Published:Updated:

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

‘‘ஹாய் ஜீபா... இலங்கை யின் தேசியப் பறவையான காட்டுக்கோழி பற்றி தகவல் ப்ளீஸ்”

- நிகில், திண்டுக்கல்.

மைடியர் ஜீபா!

‘‘இலங்கை காட்டுக்கோழி, பாசியானிடே(Phasianidae)குடும்பத்தைச் சேர்ந்தது. ஆண் காட்டுக்கோழி, 66 - 73 செ.மீ நீளம் வளரக் கூடியது. இதன் தலைப் பகுதி சிவப்பு நிறத்திலும், உடல் மஞ்சள், சிவப்பு, கருநீல வண்ணங்கள் கலந்தும் காணப்படும். பெண் காட்டுக்கோழி 35 செ.மீ நீளம் வளரும். இது, வெள்ளை மற்றும்  பழுப்பு நிறம் கலந்து காணப்படும்.

‘‘ஹாய் ஜீபா... உலக அதிசயங்களின் பட்டியலில் இப்போது ஏழு இருக்கின்றன. இதைத் தவிர வேறு எந்தெந்த இடங்கள் இறுதிச் சுற்றுக்கு வந்தன?’’

- ராஜா, திருச்சி

‘‘உலக அதிசயங்களைப் பட்டியலிடுவதற்கு, சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகவைத்து செயல்படும் ‘நியூ 7 வொண்டர்ஸ் ஃபவுண்டேஷன்’ (New 7 Wonders Foundation), இணையம் மற்றும் தொலைபேசி வழியே மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது. சுமார் 100 மில்லியன் பேர் வாக்கு அளித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது. 2007-ம் ஆண்டு ஜூலை 7-ம் நாள் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் (Lisbon) நகரில் அறிவிக்கப்பட்டது. அதில், இந்தியாவின் தாஜ்மகால் உள்ளிட்ட ஏழு அதிசயங்கள் பட்டியலிடப்பட்டன. தவிர, இறுதி வரை போட்டியில் இருந்தவை என 13 இடங்களைப் பட்டியலிட்டது. அவை:

மைடியர் ஜீபா!

1. ஏதென்ஸின் அக்ரோபோலிஸ், (Acropolis of Athens) ஏதென்ஸ், கிரீஸ்.

2. அல்ஹாம்பிரா (Alhambra) ஸ்பெயின்.

மைடியர் ஜீபா!

3. அங்கோர்வாட் (Angkor Wat), கம்போடியா.

4. ஈஃபல் டவர் (Eiffel Tower) பாரிஸ், ஃபிரான்ஸ்.

மைடியர் ஜீபா!

5. ஹேகியா சோஃபியா (Hagia Sophia) இஸ்தான்புல், துருக்கி.

6. கியோமிசு-டேரா (Kiyomizu-dera) ஜப்பான்.

மைடியர் ஜீபா!

7. மோவாய், (Moai) சிலி.

8. நியுஸ்வான்ஸ்டீன், (Neuschwanstein) ஜெர்மனி.

மைடியர் ஜீபா!

9. செஞ்சதுக்கம், (Red Square) ரஷ்யா.

10. சுதந்திர தேவிச் சிலை (Statue of Liberty) நியூயார்க், அமெரிக்கா.

மைடியர் ஜீபா!

11. ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) அமெஸ்பரி, இங்கிலாந்து.

12. சிட்னி ஓப்ரா மாளிகை, (Sydney Opera House),  ஆஸ்திரேலியா.

மைடியர் ஜீபா!

13. டிம்பக்டு (Timbuktu) மாலி.

‘‘டியர் ஜீபா... காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன... காற்றழுத்த உயர்வு நிலை என்றால் என்ன?”

- க.ஹரீஷ் நாராயணன், மதுரை.

மைடியர் ஜீபா!

“மழைக் காலத்துக்கு ஏற்ற கேள்வி கேட்டிருக்கிறாய் ஹரீஷ். பூமிப் பரப்பின் மேல், குறிப்பிட்ட உயரத்துக்கு காற்று நிறைந்து இருக்கிறது. காற்றுக்கு எடை மற்றும் அழுத்தம் உண்டு என்பதைப் பாடத்தில் படித்திருப்பாய். நம்மைச் சுற்றியுள்ள காற்றின் அழுத்தம் சமமாக இருப்பதால்தான் நம்மால் நிற்கவும் நடக்கவும் முடிகிறது. ஆனால், காற்றின் அழுத்தம் ஒவ்வோர் இடத்திலும் மாறுபடும். ஓர் இடத்தில் காற்றின் அழுத்தம் குறைவாக இருந்தால், மற்ற பகுதியில் இருக்கும் காற்று, அந்தப் பகுதிக்குச் செல்லும். காற்றின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால், அங்கிருக்கும் காற்று வேறு இடத்தை நோக்கி நகரும். அழுத்தம் குறைவாக இருந்தால், காற்றழுத்தத் தாழ்வுநிலை. அழுத்தம் அதிகமாக இருந்தால், காற்றழுத்த உயர்வுநிலை எனக் குறிப்பிடப்படுகிறது.’’

“இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரி பாய் என்கிறார்களே உண்மையா ஜீபா?”

- ஆர்.ரோஷிணி, சேலம்.

மைடியர் ஜீபா!

“பலருக்குத் தெரியாத சாவித்திரி பாய் பற்றி கேட்டதற்கு ஒரு சபாஷ் ரோஷிணி. சாவித்திரி பாய், மராட்டிய மாநிலத்தின் ‘நைகான்’ எனும் சிறிய ஊரில், 1831-ம் ஆண்டு பிறந்தவர். 9 வயதிலேயே, ஜோதிராவ் பூலே என்பவரோடு திருமணம் நடந்தது. பூலேவுக்கு வயது 13. பெண்கள் படிக்கவே முடியாத அப்போதைய  சூழ்நிலையில், பல தடைகளைத் தாண்டி கல்வி கற்றார் சாவித்திரி. 1846-ம் ஆண்டு இவரது கணவர் ஜோதிராவ் பூலே, பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். 1848-ம் ஆண்டு, சாவித்திரி பாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதே ஆண்டில், புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அங்கு, இவருக்கும் படிக்க வந்த பெண்களுக்கும் ஏராளமான தொல்லைகள் உண்டானது. சாவித்திரி பள்ளிக்கு வரும்போது, சேற்றை அள்ளி வீசுவார்களாம். அதனால், இவர் பழைய புடைவை அணிந்து வருவார். பள்ளிக்குள் வந்ததும் வேறு புடைவை கட்டிக்கொள்வாராம். இப்படி, பலவிதத் தொல்லைகளையும் மீறி, பெண்களுக்கு கல்வி கற்றுத்தருவதில் பிடிவாதமாக இருந்தார். இவரின் துணிச்சலான முயற்சிக்கு, கணவர் ஜோதிராவ் பூலே பக்கபலமாக இருந்தார். கணவரின் சீர்திருத்தப் போராட்டங்களில் ஈடுபட்டார். அப்போதைய வழக்கப்படி விதவைகளுக்கு மொட்டை அடித்து, பலவித கொடுமைகள் நடந்ததை எதிர்த்துப் போராடினார். 1870-ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு, உறைவிடப் பள்ளியை நடத்தினார். இவர், நல்ல எழுத்தாளரும்கூட. ‘காகித மலர்’ எனும் இவரது கவிதை நூல், மிக நல்ல கருத்துக்களைக்கொண்டது.”

மை டியர் ஜீபா, சுட்டி விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை-600 002