மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கண்ணுக்குள்ளே என்ன இருக்கு?

மாலை நேரம். மாயா டீச்சர் வீட்டின் மொட்டை மாடியில், கண்களைக் கட்டியிருந்த கயலைச் சுற்றி, போக்குக் காட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள் நண்பர்கள். கையில் ஒரு ட்ரேயுடன் மாயா டீச்சர் வந்தார். அதில், ஆவி பறக்கும் கேரட் சூப் கோப்பைகள் இருந்தன.

ஷாலினி, ‘உஷ்' என எல்லோருக்கும் ஜாடை காட்டினாள். அவர்கள் புரிந்துகொண்டு, அமைதியாக நழுவி, மாயா டீச்சரிடம் வந்தார்கள். ஆளுக்கு ஒரு சூப் எடுத்துக் குடித்தார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

ஆனால், கைகளை முன்னால் வீசிக்கொண்டு வந்த கயல், "டீச்சர், சூப் ரெடியா?" என்றபடி கட்டை அவிழ்த்துக்கொண்டாள்.

"ஹேய், டீச்சர் வந்ததையும் சூப் தந்ததையும் எப்படிக் கண்டுபிடிச்சே? இவ்வளவு நேரம் கண் தெரிஞ்சுட்டுதான் இருந்துச்சா?" எனக் கேட்டான் கதிர்.

"திடீர்னு நீங்க சைலன்ட் ஆகிட்டீங்க. சூப் வாசனையும் வந்துச்சு. அதைவெச்சுக் கண்டுபிடிச்சேன்" என்றாள் கயல்.

"உனக்கு காதும் மூக்கும் ரொம்ப ஷார்ப்தான் கயல். கேரட் சூப் குடி, கண்ணும் ஷார்ப்பா தெரியும்" என்று சிரித்தார் டீச்சர்.

"கைரேகை மாதிரி நம்முடைய கண்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடும்னு என் ஃப்ரெண்டு சொன்னான். நிஜமா டீச்சர்?" எனக் கேட்டான் அருண்.

"ஆமா அருண். ஆதார் அடையாள அட்டைக்காக கண்களையும் படம் எடுத்திருப்பாங்களே. நம் கண்ணில் இருக்கும் விழித்திரை, கைரேகையைவிட நுணுக்கமானது. கண் என்ற உறுப்புக்குள்ளே நிறைய நுணுக்கமான பகுதிகள் இருக்கு" என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

"அந்தக் கண்ணுக்குள்ளே போய்ப் பார்க்கலாமா டீச்சர்?" எனக் கேட்டாள் ஷாலினி.

"அதுக்கு, தூசியைவிட நுணுக்கமான பொருளா மாறணும்" என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தைப் பார்த்தார்.

"நான் இருக்க கவலை ஏன்? ஜீ பூம்பா" என்றது.

அடுத்த நொடி, மிக நுண்ணிய துகளாக ஒரு கண்ணுக்குள் நுழைந்தார்கள். "எல்லோருக்கும் கண்ணு நல்லாத் தெரியுதா? ஐ மீன், இந்தக் கண்ணைப் பார்க்கிறதுக்கு உங்க கண்கள் தெரியுதா? கண்ணுக்குள்ளே கண்ணு தெரியாமல் விழுந்துடப்போறீங்க" என்று ஜோக் அடித்தாள் ஷாலினி.

"பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு  வெளிக் கதவு, வாசல் கதவு, அக்சஸ் கார்டு காட்டினால் திறக்கும் கண்ணாடிக் கதவு எனப் பல அடுக்குப் பாதுகாப்பு இருக்கும். அந்த மாதிரி, கண்களைப் பாதுகாக்கவும் பல கதவுகளோடு பயங்கர செக்யூரிட்டியும் இருக்கு. வியர்வை வழிந்து கண்களில் படாமல் தடுக்கும் புருவமே, பிரமாண்டமான வெளிக்கதவு. மூடி மூடித் திறக்கும் இமைகள், தூசிகளைத் தடுக்கும் வாசல் கதவுகள். அதைத் தாண்டி உள்ளே வந்தால், கண்ணின் உள் அமைப்பு 30 பகுதிகளால் ஆனது” என்றார் டீச்சர்.

‘‘நமது வெளிப்பார்வைக்கு பளிச் எனத் தெரியும் இந்த வெண்மைப் பகுதிக்கு, ஸ்க்லெரா (Sclera) என்று பெயர். இந்த ஸ்க்லெரா மீது மிக மெல்லிய திசு படர்ந்திருக்கு. அதுக்கு கஞ்ஜங்டைவா (conjunctiva) எனப் பெயர். அதுக்கு மேலே வட்டமாக இருப்பது ஐரிஸ் (Iris). கறுப்பு, நீலம், பிரௌன், பச்சை எனப் பல நிறங்களில் இருக்கும். இந்தியருக்கு பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும். தோலின் நிறத்தை மெலனின் நிறமி தீர்மானிக்கிற மாதிரி, இந்த ஐரிஸ் நிறத்தைத் தீர்மானிப்பதும் நிறமிதான்" என்றார் டீச்சர்.

அவர்கள், ஐரிஸ் வட்டத்துக்கு அருகே இருந்தார்கள். "இதைத்தான் பாப்பா எனச் சொல்றாங்களா?"' எனக் கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

"இல்லை. இந்த ஐரிஸுக்கு நடுவில், சின்னதா ஒரு வட்டம் மாதிரி இருக்கும். உண்மையில் அது ஓர் ஓட்டை. அதுதான் பாப்பா என்கிற ப்யூப்பில் (Pupil). வெளியே இருந்து வரும் காட்சிகள், இந்தத் துளை வழியாகத்தான் செல்லும்.  ப்யூப்பில், ஐரிஸ், கஞ்ஜங்டைவா, ஸ்க்லெரா ஆகிய பகுதிகளை மூடிப் பாதுகாக்கும் மெல்லிய திசு, கார்னியா. கண்ணாடிக் கதவு மாதிரி" என்றார் டீச்சர்.

"அடேங்கப்பா இவ்வளவு சேஃப்ட்டியா இருக்கா நம் கண்கள்?" என வியந்தான் அருண்.

"இன்னும் இருக்கு. இந்த இடத்தில் லாக்ரிமல் என்ற சுரப்பியால் ஒரு திரவம் சுரக்கும். சோடியம் குளோரைடு, எலெக்ட்ரோனைட், அமினோ அமிலம், புரதங்கள் கலந்த அந்தத் திரவம்தான் கண்ணீர். உப்புச் சுவையுடைய  கண்ணீர், கண்களில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும். உள்ளே வரும் தூசிகளை வெளியேற்றும்'' என்றார் டீச்சர்.

"அப்படினா இன்னும் சில நொடிகளில் நம்மையும் வெளியே அனுப்பிடும். அதுக்கு முன்னாடி கண்கள் செயல்படுவதைப் பார்த்துட்டுப் போயிடணும்" என்றாள் ஷாலினி.

மந்திரக் கம்பளம், கார்னியா எனும் கண்ணாடிக் கதவைத் தாண்டி அவர்களை அழைத்துச் சென்றது. "பாப்பா என்கிற இந்த ப்யூப்பில், நூற்றுக்கணக்கான தசைநார்களால், சுருங்கிவிரியும். கேமராவில் லாங் ஷாட், குளோசப் ஷாட் வைக்க அட்ஜஸ்ட் செய்யும். அந்த மாதிரி, ஒரு பிம்பம் இருக்கும் தொலைவு, அதைச்சுற்றி இருக்கும் ஒளியின் தன்மைக்கு ஏற்ப, சுருங்கி விரியும். அப்படி உள்வாங்கிய பிம்பம், இந்தத் துளைக்குப் பின்னால் இருக்கும் ‘ரெட்டினா’ என்ற விழித்திரை மீது பதியும். அங்கே இருக்கும் நரம்புகள் வழியே அந்தப் பிம்பம் மூளைக்குச் செல்லும். அது மேஜையா, பென்சிலா, நண்பனா, ஆசிரியரா, வடிவம், நிறம் என அத்தனை விஷயங்களையும் மைக்ரோ நொடிகளுக்குள் மூளையால் கண்டறிப்பட்டு, விழித்திரைக்கு திரும்பவும் வரும். அதுதான் நாம் பார்க்கும் காட்சி. இதில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பல கண் பிரச்னைகள் உண்டாகும்" என்றார் டீச்சர்.

"பிறந்ததில் இருந்து கடைசி வரைக்கும் ஒரே அளவாக இருப்பது கண்கள்தான்னு சொல்றாங்களே, உண்மையா? ஏன்னா, ஒரு குழந்தையின் கண்களுக்கும் பெரியவங்களின் கண்களுக்கும் வித்தியாசம் இருக்கே'' என்றாள் கயல்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

"நல்லா கேட்டே கயல். என்ன விஷயம்னா, நன்கு வளர்ந்த மனிதனின் கண், சராசரியாக 24 மில்லிமீட்டர் இருக்கும். இதில், பிறக்கும்போதே இருக்கும் அளவு, 16 அல்லது 17 மில்லிமீட்டர். 13 வயதுக்குள் 24 மில்லிமீட்டராக முழு வளர்ச்சி அடைந்துவிடும். ஆக, பிறக்கும்போதும் முழு வளர்ச்சிக்கும் இடையே சில மில்லிமீட்டரே வித்தியாசம் என்பதால், ஒரே அளவுனு சொல்றாங்க. இப்போ, நாம் பார்த்த இந்த உள் அமைப்பு, ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கு இடையே, அதிகபட்சம் 2 மில்லிமீட்டர் வித்தியாசம்தான் இருக்கும். மனிதக் கண்ணின் எடை 7.5 கிராம்.  மற்றபடி, ‘அவளுக்கு பெரிய கண்கள், மான் விழி, மீன் விழி’ எனச் சொல்வது எல்லாம் கண்களுக்கு வெளியே இருக்கும் அமைப்பைத்தான். கண் மை, புருவத்தைக் குறைப்பதன் மூலம் கண்கள் பெரியதாக இருக்கிற மாதிரி தோற்றத்தை உருவாக்குகிறார்கள்" என்ற கம்பளம், அவர்களை கண்ணைவிட்டு வெளியே அழைத்துவந்தது.

"இந்த உலகில், இயற்கை படைத்திருக்கும் அழகு, ஆச்சர்யங்களைப் பார்த்து மகிழ்வதற்கு வாழ்நாள் முழுவதும் உதவும் உழைப்பாளி, கண்கள். அந்தக் கண்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும்” என்றார் டீச்சர்.

‘‘தெரியும் டீச்சர். கூர்மையான பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடக் கூடாது. ஒரு நொடி கவனக்குறைவால் ஏற்படும் விபத்து, வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை உண்டாக்கிடும். கண் வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளின்போது, நாமே மருந்து வாங்கி கண்களில் விடக் கூடாது. டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. தூசி, பூச்சி போன்றவை கண்களில் விழுந்தால், பதற்றப்பட்டு கண்களைக் கசக்கிவிடக் கூடாது. சரியா டீச்சர்?” என்றாள் ஷாலினி.

‘‘அது மட்டுமா? வெளிச்சம் குறைவான இடத்தில் படிப்பது, கம்ப்யூட்டரை நீண்ட நேரம் பயன்படுத்துவது, டி.வி-யை அருகில் இருந்து பார்ப்பது, செல்போனில் நீண்ட நேரம் விளையாடுவது இதெல்லாம் கண்களைப் பாதிக்கும். கேரட், கீரை, மீன், இறால் போன்றவற்றை நிறையச் சாப்பிடலாம். இவை, வைட்டமின் ஏ சத்தை அதிகம் அளித்து, கண் பார்வைக்கு உதவும். வெயிலில் போகும்போது, தொப்பி அல்லது கூலிங்கிளாஸ் அணிவதும் கண்களைப் பாதுகாக்கும் வழிதான்" என்றார் டீச்சர்.

"கண்ணாமூச்சி விளையாட்டில் ஆரம்பிச்சது, கண்கள் விஷயத்தில் விளையாட்டா இருக்கக் கூடாதுங்கிற விஷயம் தெரிஞ்சுக்க உதவியிருக்கு. தேங்க்ஸ் கம்பளமே" என்ற அருண், கம்பளத்தை அணைத்து முத்தமிட்டான்.

கே.யுவராஜன்

பிள்ளை