பனானா ஸ்டார்!
வாழைப்பழத்துக்காகவே ஒரு மியூசியம் உருவாக்கி, ‘வாவ்’ என வாயைப் பிளக்கவைத்திருக்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த கென் பன்னிஸ்டர் (Ken Bannister).

கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த கென், ஒரு வாழைப்பழப் பிரியர். 1976-ம் வருடம் இந்த பனானா மியூசியத்தைத் தொடங்கினார். கீசெயின், நாற்காலிகள், தலையணைகள், கடிகாரம், மியூசிக் பிளேயர், செருப்பு என 17,000-க்கும் மேற்பட்ட பொருட்கள், மஞ்சள் நிற வாழைப்பழ வடிவில் நம்மை வரவேற்கின்றன.

பனானா ஷேக், பனானா ஜூஸ், பனானா ஐஸ்க்ரீம் எனப் பார்வையாளர்களைச் சுண்டி இழுக்கும் சுவையான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

‘‘சிறுவயதில் இருந்தே வாழைப்பழம் என்றால் அவ்வளவு இஷ்டம். வாழைப்பழங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். இன்னும் வித்தியாசமாக செய்ய வேண்டும். மக்களைச் சிரித்து ரசிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மியூசியத்தை ஆரம்பித்தேன்” என்கிறார் கென் பன்னிஸ்ட்.

வாழைப்பழத்தைப் பற்றி புத்தகங்கள் எழுதி இருக்கிறார் கென். பத்திரிகைகள், டி.வி, ரேடியோக்களில் அதன் நன்மைகளைப் பற்றியும் பேசுகிறார். 2010-ம் வருடம் ஃபிரெட் என்பவருக்கு இந்த பனானா மியூசியத்தை விற்றுவிட்டார். ஆனாலும், கலிஃபோர்னியா முழுவதும் ‘டாப் பனானா ஸ்டார்’ என்றே கென் புகழ்பெற்றிருக்கிறார்.
என்.மல்லிகார்ஜுனா