ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

வீரதீர சாகசங்கள் புரிந்த இந்தியக் குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது, நேஷனல் பிரேவரி அவார்டு எனப்படும் ‘ராஷ்ட்ரிய வீர்த புரஸ்கார் விருது’. அதைப் பெற்ற சுட்டி வீரர்/வீராங்கனைகளைப் பற்றி சொல்லும் பகுதி இது.

சுனில் சிங், ராபர்ட் குருய்ஸர்

ன்புள்ள சுனில் சிங், ராபர்ட் குருய்ஸர் (Sunil Sing, Robert Cruiser)... உங்கள் இருவருக்கும் எங்களது வீரவணக்கம்.

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

அழகுப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் காஷ்மீரில் பூத்த அக்னி குஞ்சுகளே... உங்கள் வீரம், எண்ணி எண்ணி போற்றத்தக்கது.

ஆப்பிள் தோட்டங்கள் தம் நறுமணங்களால் மயங்கவைக்கும் உலக அதிசயம், காஷ்மீர். குங்குமப் பூக்களின் குன்றாத செவ்வொளி படர்ந்த பனிச் சறுக்குகள், வெள்ளிப் பனிமலையின் பவள மகுடம் போல ஜொலிக்கும் இடம். துரதிர்ஷ்டவசமாக அண்டை நாட்டு அரசியலில் துயரப் படுக்கையில் கிடக்கிறது.

சுனில்சிங், ராபர்ட் உங்கள் இருவரின் தந்தையர்களும் இந்திய ராணுவத்தின் சிப்பாய்கள். நாட்டை காக்க தங்களது உயிரைப் பணயம்வைக்கத் தயங்காத மாவீரர்கள்.

நீங்கள் இருவரும் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.  ஒன்றாகவே சுற்றித் திரிவீர்கள். 2000-ம் ஆண்டு பிப்ரவரியில், ரிக்‌ஷா சாச்சாவின் மெல்லிய சீட்டி ஒலியை ரசித்தவாறு ரிக்‌ஷாவில் பள்ளி நோக்கிச் செல்கிறீர்கள்.

பள்ளத்தாக்கின் எத்தனையோ கிராமங்களில் உங்களுடையதும் ஒன்று. ஜம்முவுக்குச் செல்லும் பிரதான சாலையில் அமைந்திருந்தது. ஊர் எல்லையில் பள்ளிக்கூடம். எல்லை செக்போஸ்ட், பள்ளியைத் தாண்டி அமைந்திருக்கும். பிரதான சாலையிலிருந்து ஊருக்குள் நுழையும் ஒரே வழி அதுதான்.

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

பள்ளிக்கூட வாசலில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தீர்கள். ‘ஏதோ ஆபத்து’ என்றார்  ரிக்‌ஷா சாச்சா.

அவர்கள் 20 பேர் இருந்தார்கள். அவர்களின் உடையும் தோளில் தொங்கும் துப்பாக்கியும் தீவிரவாதிகள் எனச் சொல்லியது. உங்கள் கிராமத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துவிட்டது.

‘‘சாச்சா, ‌நீங்கள் போய் எங்கள் தந்தையரிடம்  சொல்லுங்கள். அவர்கள் வரும் வரை நாங்கள் சமாளிக்கிறோம்” எனச் சிங்கக் குட்டிகளகச் சொன்னீர்கள்.

ரிக்‌ஷா சாச்சா, வேகமாகத் திரும்பிச் சென்றார். அவர்களை எதிர்த்து நிற்க உங்களிடம் மன தைரியத்தைத் தவிர வேறு என்ன இருந்தது? நமது நாட்டின் மீதான தேசப்பற்றைத் தவிர வேறு எந்த ஆயுதமும் இல்லை.

நம் நாடு போற்றவேண்டிய சுட்டிகளே, தீவிரவாதிகளைத் தடுக்க, தைரியமாகச் செயலில் இறங்கினீர்கள். பள்ளியின் வாசல் மரக் கதவைப் பெயர்த்து எடுத்து, சாலையின் குறுக்கே வைத்தீர்கள். கையில் கிடைத்த சிறிய கட்டைகளைக் கொண்டுவந்து போட்டீர்கள். ரிக்‌ஷா சாச்சாவிடம் இருந்து வாங்கிய தீப்பெட்டியை உரசி, பற்றவைத்தீர்கள்.

லேசான காற்று வீசி, பெருந்தீயை வளர்த்தது. கத்தினாலோ, வேறு ஏதாவது செய்தாலோ, அவர்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பி, தாக்குதலில் ஈடுபடுவது உறுதி. நீங்களோ, சத்தமே இல்லாமல் பெருந்தீயை வளர்த்து, புகையை உருவாக்கினீர்கள். சாரணர் பயிற்சியில் கற்றதைச் செயலில் காட்டினீர்கள். பரீட்சை அட்டையை எடுத்து, தீயின் மேல் பிடித்து, புகை விட்டுவிட்டு மேலெழ வைத்ததும், ஊருக்குள் பலர் அதைக் கண்டு, ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்தார்கள்.

உடனடியாக ஊர் திரண்டு வந்தது. அதைப் பார்த்த தீவிரவாதிகள், சுடுவதற்குத் தயாரானார்கள். அப்போது, ரிக்‌ஷா சாச்சா மூலம் செய்தி அறிந்த நம் ராணுவமும் வந்துவிட்டது. அந்த ஊருக்கு வர இருந்த பெரும் ஆபத்து முறியடிக்கப்பட்டது.

சுனில் சிங், ராபர்ட் குருய்ஸர்... உங்களது தைரியமும் சாதுர்யமான நடவடிக்கையும்தான் ஊரைக் காத்தது. இதை அறிந்து, நாடே உங்கள் வீரத்தைப் போற்றியது.

2000-ம் ஆண்டு புது டெல்லியில், இந்திய ஜனாதிபதி உங்களுக்கு வீரதீர குழந்தைகளுக்கான விருது வழங்கினார். காஷ்மீர் உங்களால் பெருமை அடைந்தது.

வீரச் சுட்டிகளே... உங்களுக்கு எங்கள் சல்யூட்!

இப்படிக்கு,

சுட்டி இந்தியா.