மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !
கே.கணேசன்
காலாண்டுத் தேர்வுகள் முடிந்து கிடைத்த விடுமுறையில் மாயா டீச்சருடன் சுட்டிகள் நூலகத்துக்குச் சென்றனர். அங்கு தேவையான புத்தகங்களை சுட்டிகள் எடுத்துக் கொண்டனர். மாயா டீச்சர், 'டிஸ்ப்ளே ஒன்லி’ என ஸ்டிக்கர் ஒட்டியிருந்த புத்தகத்தின் சில பக்கங்களை மட்டும் அங்கிருந்த ஜெராக்ஸ் மிஷினில் பிரதி எடுத்துக் கொண்டார். மாயா டீச்சரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர் சுட்டிகள்.

##~## |
வழக்கம் போல பிரசன்னா ஆரம்பித்தான், ''டீச்சர், ஜெராக்ஸ் மிஷினைப் பத்தியும் இது எப்படி வேலை செய்யுதுன்னும் சொல்லுங்களேன் டீச்சர்...'' என்றான்.
''இந்த மிஷினுக்கு, 'போட்டோ காப்பியர் மிஷின்’னுதான் பேரு. இதை பிரபலப்படுத்திய கம்பெனியின் பெயர்தான் 'ஜெராக்ஸ்’. போட்டோ காப்பியர் மிஷின் கண்டுபிடிப்பதற்கு முன்பெல்லாம்... அலுவலகங்களில் எழுதிப் பிரதி எடுப்பது, கார்பன் ஷீட் பயன்படுத்தி பிரதி எடுப்பது மாதிரியான முறைகளைத்தான் கடைபிடித்து வந்தனர். 1779-ல் ஜேம்ஸ் வாட் என்ற விஞ்ஞானி, முதன் முதலில் ஒரு ஸ்பெஷல் இங்க்கைப் பயன்படுத்தி, வெப்பம் மற்றும் அழுத்தத்தின் மூலம் பிரதி எடுக்க முடியும்னு கண்டுபிடித்தார்'' என்று சொல்லிக்கொண்டே வந்த மாயா டீச்சரை இடைமறித்தாள் சரண்யா...
''மின்சாரத்தின் அலகைக் கண்டு பிடித்தவர்தானே..?''
''ஆமாம்... அவரேதான்! செஸ்டர் கார்ல்சன் என்பவர், 1938-ல் சல்ஃபர் பூசிய ஸிங்க் தகட்டில் போட்டோ கண்டக்டிவிடி மூலம் எதையும் பிரதி எடுக்கலாம் என நிரூபித்துக் காப்புரிமையும் பெற்றார். ஆனால், இவரது இயந்திரத்துக்கு எந்த நிறுவனமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

1947-ல் ஹாலோய்ட் கார்ப்பரேஷன் என்ற காப்பியர் தாள்களை விற்பனை செய்யும் நிறுவனம், கார்ல்சனை அணுகி அவருடன் சேர்ந்து காப்பியர் இயந்திரத்தை இன்னும் மேம்படுத்தியது. ஹாலோய்ட் நிறுவனம்தான் இந்த புதிய பிரதி எடுக்கும் முறைக்கு, 'ஜெரோகிராபி’ எனப் பெயர் வைத்தது. ஜெரோகிராபி என்றால் கிரீக் மொழியில் 'உலர் எழுத்து’ (Dry writting) என்று பொருள். 'ஜெராக்ஸ் மிஷின்’ என்ற பெயரில் சந்தையில் இந்த இயந்திரத்தின் விற்பனை ரொம்ப ஹிட் ஆனது. இதனால், ஹலோய்ட் நிறுவனம் தனது பெயரையே 'ஜெராக்ஸ் கார்ப்பரேஷன்’ என மாற்றிக் கொண்டது. அந்த நிறுவனத்தின் பெயரைத்தான் இந்தப் பிரதி எடுக்கும் முறைக்கு ஜெராக்ஸ் என்று பயன்படுத்தத் தொடங்கினர்'' என்று நீண்ட விளக்கத்தைச் சொல்லி முடித்த மாயா டீச்சர் கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டார்.
''பேரிலேயே இத்தனை விஷயம் இருக்கா? என்று வியந்த கணேஷ், ஜெராக்ஸ் மிஷின் எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்துடுமா டீச்சர்?'' என்று கேட்டான்.
கணேஷை மந்திரக் கம்பளத்தில் சுற்றினார் மாயா டீச்சர். சற்று நேரத்தில் அவன் லில்லிபுட் மாதிரி படு குட்டி சைஸுக்கு மாறினான். அவனை ஜெராக்ஸ் மிஷினில் பிரதி எடுக்கும் இடத்தில் வைத்து, 'ஸ்டார்ட்’ பட்டனை அழுத்தினார் மாயா டீச்சர். சில நொடிகளில் எதிர்முனையில் வெளியே வந்த காகிதத்தில் கணேஷ் ஜெராக்ஸ் காப்பி ஆகியிருந்தான்.
''டீச்சர், உள்ளே என்னதான் நடக்கிறது'' என்றாள் மது.
''வெளியே இருந்து பார்ப்பதற்கு ரொம்ப எளிமையாக இருக்கும் இந்த இயந்திரத்தினுள் அறிவியலின் துணைக்கொண்டு நடக்கும் விஷயம் நமக்கு வியப்பை அளிக்கும்! முதலில் நமக்கு பிரதி எடுக்கத் தேவையான படத்தை ஸ்கேனர் பகுதியில் வைத்துவிட்டு, ஸ்டார்ட் பட்டனை அழுத்த வேண்டும்...'' என்று டீச்சர் சொல்ல...
''அதான் எனக்குத் தெரியுமே'' என்றான் பிரசன்னா.

''அது எப்படி காப்பி எடுக்குதுன்னு சொல்லுடா பார்ப்போம்'' என்றாள் சரண்யா.
''ஹி... ஹி... அதான், தெரியாது'' என அசடு வழிந்தான் பிரசன்னா.
''ஜெராக்ஸ் மிஷினில் எப்படி பிரதி எடுக்கும் வேலை நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஒரு அடிப்படை விஷயத்தைத் தெரிஞ்சிக்குங்க'' என்ற மாயா டீச்சர் தொடர்ந்தார், ''காற்று ஊதப்பட்ட பலூனின் மேலே... கம்பளித் துணியில் சிறிது நேரம் உரசிய பிறகு, பலூன் அருகில் சிறிய காகிதத் துண்டைக் கொண்டு சென்றால், அது பலூனில் ஒட்டிக் கொள்ளும். ஸ்வெட்டரில் உராய்வதால்... பலூனில் ஏற்படும் நிலை மின்சாரத்தினால்தான் இப்படி ஈர்க்கப்படுகிறது. இந்த எதிர் தூண்டல் அடிப்படையில்தான் ஜெராக்ஸ் மிஷின் செயல்படுகிறது'' என்றார் மாயா டீச்சர்.
''டீச்சர்... நான் உள்ளே போய் பார்க்கிறேனே'' என்ற கணேஷை டீச்சர், ரோலர் வழியாக உள்ளே அனுப்பி வைத்தார். போன வேகத்தில் வெளியே வந்தவன், ''உள்ளே பயங்கர ஹீட்... தாங்கலை!'' என்றான். ''உள்ளே நிறைய உருளைகளும் பல் சக்கரங்களும்தான் அதிகமா இருக்கே?'' என்றான் புதிராக.
''ஆமாம்'' என்ற மாயா டீச்சர் தொடர்ந்து, ''ஜெராக்ஸ் மிஷினைப் பொருத்தவரை எக்கச்சக்கமான குட்டி குட்டி பார்ட்ஸ்தான் அதிகம். அதிலும் இந்த பல் சக்கரங்கள் மற்றும் ரோலர்ஸ்தான் ஜெராக்ஸ் மிஷின் இயங்கவே காரணம்'' என்றார்.
''மேலே காகிதத்தை வைத்தவுடன், அதை மிகவும் பிரகாசமான விளக்கின் வெளிச்சத்தின் மூலம் காகிதத்தில் உள்ள உருவம் ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த இயந்திரத்தின் உள்ளே இருக்கும் முக்கியமான பகுதியான ட்ரம் (Drum) தான்... மேலே சொன்ன பலூனைப் போலச் செயல்படும். அடுத்த முக்கியமான பகுதி டோனர். இதில் மிகவும் நுண்ணிய கறுப்பு நிறப் பவுடர் நிரப்பப்பட்டு இருக்கும். மிஷினில் வைக்கப்பட்ட காகிதத்தை ஸ்கேன் செய்யும் குழல் விளக்கு, அதில் இருக்கும் வெள்ளைப் பகுதிகளில் படும் ஒளி ரிஃப்ளக்ட் ஆகி, டிரம் மீது வெப்பமாகப் பதியும் (போட்டோ கண்டக்டிவிடி). இதன் காரணமாக ட்ரம்மில் ஏற்படும் நிலை மின்சாரத்தினால், டோனரில் உள்ள பவுடர் ஈர்க்கப்பட்டு டிரம்மில் படியும். இப்படி படியும் படிமத்தை, கீழே இருந்து வரும் தாள் டிரம்மின் மீது படிந்து கவர்ந்துகொள்ளும். இப்படி மேலே ஸ்கேனரில் வைக்கப்படும் உருவமானது... டிரம் பகுதி வழியாக உட்கவரப்பட்டு, வெளியே வரும் தாளில் பதிவாகிறது'' என்று முடித்தார் மாயா டீச்சர்.
''அப்படீன்னா ஜெராக்ஸ் மிஷினில் டோனர்தான் முக்கியமான பகுதியா டீச்சர்?'' என்றாள் மது.
''ஜெராக்ஸ் மிஷினின் உள்ளே இருக்கும் மூன்று முக்கியப் பகுதிகளான டிரம், டோனர், காப்பியர் போன்றவற்றின் சிறப்பினால்தான் இந்த வியக்க வைக்கும் செயல் நடைபெறுகிறது.
நாம் பிரதி எடுக் கும் பக்கத்தில் உள்ள வெண்மைப் பகுதிகளில் படும் ஒளியானது ரிஃப்ளக்ட் ஆகி, டிரம்மில் பதிவாகும். அதே சமயம்... கறுப்பாக இருக்கும் பகுதிகளில் படும் ஒளியானது ரிஃப்ளக்ட் ஆகாமல் அப்படியே விட்டுவிடும். இப்படி டிரம்மில் ஓளி பதியும்போது, டிரம்மில் மின்சாரத் தூண்டல் ஏற்படுகிறது. அதன் மூலம் டோனர் ஈர்க்கப்படுகிறது. இப்படி ஒளியின் மூலம் தூண்டப்பட்டு பிரதி எடுப்பதால்தான், இதை போட்டோகாப்பியர் என்கிறோம்.
டோனர் ஆனது... டிரம்மில் இருந்து கிடைக்கும் மின் தூண்டுதலை, காகிதத்தின் வழியே பிரதிபலிக்கிறது. டோனரில் இருந்து கிடைக்கும் வெப்பம் மிகவும் சென்சிட்டிவ் ஆனது. அதனால், சூடாக இருக்கும் டிரம்மின் மீது படிந்து வெளியில் வரும் தாளில், சூடான பகுதிகளில் உடனடியாக டோனர் பவுடர் ஒட்டிக் கொள்ளும்'' என்றார் டீச்சர்.
''டீச்சர், இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்கள்'' என்றான் பிரசன்னா.
''ஜெராக்ஸ் இயந்திரத்தின் முக்கியமான நான்கு செயல்பாடுகளை, பக்கத்தில் உள்ள படத்தில் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

முதலாவது, டிரம் மீது போட்டோ கண்டக்டிவிடி பூசப்பட்டு இருக்கும். இது அதிக வெளிச்சத்தால் உயர் மின்சாரத் தூண்டல் பெறும்.
ரெண்டாவது, மிகவும் பிரகாசமான விளக்கின் ஒளி, ஒரிஜினல் பிரதியில் இருக்கும் வெண்மைப் பகுதி களில்பட்டு, போட்டோ கண்டக்டிவிடி டிரம்மில் ரிஃப்ளக்ட் ஆகும். இந்தப் பகுதிகளில் ஒளி யானது பட்டு, கண்டக்டிவிடி யானது டிஸ்சார்ஜ் ஆகிவிடும். அதே சமயம், டிரம்மில் ஒளி ரிஃப்ளக்ட் ஆகாத இடங்களில் (ஒரிஜினலில் கறுப்பாக இருக்கும் இடங்களில்) மின் தூண்டல் அப்படியே தங்கிவிடும்.
மூன்றாவது, இந்தச் சமயத்தில் டோனர் பகுதி தூண்டப்பட்டு, டிரம்மில் எதிர் மின்னாற்றல் (நெகட்டிவ்) உள்ள இடங்களில் (ஒரிஜினலில் உள்ள கறுப்பு பகுதிகள்) படியும். இங்கே பலூனில் படியும் காகிதத் துண்டுகளை நினைவு படுத்திக்கொள்ளவும்.
நான்காவது, டிரம்மில் எதிர் மின் ஆற்றலால் ஈர்க்கப்பட்டு, டோனரானது வெளியே வரும் தாளில் பதிவாகிறது.
மிஷினில் உள்ள உருளைகளின் வெப்பத்தாலும், அழுத்தத் தாலும் டோனர் பவுடர் பேப்பரில் இளகிய நிலையில் படிந்து, அதி விரைவில் ஒட்டிக்கொண்டு, உடனே உலர்ந்தும்விடும். முன்பு எல்லாம் பவுடர் டோனருக்குப் பதில் லிக்விட் டோனரைப் பயன்படுத்தினார்கள்'' என்று முடித்தார் டீச்சர்.
''பாக்கறதுக்கு மிஷின் சாதாரணமாக இருந்தாலும், இதன் செயல்பாடு எங்களை பிரமிக்க வைக்குது'' என்ற படியே சுட்டிகள் கிளம் பினார்கள்.