Published:Updated:

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

சிறுதானியங்களில் முக்கியமானவை எவை?

- கமலி தென்றல் நிலவன், திருச்செங்கோடு.

மைடியர் ஜீபா!

ஃபாஸ்ட் ஃபுட் விரும்பும் சுட்டிகள் மத்தியில், சத்துமிக்க சிறுதானியம் பற்றிய கேள்விக்கு ஒரு சபாஷ் கமலி. சிறுதானியங்கள் அனைத்துமே நம் உடலுக்கு வலு சேர்ப்பவைதான். தினையில் லட்டு செய்யலாம். இது இதயத்தை வலுப்படுத்தும். குதிரைவாலியில் தோசை செய்து சாப்பிடலாம். இதில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்தச்சோகை வராமல் தடுக்கும். நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்துக்கும் உதவும். சிவப்பு அரிசி, கேழ்வரகு இரண்டையும் சேர்த்து இடியாப்பம் செய்து சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் அனைவரும் சாப்பிட ஏற்றது. கம்புப் புட்டு செய்து கடலைக் கறியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், மாவுச்சத்து, புரதச்சத்து, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் கிடைக்கும். கேழ்வரகில் உருண்டை செய்து சாப்பிடுவது, குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

வீணை எனும் இசைக் கருவி எப்போது உருவானது?

- கே.விக்னேஷ், திருவள்ளூர்.

மைடியர் ஜீபா!

வீணை, நமது பழம்பெரும் இசைக் கருவிகளில் ஒன்று. இப்போது நாம் பார்க்கும் வீணையின் அமைப்பு 17-ம் நூற்றாண்டில் உருவானது என்று கூறுகிறார்கள். இப்போது வழக்கத்தில் இருக்கும் அமர்ந்துகொண்டு வாசிக்கும் வீணை, ஆரம்பத்தில் நின்றுகொண்டு வாசிப்பதுபோல இருந்தது. வீணை குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச் சட்டம், மெழுகுச் சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகிய பாகங்களைக்கொண்டது. தஞ்சாவூர் பகுதியில் அதிகம் தயாரிக்கப்படுகிறது. வீணை வாசிப்பதில் தனம்மாள் என்பவர் புகழ்பெற்றவர். அவரைப் பற்றி “வீணை, அதன் பேர் தனம்’ எனும் நூலை சோழநாடன் எழுதியிருக்கிறார். அந்த நூலில் முன் பகுதியில், வீணையின் வரலாற்றைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.

மை டியர் ஜீபா! பைசா நகரின் சாய்ந்த கோபுரம் பற்றி தகவல் ப்ளீஸ்? 

- மு.ராஜேஸ் கண்ணன், கணேசபுரம்.

மைடியர் ஜீபா!

இத்தாலி நாட்டில் உள்ள பைசா (Pisa) நகர் பேராலயத்தின் மணிக்கோபுரம்தான், உலக அதிசயங்களில் ஒன்றான சாய்ந்த கோபுரம். வெள்ளை நிற மார்பிளால் கட்டப்பட்ட இதன் உயரம் 183.3 அடி. 297 படிகளைக்கொண்டது. 1173-ம் ஆண்டில் கட்ட ஆரம்பித்து, 1372-ம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்தக் கோபுரம் 5.5 டிகிரி சாய்ந்த நிலையில் இருப்பதால், பாதுகாப்புப் பணிகளுக்காக 1990-ம் ஆண்டு பொதுமக்கள் செல்வதைத் தடை செய்தனர். பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் 2001-ஜூன் 16-ல் திறக்கப்பட்டது. இப்போது, 3.9 டிகிரி, சாய்வில் உள்ளது. கலிலியோவின் மாணவர் வின்சென்சோ விவியாணி (Vincenzo Viviani) வெவ்வேறு எடைகொண்ட பொருட்களை அவர் பைசாவின் சாய்ந்த கோபுரத்தில் இருந்து விழச்செய்தார். அவை இரண்டும் கீழே வர, ஒரே நேரம் எடுத்துக்கொள்கின்றன எனும் கூற்றை நிரூபித்தார்.

ஹாய் ஜீபா! நான் இப்போது 9-ம் வகுப்பு படிக்கிறேன். இந்திய கால்பந்து அணியில் நான் இடம்பிடிக்க என்ன மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும்?

- எம்.கார்த்தி, கோயம்புத்தூர்.

மைடியர் ஜீபா!

கால்பந்து விளையாட்டு மீது இருக்கும் உன் ஆர்வத்துக்கு பாராட்டுகள் கார்த்தி. தற்போது, பள்ளி அளவில் உங்கள் ஆசிரியரிடம் பயிற்சி எடுத்து வருவீர்கள். அதோடு, அனுபவம் மிக்க தனிப் பயிற்சியும் தேவை. 14, 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி அணியில் திறமையாக விளையாடி, மாவட்ட, மாநில, தேசிய அணிகளில் இடம்பிடிக்கலாம். இதைப் பள்ளி அளவிலான ஃபெடரேஷன் வழி நடத்தும். மாவட்ட கால்பந்துக் கழகம் மூலமும் உங்கள் பயணத்தைத் தொடங்கலாம். அதற்கு, கோயம்புத்தூர் கால்பந்துக் கழகத்தில் இருக்கும் பள்ளி கிளப்பில் நீங்கள் இடம்பிடிக்க வேண்டும். அங்கு நடத்தப்படும் லீக் ஆட்டங்களில் உங்களின் திறமையை வெளிப்படுத்தினால், மாவட்ட, மாநில அளவிலான அணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவீர்கள். இங்கு 14, 16, 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் சீனியர் பிரிவுகள் உள்ளன. ஆர்வமும் விடாமுயற்சியும் உங்களைச் சிறந்த கால்பந்து வீரராக மாற்றும். அட்வான்ஸ் வாழ்த்துகள்.

கோயம்புத்தூர் கால்பந்துக் கழக முகவரி: கோயம்புத்தூர் கால்பந்துக் கழகம், கேட் எண்: 12, முதல் மாடி, ஜவஹர்லால் நேரு மைதானம், கோயம்புத்தூர்.  

சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயிலைப் பற்றி சொல்லேன்?

- பி.சந்துரு, ராசிபுரம்.

மைடியர் ஜீபா!

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர், கிறிஸ் கெயில். ஒருநாள், டெஸ்ட், டி20 போட்டிகள் என அனைத்து ஆட்டங்களிலும் இவர் அடித்த சிக்ஸர்கள் 400 - க்கும் மேல். மேற்கிந்தியத் தீவுகளின் ஜமைக்காவில் பிறந்தார். ஜமைக்காவுக்காக 19 வயதில் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். சில மாதங்களில், முதல்தர ஆட்டங்களில் விளையாடத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 175 ரன்களைக் குவித்து உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 15 சதங்களை அடித்து 7,000 ரன்களை கடந்துவிட்டார்.     2002-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்து ஆச்சரியப்படவைத்தார். 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே-க்கு எதிரான ஒருநாள் போட்டியில் 16 சிக்ஸர்களும் 10 பவுண்ட்ரிகளுமாக, 147 பந்துகளில் 215 ரன்களை விளாசியபோது இவரை, ‘ரன் மிஷின்’ என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.