Published:Updated:

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!
பிரீமியம் ஸ்டோரி
News
மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

‘‘ஹலோ ஜீபா... கிரிக்கெட் போட்டிகளில் சிக்ஸர்களாக அடித்துத் தூள் கிளப்பும் ரோஹித் சர்மா, எப்போது இந்திய அணிக்கு வந்தார்?’’

- வி.சஞ்சீவ், பல்லடம்.

‘‘சஞ்சீவ், உனக்கு ரோஹித் சர்மாவைப் பிடிக்குமா? எனக்கும்தான். ரோஹித், மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர். பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் தொடர்ந்து மூன்று சதங்களை அடித்து, மும்பையின் பிரபலமான பயிற்சியாளர் தினேஷ் லாட்டின் கவனத்தைத் தன் பக்கம் திரும்பவைத்தார். அதுவே, மும்பை அணியின் 20 வயதுக்கு உட்பட்டோர் அணியில் ஆடவைத்தது. தொடர்ந்து 17 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். பிறகு, 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பையில் பங்கேற்று, இலங்கைக்கு எதிரான போட்டியில்          78 ரன்களைக் குவித்து, ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, மும்பை அணிக்காக ரஞ்சி போட்டிகளில், குஜராத் அணிக்கு எதிராக 205 ரன்களை எடுத்து, தனது திறமையை நிரூபித்தார். 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை ஆட்டத்தில் இடம்பிடித்து, வலிமையான தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 40 பந்துகளில்    2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களை அடித்து, அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

மைடியர் ஜீபா!

2013-ம் ஆண்டு, பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 158 பந்துகளில் 16 சிக்ஸர்களும் 12 பவுண்டரிகளோடு 209 ரன்கள் அடித்து அசரவைத்தார். இதுதான் ரோஹித் சர்மாவின் உச்சபட்ச ஆட்டம் என நினைத்தவர்களுக்கு, இல்லை என அடுத்த ஆண்டே பதில் சொன்னார். இலங்கைக்கு எதிராக, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியை உலகக்் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதில், ரோஹித் சர்மா 264 ரன்களைக் குவித்து உலக சாதனை செய்தார். இன்று வரை அந்தச் சாதனையை வேறு எவராலும் முறியடிக்க முடியவில்லை. சமீபத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் மோதிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் பெரிய தோல்வியைச் சந்தித்தது.  ஆனாலும் அந்தத் தொடரில் 171, 124, 99 என்ற தனது அதிரடி ஆட்டத்தால் ஆறுதல் தந்தார். இதுவரை 148 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 5,000 ரன்களைக் கடந்துவிட்டார். இதில்,               10 சதங்களும் 28 அரை சதங்களும் அடங்கும்.     16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 சதங்களை அடித்துள்ளார். 47 டி-20 போட்டிகள் மூலம் 1 சதம், 9 அரைசதங்கள் எனப் பிரமிக்கவைக்கிறது இவரது சாதனைப் பட்டியல். 2015-ம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் அணி, இவரின் தலைமையில் ஆடிய மும்பை இண்டியன்ஸ், இன்னும் பல அதிரடிகள் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு புகழ்சேர்க்க, ரோஹித் சர்மாவை வாழ்த்துவோம்.’’

“டியர் ஜீபா... சீனப் பெருஞ்சுவர் யாரால், எதற்காகக் கட்டப்பட்டது?”

- டி.ரித்திஸ்வரன், வாழையத்துப்பட்டி, தேனி.

மைடியர் ஜீபா!

“சீனப் பெருஞ்சுவர், கி.மு 220-200 காலகட்டத்தில், சீனப் பேரரசர் ‘சின் சி ஹுவாங்’ என்பவரால் கட்டப்பட்டது. இதன் பணிகள், கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே பல மன்னர்களால் தொடங்கப்பட்டது. இந்த மாபெரும் சுவர், அந்தப் பகுதியில் கிடைக்கும் மண், சரளைக்கல் போன்றவற்றால்  எழுப்பப்பட்டது. போர் தொடுக்கும் அண்டை நாடுகளிடமிருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்றிக்கொள்வதுதான் இதன் முக்கிய நோக்கம். வாள், ஈட்டியால் சேதப்படுத்த முடியாத அளவுக்கு வலுவானதாக இந்தச் சுவரை உருவாக்கினார்கள். குறிப்பாக, குதிரைப் படை இந்தச் சுவரைத் தாண்டி வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். உலக அதிசயங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் சீனப் பெருஞ்சுவரின் நீளம், 21,196 கிலோமீட்டர்.’’

‘‘ஹலோ ஜீபா... சிக்கிம் மாநிலத்தின் விலங்கான சிவப்பு பாண்டாவின் தாயகம் எது?’’

- எஸ்.லோகநாதன், ஏ.அசோக், பெரியநாயக்கன்பாளையம்.

மைடியர் ஜீபா!

‘‘சிவப்பு பாண்டா, பாலூட்டி விலங்கு. நாம் பார்க்கும் பூனையைவிட கொஞ்சம் பெரியது. இதை, ‘கரடிப் பூனை’ என்றும் ‘ஃபயர் பாக்ஸ்’ என்றும் அழைக்கின்றனர். இதன் பிறப்பிடம், இமயமலை மற்றும் அதையொட்டிய சீனாவின் பகுதிகள். இது, சைவ உணவுகளைத் தின்னும். மூங்கில் குருத்துகளை விரும்பிச் சாப்பிடும்.’’

‘‘ஹாய் ஜீபா, இந்தியாவில் இதுவரை எத்தனை பேர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்?’’

- எம்.சுபாஷ், ஜி.ஹரிஹரன், மேட்டுப்பாளையம்.

மைடியர் ஜீபா!

‘‘நமது நாட்டுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவர், ரவீந்திரநாத் தாகூர். 1913-ம் ஆண்டு, இலக்கியப் பிரிவில் பெற்றார். அவரைத் தொடர்ந்து, 1930-ம் ஆண்டு அறிவியல் பிரிவில் சர் சி.வி.ராமனும், 1979-ல் அமைதிக்காக அன்னை தெரசாவும் பரிசு பெற்றார்கள். 1998-ம் ஆண்டு, பொருளாதாரத்துக்காக அமர்த்தியாசென் மற்றும் 2014-ல், அமைதிக்காக கைலாஷ் சத்யார்த்தியும் நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். தவிர, இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் குடியேறியவர்கள் பட்டியலில், 1968-ம் ஆண்டு  ஹர் கோவிந்த் கொரானா (மருத்துவம்), 1983-ல் சுப்பிரமணியன் சந்திரசேகர் (இயற்பியல்), 2001-ல் வி.எஸ்.நைப்பால் (இலக்கியம்), 2006-ல் முகம்மது யூனூஸ் (அமைதி), 2009-ல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வேதியியல்) நோபல் பரிசைப் பெற்றனர். இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர் பட்டியலில், 1907-ல் ருட்யார்ட் கிப்ளிங் (இலக்கியம்), 1902-ல் ரொனால்டு ராஸ் (மருத்துவம்), 1989-ல் தலாய் லாமா (அமைதி) ஆகியோர் நோபல் வென்ற நாயகர்கள்.’’

மை டியர் ஜீபா,சுட்டி விகடன்,757, அண்ணா சாலை,  சென்னை-600 002