கெட் அவுட் நூடுல்ஸ்
‘என்னது... இனிமேல் மேகி செஞ்சு தர மாட்டீங்களா?’
இப்படி உங்க அம்மாவுடன் சண்டை போடுகிறீர்களா? இனி, எந்த வீட்டிலும் நூடுல்ஸ் கிடையாது. ‘மேகி நூடுல்ஸ் உடம்புக்குக் கெடுதல்’ என இந்தியாவின் பல மாநிலங்கள் தடை செய்துவிட்டன. ஏன்... என்ன ஆச்சு?
இதுபற்றி சொல்கிறார், பாரம்பர்ய உணவுகளின் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புஉணர்வு ஏற்படுத்திவரும் மருத்துவர் கு.சிவராமன்.

‘‘அமெரிக்காவில் நீண்ட பயணங்கள் செல்லும்போது, சாப்பிடுவதற்காக உருவானதுதான் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள். அதை வழக்கமான உணவு போல சாப்பிடக் கூடாது. ஓர் உணவு, சமைக்கப்பட்ட 6 மணி முதல் 24 மணி நேரத்தில் கெட்டுவிடும். ஒரு தாவரத்தில் இருந்து பழத்தையோ, காயையோ பறித்த பின், அவற்றில் இருக்கும் செல்கள் ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து, நேரம் செல்லச் செல்ல கெட்டுவிடும். இதுதான் இயற்கை. இதை மாற்றும்போதுதான் சிக்கலே வருகிறது.’’

‘‘என்ன சிக்கல்?’’
‘‘பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக, ரசாயனப் பொருட்களைச் சேர்க்கிறார்கள். இரண்டு நிமிடங்களில் மேகி நூடுல்ஸைத் தயார் செய்துவிடலாம் என விளம்பரம் செய்தார்கள். அவ்வளவு விரைவாக ஏன் சமைக்க வேண்டும்? நமக்கு உடம்பு சரியில்லை என்றால் அவசரமாகப் பார்த்து அனுப்பும் டாக்டரிடம் செல்வோமா? பொறுமையாகப் பார்த்து சிகிச்சை அளிக்கும் டாக்டரைத் தேர்ந்து எடுப்போமா? அது போலதான் உணவையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.’’
‘‘நூடுல்ஸ் ஏன் சாப்பிடக் கூடாது?’’
‘‘நூடுல்ஸ் தயாராகும் முறை தெரியுமா? கோதுமை மாவின் நிறம் வெள்ளையாக மாறுவதற்கு, அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்கு, சமைத்த பிறகு ஸ்பூனில் ஒட்டாமல் நூல் போல வருவதற்கு... என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ரசாயனப் பொருட்கள் கலக்கின்றனர். தொடர்ந்து இந்த உணவையே சாப்பிடத் தூண்டும் சுவையூட்டிகளும் கலக்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் ‘மோனோ சோடியம் குளுட்டமேட்’ என்ற ரசாயன உப்பு. இது, உடலுக்கு மிகவும் ஆபத்தானது. இது கலந்த உணவுப் பொருளைத் தவிர்க்குமாறு உலக அறிவியல் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். பல நாடுகள் இந்த உப்புக்குத் தடை விதித்துள்ளது. ஆனால், மேகி நூடுல்ஸில் இந்த உப்பு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.’’

‘‘நூடுல்ஸ் ரொம்பப் பிடிக்குமே... எப்போதாவது சாப்பிடலாமா?’’
‘‘உடலுக்குக் கேடு தருவதை எப்போதுமே சாப்பிடக் கூடாது. மேகி போன்ற உணவுகளை, விளம்பரங்கள் பார்த்துத் தேர்வுசெய்கிறோம். செயற்கைச் சுவையூட்டிகளாலே அது பிடித்து விடுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால், வயிற்றுப்புண் முதல் மூளையைப் பாதிக்கும் நோய் வரை பல கெடுதல்கள் உண்டாகும். இந்த வயதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. அதுவும் கிடைக்காமல் போய்விடும். உலகிலேயே பிரச்னை இல்லாத சிறந்த உணவு நம்ம ஊர் இட்லிதான்.’’

‘‘அப்படி என்றால், பள்ளிவிட்டு வந்தவுடன் உடனடியாகச் சமைத்துத் தர, அம்மா என்னதான் செய்வார்கள்?’’
‘‘அவல் இருக்கிறதே... அதை நீரில் ஊறவைத்து, வெல்லம் கலந்து சாப்பிட்டால், ருசியாக இருக்கும். அதில் உப்புமாவும் செய்யலாம். சத்துமாவில் கொழுக்கட்டை செய்யலாம். பள்ளிக்கு சிறுதானிய உணவுகளை எடுத்துச் செல்லலாம். ராகி புட்டு, சிவப்பு அரிசி சோறு, குதிரை வாலி மோர் சாதம் என விதவிதமாகச் சாப்பிடலாம். இவை, நமது நாட்டில் விளையும் இயற்கை உணவுப் பொருள்கள். இவை, ஒரு மனிதனின் உடலுக்கு ஏற்ற அத்தனை சத்துகளும் சீராக உள்ள ஆரோக்கியமான உணவுகள்.
எனவே, அவசர உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கிய உணவுக்கு மாறுவோம்!’’
வி.எஸ்.சரவணன்
நா.ராஜமுருகன்