Published:Updated:

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!
பிரீமியம் ஸ்டோரி
News
மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

‘‘ஹலோ ஜீபா... 2G, 3G, 4G என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன?’’

- டி.மதுபாலா, வடகடல், அரியலூர்.

வெரிகுட் மதுபாலா, தினசரி செய்திகளில் அப்டேட்டாக இருக்கிறாய் எனத் தெரிகிறது. Generation என்பதன் சுருக்கமே, G. இது, கம்பிகள் இல்லாத செல்பேசிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறிக்கிறது. 1G-ல், தொலைபேசியில் பேசிக்கொள்வதைப் போல, குரலை மட்டும் கேட்க முடிந்தது. செய்திகளை அனுப்புவதில்  சிரமங்கள் இருந்தன. 2G வந்த பிறகு, எஸ்.எம்.எஸ் அனுப்புவது, இணையத்தை 144 Kbps வேகத்தில் பயன்படுத்துவது என மாறியது. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியே 3G. இதன் வேகம், 144 Kbps-ல் இருந்து 2 Mbps என மாறியது. இணையத்தில் இருந்து விரைவாக டவுண்லோடு செய்யலாம். 3G செல்போனில், வீடியோ கால் மூலம் முகம் பார்த்து பேசிக்கொள்ளலாம். டி.வி சேனல்களைப் பார்க்கலாம்.  அடுத்து, 4G வந்துவிட்டது. இதில், 100 Mbps வேகத்தில் டவுண்லோடு செய்வது உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.’’

‘‘ஹாய் ஜீபா... உலகின் முதல் கார் (CAR) யாரால், எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?’’

- டி.ஸ்ரீராம், எஸ்.ஆர்.வி.உ.நி.பள்ளி, பெரியநாயக்கன்பாளையம்.

மைடியர் ஜீபா!
மைடியர் ஜீபா!
மைடியர் ஜீபா!

‘‘கார் பற்றி தெரிந்துகொள்ளும் உன் ஆர்வத்துக்கு வாழ்த்துகள் ஸ்ரீராம். ஜெர்மனியைச் சேர்ந்த ‘கார்ல் பென்ஸ்’ என்பவர் உருவாக்கியதுதான், உலகின் முதல் மோட்டார் கார். ‘பென்ஸ் பேட்டென்ட் மோட்டார் வேகன்’ என்பது அதன் பெயர். 1879-ம் ஆண்டில், குதிரைகள் பூட்டப்படும் பழைய வண்டியின் முன் பக்கத்தில் சக்கரம் ஒன்றைச் சேர்த்தார். அதில், இவர் வடிவமைத்த ஒரு சிலிண்டர், 2 ஸ்ட்ரோக் பெட்ரோல் இன்ஜினைப் பொருத்தி, மோட்டார் காராக மாற்றினார். இந்த காரின் பவர், 0.75bhp. இவர் உருவாக்கிய இந்த காருக்கு, 1886-ம் ஆண்டு காப்புரிமை பெற்று, அறிமுகம் செய்தார். ஆனால், இதில் அதிக தூரம் செல்ல முடியாததாக இருந்தது. பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ், இதில் உள்ள பிரச்னைகளுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்துகொண்டே 194 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டார். பெர்த்தாவின் அந்தப் பயணமே, அந்த காரைப் புகழ்பெற வைத்தது. பென்ஸ் நிறுவனம் தொடங்குவதற்கான நம்பிக்கையையும் அளித்தது.

பென்ஸ் காருக்கு முன், நீராவியால் இயங்கும் கார் ஒன்று உருவாக்கப்பட்டது. 1770-ம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த நிக்கோலஸ் ஜோசப் க்யூனெட் (Nicolas Joseph Cugnot) உருவாக்கிய மூன்று சக்கரங்கள் கொண்ட வண்டியில் நீராவி இயந்திரமும் இருக்கும். மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த வண்டியை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நிறுத்தி, எரிபொருளை நிரப்ப வேண்டும். இப்படி ஆரம்பித்துதான், இன்று நவீன வசதிகளோடு அதிவேகமாகச் செல்லும் கார்கள் வரை வளர்ந்துள்ளது.’’

‘‘டியர் ஜீபா, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் எப்போது கட்டப்பட்டது?’’

- எஸ். கீர்த்தி, சென்னை-12.

மைடியர் ஜீபா!

‘‘என்னைப் போலவே உனக்கும் கிரிக்கெட்  என்றால் செம ஆர்வம் போலிருக்கே கீர்த்தி. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (Melbourne Cricket Ground -MCG), உலக அளவில் உள்ள அனைத்து வகை விளையாட்டு மைதானங்களில் பத்தாவது பெரிய மைதானம். ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மைதானம். இங்கே, ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து, போட்டியைப் பார்க்கலாம்.  இது, ஆஸ்திரேலியாவின் கிழக்கு மெல்போர்னில் உள்ள யாரா பூங்காவில் (Yarra Park) அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் 1877-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. அடுத்து, 1971 ஜனவரி 5-ல் முதல் ஒருநாள் போட்டி நடந்தது. கடந்த ஆண்டு (மார்ச் 29, 2015) ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே நடந்த உலகக் கோப்பை இறுதிச் சுற்றுப் போட்டியைக் காண சுமார் 93,000 ரசிகர்கள்  வந்திருந்தார்கள்.’’ 

‘‘ஹாய் ஜீபா.... சில நேரங்களில் நமது உள்ளங்கையில் அரிப்பது போல உணர்ச்சி ஏற்படுவது ஏன்?’’

- கோ.அரிகாளீஸ்வரன், எம்.கிருஷ்ணாபுரம், வேலூர்.

மைடியர் ஜீபா!

‘‘வானிலை மாறும்போது, சருமம் வறண்டுபோவதால், சிலருக்கு உள்ளங்கையில் அரிப்பு ஏற்படலாம். அதிக வியர்வை, பூஞ்சை அல்லது கிருமித் தொற்றுகளால்   அரிப்பு ஏற்படலாம். ஒரு சிலருக்கு, அவர்கள் பயன்படுத்தும் சோப், டிடர்ஜென்ட்களில் உள்ள கெமிக்கல் அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் அரிப்பு உண்டாகலாம். சோப்பை மாற்றினால், அரிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். வேறு சிலருக்கு, சில வகை உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்திவிடும். இவர்கள், அரிப்பை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அரிப்பு தொடர்ந்து இருந்தால், சொறி, சிரங்கு, சோரியாசிஸ் போன்ற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.’’

‘‘ஹலோ ஜீபா... மியான்மர் நாட்டுக்கு வேறு பெயர் இருந்ததாமே, அது என்ன?’’

- ஜெ.சுரேஷ், திண்டுக்கல்.

மைடியர் ஜீபா!

‘‘ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் நாடு, மியான்மர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று. 676,578 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட இந்த நாடு, இதற்கு முன் ‘பர்மா’ என்று அழைக்கப்பட்டது. அப்போது இதன் தலைநகருக்கு, ‘ரங்கூன்’ என்று பெயர். 1989-ம் ஆண்டு ‘மியான்மர்’ என்றும், தலைநகரமான ரங்கூன் என்பது ‘யங்கோன்’ என்றும் மாற்றப்பட்டது. பிறகு, 2006-ம் ஆண்டு மியான்மரின் தலைநகராக, நைப்பிதௌ (Naypyidaw) நகரம் மாற்றப்பட்டது.  சர்வாதிகார அடக்குமுறைகளால், மக்கள் அதிகமான தொல்லைகளைச் சந்திக்கும் நாடுகளில் மியான்மரும் ஒன்று. மியான்மர் என்றதும் சமீபத்தில் தேர்தலின் மூலம் ராணுவ ஆட்சியை அகற்றி, மக்கள் ஆட்சியை அமைத்திருக்கும் ஆங் சாங் சூயி என்ற பெயர் நினைவுக்கு வருமே, அந்த அமைதிப் போராளியின் நாடுதான் மியான்மர்.’’  

மை டியர் ஜீபா, சுட்டி விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-600 002