Published:Updated:

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

“மை டியர் ஜீபா, ஏலியன்ஸ் வாழ்வது உண்மைதானா? ஏலியன்ஸ் தற்போது இருக்கின்றனவா?’’

- பா.கலைவாணி, கீழப்பனையூர்.

மைடியர் ஜீபா!

“வேற்றுக்கிரகங்கள் உள்ளன என்பது அறிவியல்பூர்வமான உண்மை. அதில், கிரகவாசிகள் இருக்கிறார்களா என இதுவரை யாரும் பார்க்கவில்லை. எப்படி பேய் பற்றிய நம்பிக்கைகள் இருக்கின்றனவோ, அதைப் போலவே வேற்றுக்கிரகவாசிகள் நம்பிக்கையும் மக்களிடம் இருக்கிறது. குறிப்பாக, ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் போன்றவற்றை மனிதன் கண்டுபிடிக்க ஆரம்பித்ததும் இந்த நம்பிக்கைகள் அதிகமாகின. இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லையே தவிர, எங்கோ ஒரு நட்சத்திர மண்டலத்தில், ஒரு வகை ஜீவராசிகள்் இருக்கலாம் என்ற தேடல் அறிவியல் உலகில் இருக்கிறது. அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரமும் பல ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கின்றன. விநாடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஓர் ஆண்டு முழுதும் பயணம் செய்தால், எவ்வளவு தூரம் கடந்திருப்போமோ, அதுதான் ஓர் ஒளி ஆண்டு தூரம். நமக்கு அருகில் இருப்பதாகச் சொல்லப்படும் ‘ப்ராக்ஸிமா சென்டாரி’ என்ற நட்சத்திரம், 4.22 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு தூரம் பயணம்செய்து, அங்கே இருக்கும் ஒரு கிரகவாசியைக் கண்டுபிடிக்கும் வரை இது சுவாரஸ்யமான கற்பனையாகவே இருக்கும்.’’

‘‘ஹாய் ஜீபா... ராஜ நாகம் தன் விஷத்தை ஒரு சொட்டுக்கூட கக்காமல் வைத்திருந்தால், அது முத்தாக மாறும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?”

- ஆர். கிருபாகரன், பெரம்பலூர்.

மைடியர் ஜீபா!

“பல கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. பாம்பு, மாணிக்கத்தைக் கக்கும் எனச் சொல்வார்கள்.  ஆனால், உன்னிடம் ‘முத்து’ என்று சொல்லி இருக்கிறார்கள். முத்து, கடலில் கிடைப்பது என்று பாடத்தில் படித்திருப்பாயே கிருபாகரன். பாம்பின் நஞ்சுப் பையில் திரவ நிலையில் இருப்பதுதான் விஷம். துளையுள்ள பல்லுடன் இந்த நச்சுப்பை இணைந்திருக்கும். பாம்பு ஒருவரை கடிக்கும்போது பல் வழியே விஷம், கடிபட்டவரின் உடலுக்குள் செல்கிறது. பாம்பு, விஷத்தைப் பயன்படுத்தும் விதம் இதுதான். பாம்பால் விஷத்தைக் கக்க முடியாது. பாம்பு இறக்கை முளைத்துப் பறக்கும், பாம்பு மனித உருவில் வந்து நடனம் ஆடும் என்பது எல்லாமே இதுபோன்ற கற்பனைக் கதைகள்தான்!’’

“மை டியர் ஜீபா? பிரதமர் நிவாரண நிதி, முதலைமைச்சர் நிவாரண நிதி என்று கூறுகிறார்களே... அது பற்றி சொல்ல முடியுமா?”

- அனன்யா, பொள்ளாச்சி.

மைடியர் ஜீபா!

‘‘புயல், மழைக் காலத்துக்கு ஏற்ற கேள்விதான் கேட்டிருக்கிறாய் அனன்யா. 1948-ம் ஆண்டு, பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆலோசனைப்படி  உருவானதுதான் பிரதமர் நிவாரண நிதி. அதன் பின்னர் புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளின்போது துன்பப்படும் மக்களுக்கு இந்த நிவாரண நிதி உதவுகிறது. இதில் இருக்கும் பணம் முழுவதும் பொதுமக்களின் பங்களிப்புதான். பிரதமர் நிவாரண நிதிக்குச் செலுத்தும் பணத்துக்கு வரிச்சலுகை உண்டு. இந்த நிதி, இயற்கை இடர்பாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஏழை மக்களின் இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பிரதமர் நிவாரண நிதியைப் போலவே ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச்சருக்கும் நிவாரண நிதி உண்டு. அதில், அந்த மாநிலத்தில் ஏற்படும் இயற்கைச் சேதங்களின்போதும், தனிநபரின் பெரிய நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.’’

“ஹலோ ஜீபா... பாய்சங் பூட்டியா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?”

- ஆர்.கவின், காரமடை.

மைடியர் ஜீபா!

“சிறந்த கால்பந்து விளையாட்டு வீரரான பாய்சங் பூட்டியா, சிக்கிம் மாநிலத்தில் 1976, டிசம்பர் 15-ல் பிறந்தார். ஐ லீக் போட்டியில் கிழக்கு வங்காள அணியில் ஆடினார். 1999-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டின் பரி கிளப்  (Bury club) அணிக்காக விளையாடியதன் மூலம் ஐரோப்பிய கால்பந்துக் கழகத்துக்கு விளையாடிய முதல் இந்திய வீரர் எனும் பெருமை பெற்றார்.  மலேசியாவின் பெர்க் எஃப்.ஏ (Perak FA), இந்தியாவின் ஜெசிடு மில்ஸ் மற்றும் மோஹன் பகான் (JCT Mills and Mohun Bagan) ஆகிய கழகங்களுக்காகவும் இவர் ஆடியுள்ளார். நமது நாட்டு தேசிய அணியில் பங்கேற்று நேரு கோப்பை, எல்.ஜி கோப்பை, தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பின் சாம்பியன் தொடரில் மூன்று முறை, ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் சேலஞ்ச் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார். 2009 நேரு கோப்பைப் போட்டியில், தனது 100-வது ஆட்டத்தில் அட்டகாசமான கோல் அடித்து, கிர்கிஸ்தான் அணியைத் தோற்கடித்தார். இந்திய அளவில் அதிக கோல் அடித்த வீரர் இவரே. இந்திய அரசு, சிக்கிம் மாநிலத்தின் நாம்சி நகரில் இருக்கும் கால்பந்து மைதானத்துக்கு இவரது பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தி இருக்கிறது.’’