
மைடியர் ஜீபா!


‘‘ஹலோ ஜீபா... இந்திய கால்பந்து அணியில் கலக்கும் சுனில் சேத்ரி பற்றி டீடெய்ல் ப்ளீஸ்”
- எஸ்.ஜீவா, கே.பாலகிருஷ்ணன், பெரியநாயக்கன்பாளையம்.

‘‘உன் விருப்பமான கால்பந்து விளையாட்டு வீரர் சுனில் சேத்ரி, 1984-ம் ஆண்டு செகந்திராபாத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் கே.பி சேத்ரி, சுசீலா சேத்ரி இருவருவமே கால்பந்து விளையாட்டு வீரர்கள். தந்தை, இந்திய ராணுவத்தின் கால்பந்து அணி வீரர். சுனிலின் அம்மா மற்றும் சகோதரிகள், நேபாள மகளிர் கால்பந்து அணிக்காக விளையாடியவர்கள். அதனால், சுனிலுக்கு இயல்பாகவே கால்பந்து மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. பள்ளியில் படிக்கும்போதே கலக்கத் தொடங்கிவிட்டார். மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் கிளப், ஜெசிடி எஃப்.சி, டெம்போ எஸ்.சி போன்ற கால்பந்துக் கழகங்களுக்காக ஆடியுள்ளார். தனது துடிப்பான ஆட்டத்தால், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வதில் சுனில் முதன்மையானவர். இந்தியக் கால்பந்து அணியின் தற்போதைய கேப்டனும் இவரே. 2007, 2009 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் நடந்த நேரு கோப்பைப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். இதுவரை 50 கோல்களை அடித்து, முதல் தரப் போட்டிகளில் 50 கோல்கள் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார்.’’
‘‘டியர் ஜீபா... மின்தூக்கியில் (Lift) பயணம் செய்யும்போது திடீரென நிலநடுக்கம் வந்தால் எப்படி தப்பிப்பது?’’
- எஸ்.சக்திபாலன், வேலாண்டிபாளையம்.

‘‘நிலநடுக்கம் ஏற்படும் நேரத்தில் லிஃப்ட்டில் சிக்கிவிட்டால், அங்கே இருக்கும் தொலைபேசி மூலம் எமர்ஜென்ஸி எண்ணுக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது ஆபத்தை அறிவிக்கும் அலாரத்தை ஒலிக்கச்செய்து, அந்தக் கட்டடத்தின் செக்யூரிட்டிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். செக்யூரிட்டி மூலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிந்ததும் அவர்கள் வருவார்கள். லிஃப்ட் தளத்தில் நின்றுவிட்டால், தீயணைப்புத் துறையினர் கருவி மூலம் கதவை கட் பண்ணி ஆட்களை மீட்பார்கள். இரண்டு மாடிகளுக்கு இடையே சுவர்ப் பகுதியில் சிக்கிக்கொண்டால், மேலே உள்ள கன்ட்ரோல் பகுதி வழியாக எக்ஸ்டென்ஷன் லேடரைப் பயன்படுத்தி, ஃபேனைத் திறந்துவிட்டு, உள்ளே சிக்கியவர்களை மீட்பார்கள். அதுபோன்ற ஆபத்தான சூழலில் பதற்றத்தில் அங்கும் இங்கும் நகராமல், மன தைரியத்துடன் இருப்பது நல்லது. தீ விபத்து, நிலநடுக்கம் ஏற்படும்போது, லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.’’
‘‘ஹாய் ஜீபா... எனக்கு பரதநாட்டியம் என்றால் பிடிக்கும். அந்த நடனக்கலை உருவான விதம் பற்றி சொல்லேன்?’’
- ம.பூபாலன், சோமனூர்.

‘‘தென்னிந்தியாவுக்கே உரிய புகழ்பெற்ற நடன வகை, பரதநாட்டியம். இது, பற்பல ஆண்டுகளாக ஆடப்பட்டு வருகிறது. பரத முனிவரால் உருவாக்கப்பட்டது என்பதால், ‘பரதநாட்டியம்’ என்று பெயர் வந்ததாகக் கூறுவர். கோயில்களில் ஆடப்பட்டுவந்த தேவதாசி நடனத்தின் நெறிப்படுத்தப்பட்ட வடிவமே பரதம் எனவும் கூறுவர். ஆண் பெண் இருபாலராலும் ஆடப்படுகின்ற நடனம். இதில் காட்டப்படும் அசைவுகளுக்கு ‘அடவு’ என்று பெயர். நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளின் துணையோடு பரதம் ஆடுவார்கள். பரதத்தில், ‘பந்தநல்லூர் பாணி’, ‘வழுவூர் பாணி’, ‘தஞ்சாவூர் பாணி’, ‘மைசூர் பாணி’, ‘காஞ்சிபுரம் பாணி’ போன்ற பாணிகள் உள்ளன. ருக்மணி தேவி அருண்டேல், மிருணாளினி சாராபாய், அனிதா ரத்னம், பத்மா சுப்ரமணியம் உள்ளிட்ட கலைஞர்கள், பரதநாட்டியத்தில் புகழ்பெற்றவர்கள்.’’
‘‘டியர் ஜீபா... டிஸ்கவரி சேனலில் வரும் பியர் க்ரில்ஸ் (Bear grylls) தனது சாகசத்தை ஆரம்பித்தது எப்படி?’’
- ஏ.தினேஷ், கோயம்புத்தூர்.

‘‘பியர் க்ரில்ஸைப் போல உனக்கும் சாகசம் பிடிக்குமா தினேஷ்? 1974-ம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த இவரின் இயற்பெயர், எட்வர்ட் மைக்கேல் க்ரில்ஸ். இவரின் அக்கா ‘டெடி பியர்’ என்று செல்லமாக அழைக்க, அதுவே நிலைத்துப்போனது. சின்ன வயதில் விலங்குகள் என்றால் பயம். நாயைத் தூரத்தில் பார்த்தாலே ஓடிவிடுவார். ஒருநாள் இவரின் மூக்கை ஒரு நாய் கடித்துவிட்டது. அதற்கு சிகிச்சை எடுத்ததும், விலங்குகள் பற்றிய பயம் போய்விட்டது. சின்ன வயதில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது வழி மறந்துவிட, பியர் சொன்ன வழியில்தான் வீட்டை அடைந்தார்கள். அதுதான் இவரின் முதல் சாகசப் பயணம். தனது எட்டாவது வயதில் புகைப்படத்தில் எவரெஸ்ட் சிகரத்தைப் பார்த்த கணமே, அதில் ஏற முடிவுசெய்தார். 1994-ம் ஆண்டு பிரிட்டன் ராணுவத்தில் சேரும் முயற்சி தோல்வியடைந்தது. 1996-ம் ஆண்டு, 16,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதிக்கும் சூழல். 3,000 அடியில் விரிய வேண்டிய பாராசூட் விரியவில்லை. கீழே விழுந்து, நடக்கவே முடியாத அளவுக்கு அடிபட்டது. ஆனாலும், ‘எவரெஸ்ட் சிகரத்தில் நிச்சயம் ஏறுவேன்’ என நம்பினார். மெள்ள உடல் தேறி, ஸ்காட்லாந்து மலைப்பகுதியில் பயிற்சி எடுத்தார். 1998 மே 26-ம் தேதி காலை 7:22- க்கு எவரெஸ்ட்டின் உச்சியைத் தொட்டு, தன் கனவுக்கு உயிர் தந்தார். அட்லாண்டிக், ஆர்ட்டிக் பெருங்கடல்களை நீந்திக் கடந்தார். மீண்டும் எவரெஸ்ட் உச்சியைப் பார்க்கும் ஆவல் பியருக்கு வந்தது. இந்த முறை பாராஜெட் பாரா மோட்டார் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் பறக்கும் அபாயகரமான முயற்சி. 29,500 அடி உயரத்தில், மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் குளிரில், ஆக்ஸிஜன் மிகக் குறைவான அபாயச் சூழலில் எவரெஸ்ட் சிகரப் பகுதியில் பியர் பறக்க, அது சேனல் 4, டிஸ்கவரி சேனல்களால் படம்பிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஹீரோவானார். தன் குழுவினருடன் சஹாரா பாலைவனத்தைக் கடந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்றது. Born Survivo எனும் நிகழ்ச்சியை சேனல் 4 ஒளிப்பரப்பியது. காடு, ஏரி, மலைகளில் இவரது சாகசப் பயணங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். இவரின் வெற்றிக்குப் பின் ஒருவர் இருக்கிறார். இவரின் பயணத்தை ஒரு நொடிகூட விடாமல் ஒளிப்பதிவு செய்யும் சைமன் ரேதான் அவர். இவர் செய்யும் அத்தனை சாகசத்தையும் கேமராவுக்குப் பின் நின்றபடி சைமனும் செய்கிறார் இந்த இருவர் கூட்டணிதான் நமக்கு அருமையான செய்திகளைத் தருகிறது.
‘‘ஹாய் ஜீபா... கடல் சிங்கங்கள் எங்கு வாழ்கின்றன?’’
- ப.கோ.சிரஞ்சீவி, பி.ஜி.ரமணன், பல்லடம்.

‘‘கடல் சிங்கம், கடலில் வாழ்பவைதான். பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. இதில், ஏழு வகையான பிரிவுகள் உள்ளன. பெண் கடல் சிங்கத்தைவிட ஆண் கடல் சிங்கம் உருவத்தில் பெரியதாக இருக்கும். பற்கள், மீசை போன்றவை பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருப்பதால், இந்தப் பெயர். டால்ஃபின்களைப் போலவே இவையும் பந்துகளை வைத்து விளையாடுவது மிக அழகாக இருக்கும். கடல் சிங்கம் விளையாடும் வீடியோவை இணையத்தில் பார்க்க https://www.youtube.com/watch?v=IK-oqZ8g_HU’’
