Published:Updated:

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

‘‘மை டியர் ஜீபா... டைனோசர் இனம் எப்படி அழிந்தது?’’

- பா.செல்வமணி, கீழப்பனையூர்.

மைடியர் ஜீபா!

‘‘டைனோசர்களின் அழிவுக்கு இதுதான் காரணம் என ஒரு விஷயத்தை மட்டும் கூற முடியாது செல்வமணி. தற்போது, பூமியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்வன உயிரினங்கள் உள்ளன. சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஊர்வன உயிரினத்தில் மிகப் பெரியது, டைனோசர். இவற்றில் பல வகைகள் உள்ளன. இவை அழிந்தது பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. பாறைகளைவைத்து, மெக்ஸிகோ விஞ்ஞானிகள் சிலர் செய்த ஆய்வில், டைனோசர்களுக்குப் போதுமான உணவு கிடைக்காததும், பூமியின் வெப்ப நிலை மாற்றமும்தான் அவற்றின் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறுகிறார்கள். ருமேனியா பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வில், டைனோசர் வாழ்ந்த பகுதியில் விண்கல் மோதியதுதான் அவற்றின் அழிவுக்குக் காரணம் என்கிறார்கள்.’’

“அன்பு ஜீபா... பாரத ரத்னா விருது எப்போது உருவாக்கப்பட்டது?”

- கோ.இனியா, கிருஷ்ணகிரி.

மைடியர் ஜீபா!

“இந்திய அரசால் கொடுக்கப்படும் விருதுகளில் உயர்வானது, பாரத ரத்னா. 1954-ம் ஆண்டு முதல் இந்த விருது அளிக்கப்படுகிறது. பொதுச்சேவை, கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் மதிக்கத்தக்க சாதனைகளைச் செய்தவர்களுக்காக வழங்கப்படுகிறது. முதல் ஆண்டில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி, அறிவியல் மேதை சர் சி.வி.ராமன், முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. யாருக்கு இந்த விருதை அளிக்கலாம் என இந்தியப் பிரதமர், ஜனாதிபதிக்கு பரிந்துரைசெய்வார். அதன்படி வழங்கப்படும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் மூன்று நபர்களுக்கு அளிக்கப் படலாம். இறந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படக் கூடாது எனும் விதியை பின்னாளில் திருத்தினார்கள்.  இந்த விருது பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன் இதைப் பட்டமாக பயன்படுத்தக் கூடாது. இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கான் அப்துல் கப்பார் கான், கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய நெல்சன் மாண்டேலா, பிறப்பால் வெளிநாட்டவராக இருந்து, பிறகு இந்தியக் குடியுரிமை பெற்ற அன்னை தெரசா ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு, மதன் மோகன் மாளவியா மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. இது வரை 45 பேர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.’’

‘‘கூகுள் நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சை பற்றி சொல்லேன் ஜீபா’’

 - ம.அக்‌ஷயா, அரூர்.

மைடியர் ஜீபா!

‘‘புதுப்புது செய்திகளை அறிந்துகொண்டு அப்டேட்டாக இருக்கிறாயே அக்‌ஷயா, சபாஷ். 1972-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர், பிச்சை சுந்தரராஜன். இணையத்தளங்களில் பயன்படுத்தும் பெயர், சுந்தர் பிச்சை. வீட்டில் செல்லமாக, ராஜேஷ் என அழைப்பார்கள். அப்பா ரகுநாத பிச்சை, மின் பொறியாளர். அம்மா லட்சுமி, ஸ்டெனோவாக வேலை பார்த்தவர். மனைவி பெயர், அஞ்சலி. ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். சிறு வயதில் ஒருமுறை டயல் செய்த தொலைபேசி எண்ணைக்கூட மனப்பாடமாகச் சொல்லும் அளவுக்கு அபார நினைவாற்றல் உடையவர் சுந்தர் பிச்சை.

கரக்பூர் ஐ.ஐ.டி-யில் உலோகவியல் பொறியியலில் (Metallurgical Engineering) பட்டப்படிப்பு முடித்ததும், கல்வி உதவித்தொகை கிடைக்க, அமெரிக்கா சென்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் எம்.எஸ் படித்தார். 2004-ம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். கூகுளின் முக்கிய வசதிகளான ஜி மெயில், கூகுள் டிரைவ், வீடியோ கோடக் ஆகிய சேவைகள் பிரிவின் சீனியர் வைஸ்பிரசிடென்ட் பொறுப்பில் இருந்தார். கணினியில் இருந்து இணையத்துக்குத் தொடர்புகொள்ள உதவுபவை பிரௌஸர்கள். உலகம் முழுக்க இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோஸில்லா என ஏற்கெனவே பல பிரௌஸர்கள் பிரபலமாக இருந்த நிலையில், ‘கூகுளின் பிரத்யேக பிரௌஸராக, ‘க்ரோம்’ உருவாக்குவோம்’ என்றார் சுந்தர். அந்த ஐடியாவுக்கு கூகுள் நிறுவனத்தில் வரவேற்பு இல்லை. ‘இப்போதைய பிரௌஸர்களில் இருக்கும் எந்தக் குறையும் இல்லாமல், நம் பிரௌஸர் இருக்கும்’ என விடாமல் போராடி, அந்த புராஜெக்ட்டுக்கு ஒப்புதல் வாங்கினார். இன்று, உலகின் நம்பர் ஒன் பிரௌஸர் கூகுள் க்ரோம். தற்போது, கூகுளுக்கு சுந்தர்தான் தலைமை. எதையும் தெளிவாகவும் தொலைநோக்குடனும் திட்டமிடுவது, திட்டமிட்டதை வெற்றிகரமாகச் சாதிப்பது... இதுதான் சுந்தர் பிச்சையின் பலம். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இன்று உலகமே கவனிக்கும் மனிதராக உயர்ந்திருக்கிறார்  சுந்தர் பிச்சை.’’

‘‘ஹாய் ஜீபா, வயலினைக் கண்டுபிடித்தவர் யார்?’’

- ஆர்.கவின், காரமடை.

மைடியர் ஜீபா!

‘‘இசை என்றால் உனக்கு ஆர்வமா கவின்? 16-ம் நூற்றாண்டில், இத்தாலியைச் சேர்ந்த ஆன்டோனியோ ஸ்ட்ராடிவேரியஸ் (Antonio Stradivarius) என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் வயலின். பழங்காலத்தில் இது, ‘பிடில்’ (fiddle) என்று அழைக்கப்பட்டது. இன்று, மின்சார வயலின் வரை பல வகைகள் கிடைக்கின்றன. கர்னாடக இசை, திரைப்பட இசை எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வயலின் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில், குன்னக்குடி வைத்தியநாதன், டி.என்.கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், டாக்டர் எல்.சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் வயலின் இசைப்பதில் புகழ் பெற்றவர்கள்.’’