மைடியர் ஜீபா!

‘‘லண்டன் நகரில் ஓடும் தேம்ஸ் நதியே, மிகவும் அழகிய நதி என்பது உண்மையா ஜீபா?’’
- எஸ்.ஜெ.ஷன்மதி, மதுரை.

‘‘உண்மைதான் ஷன்மதி. இங்கிலாந்து நாட்டின் சிறப்புகளில் முதன்மையானது தேம்ஸ் நதி. இது, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பெரிய ஆறுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. (முதல் இடம் செவர்ன் ஆறு). குளோசெஸ்டர்ஷையர் (Gloucestershire) பகுதியில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கும் தேம்ஸ் நதி, 346 கிலோமீட்டர் பயணித்து, வட கடலில் கலக்கிறது. தேம்ஸ் நதியின் குறுக்கே கம்பீரமாகக் காணப்படும் டவர் பாலம் (Tower Bridge) 1894-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 244 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம், தேம்ஸ் நதியைக் கடக்கவும், அழகை ரசிக்கவும் பயன்படுகிறது. இந்த நதி, பல முறை பனிப்பாறைகளால் உறைந்துபோனதாம். அப்போது, உறைநிலைக் கண்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுமாம். தேம்ஸ் நதிப் பகுதியில் நடைபெறுவது போன்ற கதைகளோடு பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.’’
‘‘ஹாய் ஜீபா... சச்சின் டெண்டுல்கரின் ரோல்மாடல், பிராட்மேன் பற்றி தகவல் ப்ளீஸ்...’’
- ச.பூர்ணா, கோயம்புத்தூர்.

‘‘கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் ரோல் மாடல் என்றால் சும்மாவா? டான் பிராட்மேன், 1908 ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்தவர். ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர். டெஸ்ட் விளையாட்டில் இவரின் சராசரி 99.94 என்பதை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 52 டெஸ்ட் போட்டிகளில் 6,996 ரன்களைக் குவித்தவர். இதில், 29 சதங்களும் 13 அரை சதங்களும் அடங்கும். 1930-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 334 ரன்களை விளாசினார். 234 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 28,067 ரன்களைச் சேர்த்தவர். இந்த வெற்றிப் பயணம், இவரின் சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. பள்ளியில் படிக்கும்போதே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். விளையாட்டைப் போலவே இசையிலும் நல்ல ஆர்வம். அதனால், பியானோ கற்றுக்கொண்டார். ஏழு வயதில் மேடையில் பாடி அசத்தினார். ‘Every Day is a Rainbow Day for Me’ என்ற பாடலை வெளியிட்டார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில், இவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 2001 பிப்ரவரி 25-ல் மறைந்த பிராட்மேன், பல கிரிக்கெட் வீரர்களுக்கு ரோல்மாடலாக இருந்தவர்.
தன்னைப் போலவே விளையாடுவதாக, பிராட்மேன் பாராட்டிய ஒரே வீரர் நம்ம சச்சின். தன்னுடைய ரோல்மாடலே பாராட்டும் சிறப்பு சச்சினுக்குக் கிடைத்திருக்கிறது.’’
‘‘ஹலோ ஜீபா... ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை எது?’’
- ம.ராகுல், தேவகோட்டை.

‘‘ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை, ஈமு. Casuariidae குடும்பத்தைச் சேர்ந்த இது, இரண்டு மீட்டர் உயரம் வளரக்கூடியது. 45 கிலோ எடைகொண்ட பெரிய பறவை. இவற்றால் பறக்க முடியாது. 50 கிலோமீட்டர் வேகத்தில் நடக்கக்கூடியது. முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தாவரங்கள் மற்றும் பூச்சிகளை உணவாக உண்பவை. நீரில் நன்றாக நீந்தும். ஈமுவின் கால் நகம், மிகக் கூர்மையான கத்தியைப் போன்று இருக்கும். தன்னைத் தாக்க வரும் விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள இந்த நகங்கள் உதவும். உலோகக் கம்பி வேலியையே நகங்களால் கிழித்துவிடும். ஆஸ்திரேலியாவின் நாட்டுப்புறக் கதைகளில் முக்கியக் கதாபாத்திரமாக, அந்த நாட்டின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக ஈமு விளங்குகிறது.’’
‘‘மை டியர் ஜீபா... ஐந்து தலை நாகப் பாம்பு இல்லை என்று என் ஆசிரியர் சொல்கிறார். ஆனால், செய்தித்தாளில் படங்களோடு வந்ததாக என் நண்பன் சொல்கிறான். எது உண்மை?’’
- பி.சந்துரு, ராசிபுரம்.

‘‘கொடிய விஷம் உள்ள பாம்புகளில் ஒன்று, நாகப் பாம்பு. இது, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் காணப்படும். ‘நல்ல பாம்பு’ என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. இந்த நாகப் பாம்புகளின் சிறப்பு, அதன் தலைப் பகுதியில் காணப்படும் தசை. இது, மிக நன்றாக விரியக் கூடியது. எதிரியை அச்சுறுத்துவதற்காக, இந்த தசைப் பகுதியை விரிக்கும். அப்போது, இதன் தலைப் பகுதி மிகப் பெரிதாக இருக்கும். இதையே, பாம்பு படம் எடுக்கிறது என்பார்கள். படம் எடுக்கும் இந்தச் செயலுடன் சேர்ந்த கற்பனையே, புராணங்களில் ஐந்து தலை நாகம் எனச் சித்திரிக்கப்பட்டுள்ளது. எனவே, உன் ஆசிரியர் சொன்னது உண்மைதான் சந்துரு. நண்பன் சொன்னது போல சில சமயம், போலியான படங்கள் வெளியாகும்.’’
‘‘ஹலோ ஜீபா... கொசுவைவிட ஈ பயங்கரமான வில்லனாமே?’’
- கே.ரஞ்சனி, ஈரோடு.
“இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை ரஞ்சனி. கொசு மனிதர்களைக் கடித்து, ரத்தத்தில் வைரஸ் கிருமிகளைப் பரப்பும். ஈக்களின் ஸ்டைல் வேறு. கழிவுகள், அழுகிய உணவுகள் போன்றவற்றில் அமர்ந்து, கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களைத் தங்களின் கால்களில் சுமந்துவந்து, நாம் உன்ணும் உணவுப் பொருள்களில் அந்த பாக்டீரியாக்களைப் பரப்பிவிடும். இதனால், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் தொடங்கி பல்வேறு தொற்று நோய்கள் உண்டாகும். நம் வீட்டுக்கு அருகில் குப்பைகள் சேராமல் தடுப்பது, உணவுப் பொருள்களை மூடிவைப்பது, அழுகிய காய்கறிகளைத் தவிர்ப்பது, அசைவ உணவுகளைக் கவனமாகக் கையாள்வதன் மூலம் ‘ஈ’ எனும் வில்லனை விரட்டலாம்.’’
மை டியர் ஜீபா, சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002