மைடியர் ஜீபா!
‘‘ஹலோ ஜீபா... இந்தியாவில் அமைந்துள்ள 32 இடங்களை உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதாமே. அவை என்னென்ன?”
- ம.ராகுல், தே பிரித்தோ மே.நி.பள்ளி, தேவகோட்டை.
‘‘ஐ.நா சபையின் துணை நிறுவனங்களில் ஒன்றுதான் யுனெஸ்கோ. ஐ.நா உறுப்பினராக இருக்கும் நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒருங்கிணைப்பைச் செய்து, அனைத்து நாடுகளும் சமாதானத்துடன் இருக்க உதவுவதே யுனெஸ்கோவின் பிரதானப் பணி. உலகம் முழுவதும் இருக்கும் பாரம்பர்ய இடங்களைத் தேர்வுசெய்து பட்டியல் இட்டது யுனெஸ்கோ. 50 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுடன் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது. 32 பாரம்பர்ய இடங்களுடன் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. அவை:


1. ஆக்ரா கோட்டை, 2. அஜந்தா குகைகள், 3. சாஞ்சி புத்தக் கோயில், 4. குஜராத், சம்பானேர் பாவாகேஷ் தொல்லியல் பூங்கா, 5. மும்பை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், 6. கோவாவின் தேவாலயங்களும் மடங்களும், 7. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எலிபண்டா குகைகள், 8. எல்லோரா குகைகள், 9. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பதேப்பூர் சிக்ரி நகரம், 10. தமிழ்நாட்டின் சோழர் காலக் கோயில்கள், 11. கர்நாடக மாநிலத்தின் ஹம்பி நினைவுச் சின்னங்கள், 12. மகாபலிபுரச் சிற்பங்கள், 13. கர்நாடக மாநிலத்தின் பட்டடக்கல் நினைவுச் சின்னங்கள், 14. ராஜஸ்தானின் ஹீல்ஸ் மலைத்தொடர், 15. டெல்லி, ஹூமாயூன் சமாதி, 16. மத்தியப்பிரதேசத்தின் கஜுராஹோ நினைவுச் சின்னங்கள், 17. புத்த கயா, மகாபோதி கோயில் 18. டார்ஜிலிங், சிம்லா மற்றும் ஊட்டி மலைப்பாதை ரயில்கள், 19.டெல்லி குதுப்மினார் நினைவுச் சின்னங்கள், 20. குஜராத், பதான் ராணியின் குளம், 21.டெல்லி செங்கோட்டை, 22.மத்தியப்பிரதேசத்தின் பீம்பேட்கா பாறை வாழிடங்கள், 23. ஒடிசா, கொனார்க் சூரியன் கோயில், 24. தாஜ்மஹால், 25. ஜெய்ப்பூர், ஜந்தர் மந்திர், 26. ஹிமாலயன் தேசியப் பூங்கா,27. அசாம், காசிரங்கா தேசியப் பூங்கா,28. ராஜஸ்தான், கேவலாதேவ் தேசியப் பூங்கா,29. அசாம், மானஸ் வனவிலங்கு காப்பகம்,30. உத்தராஞ்சல், நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, 31. மேற்கு வங்காளம், சுந்தர வனத் தேசியப் பூங்கா, 32. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்.’’
‘‘ஹாய் ஜீபா... ஐஎஸ்எச் கால்பந்து ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் யார்?’’
- எஸ். கனகராஜ், அன்னூர்.

‘‘நம் சென்னை அணிதான் நடப்பு சாம்பியன். இறுதிப் போட்டியில், சென்னையை எதிர்த்து கோவா அணி களம் இறங்கியது. இதில், சென்னை 3:2 என்ற கோல் கணக்கில் பட்டத்தைத் தட்டியது. ஆட்டத்தின் ஆரம்பத்தில், கோவா அணி வென்றுவிடும் என்பதுபோலத்தான் இருந்தது. சென்னையின் நட்சத்திர வீரர், மென்டோசா (Mendoza) அட்டகாசமான ஆட்டத்தால் திருப்பத்தை உண்டாக்கினார். சென்னை அணி வெற்றி வாகை சூடியது. மென்டோசா, தங்கக் காலணி (Golden Boot) விருதும் ‘Hero of the League’ விருதும் பெற்றார்.’’
‘‘மை டியர் ஜீபா... நாம் ஏதாவது சாக்லேட், கடலை மிட்டாய் வாங்கினால், அதன் கவரில் Best before 3 months from mfg., என்று இருக்கிறதே. அது எதற்காக?’’
- பா.கிருஷ்ணசாய், சேலம்.

‘‘இரவில் சமைக்கும் உணவு, மறுநாள் காலையில் வீணாகிவிடும் அல்லவா? அதுபோலத்தான் எந்த ஒரு உணவுப் பொருளும், குறிப்பிட்ட நாட்கள் வரைதான் சாப்பிட ஏற்றதாக இருக்கும். அதைக் குறிப்பதே அந்த தேதி. மருந்து, மாத்திரை, ஷாம்பு, சோப்பு போன்ற பலவிதப் பொருட்களுக்கும் இந்தக் கால வரையறை உண்டு. பயன்பாட்டுத் தேதி முடிந்த நிலையில் சாப்பிட்டால், பல்வேறு உடல்கோளாறை உண்டாக்கிவிடும். மருந்து, மாத்திரை போன்ற விஷயத்தில் எதற்காக அதைச் சாப்பிடுகிறோமோ, அந்தப் பலனைத் தராது. மேலும், வேறுவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால், நாம் எந்தப் பொருளை வாங்கினாலும்,அது பயன்படுத்தும் காலத்துக்குள் இருக்கிறதா என்பதைத் தெரிந்த பின்னரே வாங்க வேண்டும்.’’