ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

நம்ம சினிமா காக்கா முட்டை

நம்ம சினிமா காக்கா முட்டை

லோ ஃப்ரெண்ட்ஸ்... சம்மர் லீவு முடிஞ்சு ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சிருப்பீங்க. இந்த லீவில்  டூர், சினிமா எல்லாம் பாத்திருப்பீங்க. இப்ப ஒரு படம் வந்திருக்கு. படத்தோட பேரு, ‘காக்கா முட்டை.’

சிறந்த குழந்தைகள் திரைப்படம், சிறந்த குழந்தை நடிகர்களுக்கான தேசிய விருதுகளை வாங்கிக்கொண்டு தியேட்டர்களுக்கு வந்திருக்கு.

நம்ம சினிமா காக்கா முட்டை

பேரே வித்தியாசமா இருக்குல்ல? சிட்டியில் இருக்கிறவங்க கோழி முட்டையைக் கடையில் வாங்குறதைப் பாத்திருப்பீங்க. கோழி முட்டை வைக்கிறதை கிராமத்துப் பசங்க பாத்திருக்கலாம். கோழி முட்டைனா நமக்குத் தெரியும். ஆம்லெட், ஆஃப்பாயில் போட்டு சாப்பிட்டிருக்கோம். ஆனா... காக்கா முட்டை?

காக்கா நம்ம கூடவே இருக்கிற பறவை. ஆனா, அதன்  மேல நமக்கு பிரியமோ, மரியாதையோ கிடையாது. நமக்கு கிளி பிடிக்கும், மயில் பிடிக்கும், லவ் பேர்ட்ஸ் பிடிக்கும்.ஆனா, காக்காவை கண்டுக்கவே மாட்டோம். பலரும்   அதை அருவெறுப்பா பார்ப்பாங்க. என்ன காரணத்தால, காக்கையை மலிவா நினைக்கிறோம்? அது கறுப்பா இருக்கிறதாலயா? அதோட குரல் இனிமையா இல்லைங்கிறதாலேயா? இல்லாட்டி, கண்டதையும் சாப்பிட்டு குப்பைத் தொட்டிப் பக்கம் அலையுறதாலேயா? என்ன காரணம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன்.

இப்படியான காக்காவோட முட்டையைச் சாப்பிடுறதை வழக்கமா வெச்சிருக்கிற ரெண்டு பசங்களோட கதைதான் ‘காக்கா முட்டை’. காக்கையை எப்படி மலிவா நினைக்கிறோமோ, அதே போல சேரி என்கிற குடிசைப் பகுதியில் வாழ்கிற ஏழை மனிதர்களையும் பலர்  முகத்தைச் சுழிச்சுப் பார்க்கிறாங்க. குப்பையைப் பொறுக்கிப் பிழைக்கிற, குடிசையில் வாழ்கிற அந்த மக்களில் இரண்டு சிறுவர்கள்தான் படத்தின் ஹீரோக்கள். நடிக்கிறாங்களா... நிஜமாவே இப்படித்தான் வாழறாங்களானு ஆச்சர்யப்படும் அளவுக்கு பசங்க பின்னி எடுத்திருக்காங்க.அண்ணனோட பேரு, பெரிய காக்கா முட்டை; தம்பியோட பேரு, சின்ன காக்கா முட்டை. சிரிப்பா இருக்குல்ல?

நம்ம சினிமா காக்கா முட்டை

அவங்களுக்கு வேற பேர் இருக்கு. ஆனா, அவங்க காக்கா முட்டையை எடுத்து சாப்பிடுறதால, காக்கா முட்டைனு ஃப்ரெண்ட்ஸ் கூப்பிடுறாங்க. அவங்களும் அந்தப் பேரையே சொல்லிக்கிறாங்க. காக்கா, குஞ்சு பொரிக்கிறதுக்காக வெச்சிருக்கிற முட்டைகளை, இவங்க எடுத்துச் சாப்பிடுறாங்க. அதிலேயும் அவங்ககிட்ட ஒரு நேர்மை இருக்கு. மூணு முட்டையில், ரெண்டு முட்டையை மட்டும் எடுத்துக்கிட்டு, ஒரு முட்டையை காக்காவுக்கு வெச்சிடுறாங்க. காக்கா ரொம்ப ஏமாந்துடக் கூடாதாம்!

இவங்க காக்கா முட்டையை எடுத்து குடிக்கிற அந்த மரத்தை, திடீர்னு ஒரு நாள் வெட்டிச் சாய்க்கிறாங்க. அவ்வளவுதான்...இனிமேல் காக்கா கூடு கட்ட வேறு இடம்தான் பார்க்கணும். எங்கோ ஒரு புல்டோஸர் வந்து, குடிசைகளை இடிக்கிறதை நியூஸில் பார்க்கிறோம் இல்லையா? அவங்களும் இப்படித்தான், வேற இடம் தேடி போய்டுவாங்க. சரி, நாம காக்கா முட்டை கதைக்கு வருவோம்.

அந்த மரத்தை வெட்டிச் சாய்க்கிற இடத்தில், ஒரு பீட்ஸா கடை வருது. நம்ம காக்கா முட்டை பிரதர்ஸ் ரெண்டு பேருக்கும் பீட்ஸா தின்ன ஆசை. நமக்கு ஆசை வந்தால், அப்பாகிட்டே கேட்டு வாங்கிச் சாப்பிடுவோம். ஆனா, அவங்களால் அப்படி முடியாது. அவங்க அப்பா ஜெயிலில் இருக்கார். அவங்களோட அம்மா சம்பாதிக்கிற பணம், மூணு வேளை சாப்பிடவே போதலை. இவங்க ரெண்டு பேரும் கரியைப் பொறுக்கி வித்து சம்பாதிக்கும் பணத்தில், பீட்ஸா வாங்கித் தின்ன நினைக்கிறாங்க.  ஆனா, தேவையான பணம் சேர்ந்தும் அவங்களால பீட்ஸா வாங்கித் தின்ன முடியலை. ஏன் தெரியுமா?

அவங்க அழுக்கான டிரெஸ் போட்ட சேரி பசங்கன்னு கடைக்குள் விட மாட்டேங்கறாங்க. அந்தப் பசங்க, பீட்ஸா சாப்பிட்டாங்களா இல்லையா? அதுக்கு என்ன செஞ்சாங்க? அதுதான் மிச்சக் கதை.

நாம் வாழுகிற இந்த ஊரில்தான் பெரிய காக்கா முட்டையும் சின்ன காக்கா முட்டையும் வாழறாங்க. அவங்களும் நம்மளை மாதிரி சின்னச் சின்ன ஆசைகள் நிறைஞ்ச சின்னப் பசங்க. ஆனா, அவங்க  வாழ்க்கை வேறு. அவங்களில் பலருக்கும் ஸ்கூல் கிடையாது; வெகேஷன் கிடையாது; பிக்னிக், டூர் என எதுவுமே கிடையாது. சாக்கடை ஆறாக ஓடுகிற குடிசைப் பகுதியில் இருக்காங்க. ஆனா, ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் நேர்மையாக இருக்காங்க. ஒரு பணக்கார ஃப்ரெண்டு பீட்ஸா தந்து சாப்பிடச் சொல்லும்போது, தன்மானத்தோடு மறுக்கிறான் பெரிய காக்கா முட்டையாக நடிச்சு இருக்கும் விக்னேஷ்.

சின்ன காக்கா முட்டையாக நடிக்கும் ரமேஷ், அழகாக சிரிச்சுக்கிட்டு எப்பவும் உற்சாகமாக இருக்கான். வாழ்வதே பெரிய வலியாக இருந்தாலும், அவங்க அம்மாவும் ஆயாவும் பசங்ககிட்டே ரொம்ப அன்பா இருக்காங்க. படம் முழுக்கவே குபீர் சிரிப்புகள் நிறைய இருக்கு. அவங்க ஆயா, பீட்ஸா மாதிரியே ஒரு தோசை சுட்டுத் தரும் காட்சி, சிரிப்போ சிரிப்பு. அந்த ஆயா செத்துப்போகும்போது, பீட்ஸாவுக்காக சேர்த்துவெச்ச காசை, இறுதிச் செலவுக்கு ரெண்டு பேரும் கொடுக்கிறபோது நமக்கு அழுகை வந்துடுது.

நாம் பல முறை குடிசைப் பகுதியைத் தாண்டிப் போயிருக்கோம். பஸ்ஸில் போகும்போது, ஜன்னல் வழியே பார்த்திருக்கிறோம். ஆனா, அவங்களைப் பற்றி யோசித்திருக்கோமா? இந்த சினிமா, அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நமக்குக் காட்டுகிறது. அவங்க ஏன் அப்படி இருக்கிறாங்க என நம்மை யோசிக்கவைக்குது.

பேய்ப் படம், காமெடிப் படம், ரஜினி படம், சிவகார்த்திகேயன் படம்னு நீங்கள் நிறைய சினிமா பார்த்திருப்பீங்க. இது வேறு மாதிரி சினிமா. அவசியம் பார்க்க வேண்டிய சினிமா. இதைப் பார்த்தால், உங்களுக்கும் காக்கா முட்டை பிரதர்ஸைப் பிடிச்சுப்போகும்.காக்கைகளையும் பிடிச்சுப்போகும்.

பாஸ்கர் சக்தி

கே.ராஜசேகரன்