேட்தானே?” என்றாள் கயல்.

‘‘அதில் சந்தேகமே இல்லை. பால் சாக்லேட், பிளாக் சாக்லேட், இனிப்புக் குறைவான சாக்லேட் என, சாக்லேட்டுகளில் பல வகைகள் வந்துடுச்சு. குழந்தைகளுக்கு மிக மிகப் பிடித்ததாக இருக்கு.  ஆனால், சாக்லேட்டுகளை அளவோடு சாப்பிடணும்” என்றது கம்பளம்.
‘‘சாக்லேட் சாப்பிட்டால், புத்துணர்ச்சி கிடைக்கும், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என்று அடிக்கடி சில ஆய்வு முடிவுகள் வெளியாகுதே...” என்றான் கதிர்.

‘‘அதெல்லாம் பெரும்பாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவை. நாய், பூனை, குதிரை, கிளி போன்ற சில பறவைகளுக்கு சாக்லேட் நச்சுத்தன்மையை உண்டாக்கும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாக்லேட் கொடுத்தால், இந்த விலங்குகள் இறக்கும் அபாயம் உண்டு” என்றது மந்திரக் கம்பளம்.

“அளவோடு சாப்பிட்டால், நாவுக்கும் இனிப்பு; வாழ்வுக்கும் இனிப்பு. அளவு மீறினால் எல்லோருக்கும் கசப்பு, அப்படித்தானே?” என்றான் அருண்.

“அதேதான். நீங்க இவ்வளவு தெளிவா இருந்தால் போதும். சாக்லேட் என்றைக்கும் இனிக்கும்” என்ற மந்திரக் கம்பளம், அவர்களைச் சுமந்துகொண்டு பறந்தது.

கே.யுவராஜன்

பிள்ளை