மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர்

தன்னம்பிக்கை தரும் தமிழ்த் துளி!

திக்குவாயாக இருந்து, அடுத்தவர்களோடு பேசத் தயங்கி ஒதுங்கிக்கொண்டிருந்த நான், இன்று பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் மூன்று முறை முதல் இடம் பிடித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம், சபரிமாலா டீச்சர்தான்’’ என்கிறார் கமலேஷ் என்ற மாணவர்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளது, வைரபுரம் கிராம அரசு நடுநிலைப் பள்ளி.  இந்தப் பள்ளியின் ஆசிரியர் சபரிமாலா, ‘தமிழ்த் துளி’ என்ற அமைப்பின் மூலம், தனது மாணவர்களை தன்னம்பிக்கைத் துளிர்களாக மாற்றிவருகிறார்.

8-ம் வகுப்பு படிக்கும் பிருந்தா, ‘‘நான் ஒருமுறை சும்மா கிளாஸ்ல பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தேன். என்னைக் கூப்பிட்ட சபரிமாலா டீச்சர், ‘நீ நல்லாப் பாடுறே. இன்னும் நல்லாப் பயிற்சி எடு. டிவி-யில் பாட ஏற்பாடு பண்றேன்’ன்னு சொன்னாங்க. டீச்சர் தந்த ஊக்கத்தில் பாட்டு வகுப்புக்குப் போனேன். பல பள்ளிகளில் நடந்த பாட்டுப் போட்டிகளில் கலந்துக்கிட்டேன். அப்புறம், ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. சபரிமாலா டீச்சரை நான் மறக்கவே மாட்டேன்” என்கிறார் நெகிழ்ச்சியான குரலில்.

கனவு ஆசிரியர்

பேச்சு, பாட்டு, நடனம், பட்டிமன்றம் எனப் பல வகைகளில் தனது மாணவர்களை ஜொலிக்கவைக்கும் சபரிமாலா டீச்சர், சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராகவும் அனைவருக்கும் அறிமுகமானவர்.

‘‘எனது சொந்த மாவட்டம் திண்டுக்கல். அந்தப் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம். அங்கே வேலைசெய்யும் மக்களும், அவர்கள் பிள்ளைகள் படும் கஷ்டங்களையும் சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவள். படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்ற பலரைப் பார்த்திருக்கிறேன். அப்போதே, ஆசிரியர் பணியைத் தேர்வுசெய்வது எனும் லட்சியத்தோடு இருந்தேன். இதுபோன்ற பின்தங்கிய நிலையில் இருந்து அடித்துப்பிடித்து பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், கல்லூரிக்குச் செல்லும்போது, அங்கே வரும் மற்ற மாணவர்களின் திறமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். இந்த நிலை மாற, ‘தன்னாலும் முடியும்’ என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதற்காக நான் தேர்ந்தெடுத்ததுதான் பட்டிமன்றம் மற்றும் பேச்சுப் போட்டிப் பயிற்சிகள்” என்கிறார் சபரிமாலா.

பள்ளி முடிந்ததும், மாலை நேர வகுப்பாக பேச்சுப் பயிற்சி அளிக்கிறார். இது வரை, இவரது தலைமையில் மாவட்ட அளவில் பல்வேறு பட்டிமன்றங்களில் பங்கேற்று பரிசுகளைக் குவித்திருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு, ஆரோக்கிய வாழ்வு போன்ற பல விஷயங்களிலும் இவரது தமிழ்த் துளி அமைப்பு, மாணவர்களின் பங்களிப்போடு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

‘‘எங்க கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு 10 கிலோமீட்டர் தூரம். அங்கே போறதுக்குள்ளே முதலுதவி கிடைக்காமல் பலர் இறந்திருக்காங்க. வசதி இல்லாத காரணத்தாலும் மருத்துவரிடம் போறதில்லை. ‘நம்ம ஊரிலேயே அடிப்படை சிகிச்சை,  முதலுதவிகள் செய்யலாம்னு சபரிமாலா டீச்சர் ஒரு ஏற்பாடு செய்தாங்க. எங்களில் ஐந்து மாணவ, மாணவிகளைத் தேர்வு செஞ்சாங்க. திருச்சியில் இருக்கும் பிராண சிகிச்சை பயிற்சி வகுப்பில் கலந்துக்கிட்டு பயிற்சி எடுத்தோம். இந்தப் பயிற்சிக்காக, 10,000 ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தாங்க. இப்போ, எங்க ஊரில் யாருக்கு முதலுதவி தேவைப்பட்டாலும் எங்க டீம் அங்கே ஆஜராகிடும். இப்படி எல்லா வகையிலும் எங்களை தன்னம்பிக்கை மனிதர்களாக உயர்த்தும் சபரிமாலா டீச்சர், எங்களுக்கு அம்மா மாதிரி” என்கிற மாணவர்களின் குரலில் நெகிழ்ச்சி.

- எம்.திலீபன் படங்கள்:எஸ்.தேவராஜன்