Published:Updated:

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!
பிரீமியம் ஸ்டோரி
News
மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!
மைடியர் ஜீபா!

‘‘டியர் ஜீபா... நாம் அழும்போது வரும் கண்ணீருக்கும், அதிகமாகச் சிரிக்கும்போது வரும் கண்ணீருக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?”

- அனன்யா, பொள்ளாச்சி.

‘‘வித்தியாசமான கேள்வியைக் கேட்டிருக்கிறாய் அனன்யா. நமது கண்களைப் பாதுகாக்கும் கவசங்களில் கண்ணீரும் ஒன்று. நீர், உப்பு, நொதிகள் சேர்ந்த கண்ணீர், நமது கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பதால்தான், நம்மால் கண்களை மூடித் திறக்க முடிகிறது. புகை,  தூசு போன்ற எதிரிகள் கண்களைத் தாக்கும்போது, அவை மூளைக்கு உணர்த்தப்பட்டு, கண்ணீர் அதிகம் வெளியாகி, அவற்றை வெளியேற்றும்  கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. சிரிப்பது,  அழுவது போன்ற  உணர்ச்சி வெளிப்பாட்டின்போதும்  இதேபோல  தூண்டப்பட்டு, கண்ணீர் வெளிப்படுகிறது. இதில், வித்தியாசம் எதுவும் கிடையாது.’’

‘‘ஹாய் ஜீபா... சுனாமி எப்படி உருவாகிறது?” 

- பி.கோகுல்கண்ணன், கோம்பை, தேனி.

மைடியர் ஜீபா!

‘‘பெருமளவு தண்ணீர் குறிப்பிட்ட பகுதிக்கு இடம்பெயர்வதே சுனாமி எனப்படுகிறது.  நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு, பனிப்பாறை உருகுவது போன்றவையே, நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்குக் காரணங்கள். கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றத்தினாலாயே, கடல் நீர் செங்குத்தாக இடம்பெயர்கிறது. மிகப் பெரிய அலைகளாக அது கரையை வந்தடைகிறது. பூமிக்கு அடியில் புவித்தட்டுகள் உள்ளன. இதன் மீதே, ஒவ்வொரு கண்டமும் கடலும் உள்ளது. இது, ‘டெக்டானிக் பிளேட்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால், நிலநடுக்கம் உண்டாகிறது. கடலுக்கு அடியில் உருவாகும் நிலநடுக்கத்தினால், சுனாமி உருவாகிறது. கடலை ஒட்டிய பகுதியில் நிலநடுக்கம் வந்தாலும் சுனாமி உருவாகும். சுனாமி என்பது ஜப்பானிய மொழிச் சொல். இதை, தமிழில் ‘ஆழிப் பேரலை’ என்று குறிப்பிடுகிறார்கள்.’’

‘‘மை டியர் ஜீபா... கடையில் வாங்கும் பல பொருட்களில் கறுப்பு நிறத்தில் வரிவரியாகக் கோடுகள் உள்ளதே, அவை  எதற்காக அச்சிடப்படுகின்றன?”

- தி.சிவானந்தன், அவினாசி.

மைடியர் ஜீபா!

‘‘பொருட்களை வாங்கினோம், பயன்படுத்தினோம் என்று இல்லாமல், அதன்மேல் அச்சிடப் பட்டிருக்கும் விஷயங்களைக் கவனிக்கும் உன் ஆர்வத்துக்கு வாழ்த்துகள் சிவானந்தன். அந்த வரிக்கோடுகளின் பெயர், பார்கோடு (Barcode). பெர்னார்ட் சில்வர் மற்றும் ஜோசப் உட்லேண்ட் என்கிற இரண்டு அமெரிக்கர்கள்தான் இன்றைய பார்கோடுகளுக்கு முன்மாதிரியை உருவாக்கியவர்கள். கடையிலிருந்து  வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்லும் ஒரு பொருள் பற்றிய விவரங்களைத் தானாகக் குறித்துக்கொள்ளும் கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்கள். புற ஊதாக் கதிர்கள், தந்திகளில் பயன்படுத்தும் மோர்ஸ் கோடுகள், திரைப்படச் சுருளில் இருந்து ஒலியைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் எனப் பல வகைகளில் முயற்சிசெய்து, 1949-ம் ஆண்டு ஒரு மாதிரியை உருவாக்கினார்கள். அது, ஒரே மையத்தைக்கொண்ட பல வட்டங்களாக இருந்தன. பின்னர் 1961-ம் ஆண்டில், என்பவர் கடந்து செல்லும் ரயில்கள் பற்றிய விவரங்களை தானாகப் பதிவு செய்யும் ஒரு தொழில்நுட்பத்தை டேவிட் காலின்ஸ் கண்டுபிடித்தார். இந்த இரண்டின் மேம்படுத்திய வடிவம்தான் இன்றைய பார்கோடுகள். நீங்கள் வாங்கிய ஒரு பொருளின் விலை, எடை, பிராண்ட் பெயர், அது எப்போது தயாரிக்கப்பட்டது போன்ற விவரங்களை எளிதாகவும் விரைவாகவும் கண்டுபிடிக்க இந்த பார்கோடுகள் உதவுகின்றன. சில மருத்துவமனைகளில் நோயாளிக்குத் தரும் நோட்டுகளிலும் இந்த பார்கோடு அச்சிடப்படுகிறது. அதன் மூலம், நோயாளி இதற்கு முன் சிகிச்சைக்கு வந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளமுடியும். டேட்டா மேட்ரிக்ஸ், 12 எண்களைக்கொண்ட UPC-A, புகைப்படங்களோடு செய்திகளைக் காண உதவும் QR கோடு, EZ கோடு,  புத்தகங்களின் தரத்தை உணர்த்தும் வகையான ISBN (International Standard Book Number) எனப் பல வகைகளில் இப்போது பார்கோடுகள் மேம்பட்டுள்ளன.’’

‘‘ஹலோ ஜீபா... விண்வெளிக்கு முதன்முதலாக அனுப்பப்பட்ட லைகா நாய் பற்றி சொல்லேன்.’’

-எஸ்.சிநேகா, கோயம்புத்தூர்.

‘‘ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளால் விண்வெளிக்கு முதன்முதலாக அனுப்பப்பட்ட உயிரினம் லைகா. இதன் இயற்பெயர் ‘குத்ரியாவ்க்கா’ (Kudryavka). வீதிகளில் திரிந்துகொண்டிருந்த லைகாவுக்குப் பயிற்சி அளித்துத் தயார்படுத்தி, ‘ஸ்புட்னிக் 2’ என்ற விண்கலம் மூலம் நவம்பர் 3, 1957-ல்  அனுப்பினார்கள். ஆனால், வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே லைகா இறந்துவிட்டாலும், இன்று வரை அதன் பெயர் அறிவியல் உலகில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.’’

‘‘ஹாய் ஜீபா... கேமராவைக் கண்டுபிடித்தவர் யார்?”

- கோ.சா.வெங்கடேஸ்வரன், திருமங்கலம்.

மைடியர் ஜீபா!
மைடியர் ஜீபா!
மைடியர் ஜீபா!

‘‘எந்தக் கண்டுபிடிப்பும் உடனடியாக நடந்துவிடுவது இல்லை வெங்கடேஸ்வரன். கேமராவும் அப்படிப் பல படிநிலைகளைத் தாண்டித்தான் வந்துள்ளது. கருவி மூலம், தூரத்தில் இருக்கும் பிம்பத்தை இருட்டு அறையில் விழும்படியாகத் தொடக்கத்தில் செய்திருக்கிறார்கள். அந்தப் பிம்பத்தை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் பிறந்த ஜோசப் நைஸ்ஃபோர் நிப்ஸ் (Joseph Nicephore Niepce), நிரந்தமாக பிம்பம் பதியும் கருவியைக் கண்டுபிடித்தார். ஒருவர், குதிரையைப் பிடித்துச்செல்வதுபோல, 17-ம் நூற்றாண்டில் வரைந்த ஓவியத்தைப் புகைப்படமாக எடுத்தார். 1826-ம் ஆண்டில் தனது இரண்டாவது படத்தை எடுக்க, நிப்ஸுக்கு 8 மணி நேரம் ஆனதாம். அதைத் தகட்டில் பதிய 8 மணி நேரம் ஆனதாம். அழகான இயற்கைக் காட்சியை இவர் எடுத்த படம், இன்று வரை இருக்கிறது. இவரைத் தொடர்ந்து லூயிஸ் டாகுவேரா (Louis Daguerre) கேமராவை இன்னும் எளிமையாகக் கையாளும் விதத்தை கண்டுபிடித்தார். மனிதர்களை முதன்முதலாகப் படம் பிடித்த பெருமை இவரையே சாரும். பாரிஸ் நகரின் கடைத் தெருவில் ஒருவர் காலணிக்கு பாலிஷ் போடுவதுபோன்ற காட்சியே அது. இவர், புகைப்படம் எடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதோடு நைஸ்ஃபோருடன் இணைந்து, 1833-ல் ஒரு கேமராவைக் கண்டுபிடித்தார். அது, அதற்கு முன் பயன்படுத்திய கேமராவைவிட புதிய வசதிகளோடு  இருந்தது. இவரின் பெயராலேயே ‘டாகுவேரியோ’ என்று அதற்குப் பெயரிட்டார்கள். ஒரு புகைப்படம் எடுக்க 30 நிமிடங்கள் ஆன நிலையை மாற்றி, ஒரு நிமிடத்திலேயே படம் எடுக்கவைத்தார். இவை எல்லாமே கறுப்பு வெள்ளைப் படங்களே. இயற்பியல் அறிஞர் ஜேம்ஸ்கிளர்க் மேக்ஸ்வெல் (James clerk maxwell) என்பவர், 1861-ம் ஆண்டில் முதன்முதலாக அழியாத வண்ணப் புகைப்படத்தை எடுத்தார். கேமராக்களில் தாமிரத் தகடுகளைப் பயன்படுத்தி வந்ததற்கு மாற்றாக, ஜார்ஜ் ஈஸ்ட்மேன் (George Eastman) ஃபிலிமைப் பயன்படுத்தும் கேமராக்களை உருவாக்கினார். 1888-ல் கொடக் கேமராவைத் தயாரித்த இவர், அதில் 100 படங்கள் எடுக்கலாம் என்று நிரூபித்தார். பலர் அதை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதற்கு பிறகு, பலவித மாற்றங்கள் அடைந்து, இன்று டிஜிட்டல் கேமராவில் படங்கள் எடுக்கிறோம்.

மைடியர் ஜீபா!

‘சரித்திரம் காட்டும் புகைப்படங்கள்’ எனும் நூலை ஏற்காடு இளங்கோ எழுதி இருக்கிறார். அதில், கேமராவின் வரலாறு, புகைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் உள்ளிட்ட பல செய்திகள் சுவையாக உள்ளன. http://freetamilebooks.com/htmlbooks/history-in-pictures/Saritharam%20Kaddum%20Pugaipadangal.html என்ற இணையதளத்தில் மின் நூலாக, இலவசமாகப் படிக்கலாம். இன்னும் விரிவான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.’’ 

மை டியர் ஜீபா, சுட்டி விகடன்,757, அண்ணா சாலை,  சென்னை-600 002